புதன், 19 அக்டோபர், 2016

பொது சிவில் பொல்லாதது


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
பொது சிவில் பொல்லாதது

أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنْزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا  - الأنعام: 114
عَنْ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كِتَابُ اللَّهِ فِيهِ خَبَرُ مَا قَبْلَكَمْ، وَنَبَأُ مَا بَعْدَكُمْ، وَحُكْمُ مَا بَيْنَكُمْ، هُوَ الْفَصْلُ لَيْسَ بِالْهَزْلِ، ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔» - مصنف ابن أبي شيبة
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      நீண்ட நெடுங்காலமாக அரசியல் மற்றும் சமுதாய தளத்தைத் தொடர்ந்து அதிர வைத்து வரும் ஒரு விவாதக் கரு பொது சிவில்.
      மத்தியில் ஆளும் பஜக அரசு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததிலிருந்தே பல்வேறு வகையிலும் இஸ்லாமிய வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வந்தது. அதன் ஒரு தொடர்ச்சியாக இப்பொழுது பொது சிவில் சட்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
      சில பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் தலாக்நடைமுறை குறித்து தாக்கல் செய்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசின் நிலை என்னவென்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அதாவது முஸ்லிம்கள் திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமையில் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதன் முதல் படியாக இந்திய சட்ட ஆணையம் பொது மக்களின் கருத்தறிய என்று சொல்லி 16 கேள்விகள் கொண்ட ஒரு வினா பட்டியலை (Questionnaire) வெளியிட்டுள்ளது. இதில் உள்ள ஒரேயொரு கேள்வியைத் தவிர ஏனைய கேள்விகள் அனைத்தும் குதர்க்கம் நிறைந்தவையாக உள்ளது. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தை பாதிக்கும் ஒரு பிரச்சனைக்கு இது போன்ற ஒரு கேள்வி பட்டியல் மூலம் கருத்தறிய முயலுவது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளை பறிக்கும் ஒரு சதித் திட்டமே.
இதுவரையிலும் கடைபிடிக்கப்படும் சட்ட நடைமுறை.
     இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் பரப்பவும் உரிமை அளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள இந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தினர் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை முதலியவற்றில் தத்தமது தனியார் சட்டங்களை பின்பற்றி வருகின்றார்கள்.
அந்த வகையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் காலங்காலமாக திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை முதலியவற்றில் ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தை பின்பற்றி வருகிறோம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக நீண்ட காலமாக பொது சிவில் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வந்துள்ளது. முஸ்லிம்கள் திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதை தடுக்க வேண்டும் என்பதே அவர்களது நீண்ட கால கனவு.
பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிப்பவர்கள் கூறும் காரணங்கள் நகைப்புக்கும் நையாண்டிக்கும் உரியது.
அவர்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளின் 44-ஆவது பிரிவு, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதைப் பரிந்துரை செய்தள்ளது எனவே பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம்
நாம்
வழிகாட்டு நெறிமுறைகளைப் பொருத்த வரை நீதிமன்றங்கள் இதை வலியுறுத்த முடியாது. வழிகாட்டு நெறிமுறைகளை நிறைவேற்றுமாறு வழக்கும் போட முடியாது. வழிகாட்டும் நெறிமுறைகளின் அதி முக்கியமான வழிகாட்டுதல்கள் பல அரசுகளால் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டு வரும் வேளையில், பொது சிவில் சட்டம் மட்டும்தான் வழிகாட்டி நெறிகளில் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி, தேச ஒற்றுமை என்ற கண்ணாடியை உடைத்து நொறுக்க முயற்சிக்கின்றனர்.
 
இந்திய அரசியல் சாசனத்தின் 36 முதல் 51 வரை உள்ள வழிகாட்டும் நெறிமுறைகளில், 47-ஆவது பிரிவு போதையூட்டும் மது வகைகள், உடலுக்குக் கேடு செய்யும் நச்சுத்தன்மை பொருந்திய பொருள்கள் ஆகியவற்றை அரசு தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்த அரசுகள் இதைச் செய்வதுண்டா? அரசே மதுபானத்தை விற்கும் அவலம் அல்லவா இங்கே நடக்கிறது. அதுபோன்ற ஒரு வழிகாட்டும் நெறிமுறைதான் பொது சிவில் சட்டம் குறித்தது ஆகும்.
எனவே வழிகாட்டு நெறிமுறைகளில் சொல்லப்பட்ட விஷயத்தை அமுல் படுத்த ஆர்வமிருந்தால், [பொது சிவில் தவிர்த்து] நாட்டுக்கும் மக்களுக்கும்  பயனுள்ள/அவசிமுள்ள வேறு நிறைய விஷயங்கள் உள்ளன அவைகளை நடைமுறைப்படுத்தட்டுமே!
அவர்கள்
குற்றவியல் சட்டம் இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவாகத்தானே இருக்கிறது அதை மட்டும் முஸ்லிம்கள் ஏற்கிறார்கள் எனவே இதையும் ஏற்கவேண்டும்.
நாம்
1-   இஸ்லாமிய அரசு/ஆட்சியாளர்கள் இல்லாத சூழலில் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்துவதில்லை என்பதால் அதில் இந்தியாவின் குற்றவியல் சட்டத்தை நாங்கள் ஏற்கிறோம். எனவே அதை [குற்றவியல்] ஏற்றதால் இதையும் [குடும்பவியல்] ஏற்க வேண்டும் என்று கூறுவது நியாயமில்லை.
ஒரு கால் ஊனமுள்ளவன் ஊன்று கோலால் நடப்பதைப்பார்த்து உனக்குத்தான் ஒரு கால் இல்லாமல் ஊன்று கோலால் நடக்க முடிகிறதே எனவே இன்னொரு காலையும் உடைக்கிறேன் ஏற்றுக்கொள் என்று கூறுவதுபோல் வேடிக்கையானது.
2-   திருமணம் விவாகரத்து சொத்து பங்கிடல் போன்றவை ஒவ்வொன்றும் முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் நடத்தி முடிப்பவை  இன்னொரு மதத்தவருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை பாதிப்பும் இல்லை.
ஆனால் குற்றவியல் அப்படியல்ல. ஒரு குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்&குற்றவாளி இரண்டு பேருமே முஸ்லிம்களாகவும் இருக்கலாம். இருவருமே முஸ்லிமல்லாதவராகவும் இருக்கலாம். ஒருவர் முஸ்லிமாகவும் இன்னொருவர் முஸ்லிமல்லாதவராகவும் இருக்கலாம்.
3-   சிவில் சட்டங்களுக்கும், கிரிமினல் சட்டங்களுக்குமிடையில் மிகப்பெரும் வேறுபாடு உண்டு. கிரிமினல் விஷயங்கள் நேரடியாக நீதிமன்றங்களால் தீர்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால், சிவில் விஷயங்கள் அப்படியல்ல. சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்கள் மன்றத்திலும் தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறானென்றால் அவனுடைய பிரச்சினையை எவ்விதத்திலும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை அரசாங்கம் அனுமதிக்கவும் செய்யாது.
ஆனால், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சிவில் விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதை நீதிமன்றத்துக்கு வெளியிலும் தீர்த்துக்கொள்ள முடியும். இதை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது. மேலும், இது போன்ற சிவில் விவகாரங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள் விவகாரங்கள். முஸ்லிம்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்படும் எந்த விஷயமும் மற்றவர்களை, மாற்று மதத்தினரை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.
அவர்கள்
இந்தியா என்பது ஒரே நாடு எனவே இந்தியர்கள் [எம்மதத்தினராக இருந்தாலும்]  அனைவருக்கும் சமமான ஒரே மாதிரியான சிவில் சட்டம்தானே இருக்க வேண்டும்.
 நாம்
இந்தியா என்பது ஒரே நாடு எனவே இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து அனைத்து மாநில தலைநகரங்களுக்கும் ரயில் ஒரே நேரத்தில் புறப்பட வேண்டும் ஒரேவேகத்தில் செல்லவேண்டும் ஒரே நேரத்தில் போய்ச் சேரவேண்டும் மேலும் ஒரே திசையில்தான் செல்ல வேண்டும் என்று கூறுவது எத்தகைய குதர்க்கமோ அத்துனை குதர்க்கம் நிறைந்த தவறான வாதம் அது.
இது எப்படி நடைமுறை சாத்தியமில்லாத விஷயமோ அது போலவே பொது சிவில் சட்டமும் சாத்தியமில்லாதது. 
பாரபட்சமான கிரிமினல் சட்டம்
கிரிமினல் சட்டங்களே ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றன. அனைவருக்கும் ஒரே மாதிரியான கிரிமினல் சட்டம் வரட்டும் பார்க்கலாம் அதுதான் இந்த நாட்டுக்கு மிக அவசியம்.
ஒரு மாநிலத்தில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தும். இது பாரபட்சம் இல்லையா?
இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான சட்டங்கள்; வித்தியாசமான நடைமுறைகள் உள்ளன.
ஒரே செயலை இருவர் செய்கின்றனர். ஆனால் ஒருவன் செய்தது குற்றம். மற்றவன் செய்தது குற்றம் இல்லை. இப்படி மாறுபட்ட கிரிமினல் சட்டம் இருப்பதற்குத் தான் வெட்கப்பட வேண்டும். ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு நாட்டு மக்களைப் பாரபட்சமாக நடத்துவது பற்றியே அக்கறை செலுத்த வேண்டும்.
மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பில் வித்தியாசங்கள் உள்ளதா இல்லையா?
தமிழ்நாட்டில் ஒருவர் கார் வாங்கினால் அவர் அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரி கட்டவேண்டும். ஆனால் அருகில் உள்ள பாண்டிச்சேரிக்காரர் அங்கு அதே காரை வாங்கினால் அவர் பத்தாயிரம் வரி கட்டினால் போதும். ஒரே பொருளுக்கு குடிமக்களிடம் பாரபட்சமாக வரி விதிப்பதற்குத்தான் வெட்கப்பட வேண்டும். இதை மாற்றுவதற்குத்தான் துடிக்க வேண்டும்.
இப்படி வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதாம். நான்கே நான்கு விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் கட்டளைப்படி நடந்தால் மட்டும் நாட்டின் கட்டுக்கோப்பு குலைந்து விடுமாம். இப்படிக் கூறக் கூறுபவர்கள் அறிவுஜீவிகளா?
பொது சிவிலில் உள்ள பொல்லாத அம்சங்கள் வருமாறு
·         எந்தவொரு ஆணோ,பெண்ணோ அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணக் கொள்கைக்கும் எதிராக மதங்கள் வழங்கும் சலுகைகளை நிராகரித்தல்.
·         ஆண், பெண் இருவரின் ஒப்புதலும் இருப்பின் நீதிமன்றத்தில் மணவிலக்கு பெறும் உரிமை.
·         கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை.
·         பருவம் வராத சிறுவர் சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட வேறு யாரையேனும் கூட நியமிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம்.
·         சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை.
·         மணமான அல்லது மணமாகாத எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தையொன்றைத் தத்து எடுத்து கொள்ள சட்ட பூர்வமான உரிமை.
மூன்று குழுக்களாக இந்தியர்கள்
மதத்தின் அடிப்படையிலான வெவ்வேறு தனிநபர் சட்டங்கள் தேசத்தின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்று ஒருமைப்பாட்டின் பெயரால் கேள்வி எழுப்புகிறது பாரதீய ஜனதா. இடையிடையே பெண்ணுரிமை பற்றிப் பேசுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.
முஸ்லிம்களோ எமக்கு இறைவன் வகுத்தளித்த சட்டங்களை மாற்றுவதற்கு எந்த மனிதருக்கும் உரிமையில்லைஎன்கின்றனர். பொதுச் சட்டம் என்ற பெயரில் இந்துச் சட்டத்தை அனைவரின் மீதும் திணிக்கும் சதியே இது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொது சிவில் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்குரிய இணக்கமான சூழ்நிலை ( குறிப்பாக இந்து -முஸ்லிம் உறவில் ) இன்னும் உருவாகவில்லையென்றும் அத்தகைய சூழ்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
பெரும்பான்மையோர் வரவேற்றாலும் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள்.
                    காரணம்1
இதுபோன்ற விஷயத்தில் பெரும்பான்மையினரின் கருத்துக்கு செவிசாய்க்க எங்களுக்கு அனுமதி இல்லை.
وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ - الأنعام: 116
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். அல்-குர்ஆன் 6:116.
காரணம் 2
முஸ்லிம்களாகிய எங்களுக்கு தொழுகை நோன்பு போன்ற வணக்கவியல் தொடர்பாக இஸ்லாம் வழிகாட்டி இருப்பது போல வாழ்வியல் தொடர்பான திருமணம் விவாகரத்து போன்றவைகளிலும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இறைச்சட்டத்தை கைவிட்டு இன்னருவனின் சட்டத்தை பின்பற்ற எங்களுக்கு அவசியமுமில்லை அனுமதியுமில்லை.

أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنْزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا  - الأنعام: 114
 (நபியே! கூறும்:) அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான். அல்-குர்ஆன் 6:114. 
عَنْ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كِتَابُ اللَّهِ فِيهِ خَبَرُ مَا قَبْلَكَمْ، وَنَبَأُ مَا بَعْدَكُمْ، وَحُكْمُ مَا بَيْنَكُمْ، هُوَ الْفَصْلُ لَيْسَ بِالْهَزْلِ، ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔» - مصنف ابن أبي شيبة
"அல்லாஹ்வின் வேதத்தில் உங்களுக்கு முன் சென்றவைகளின் செய்தியும் இருக்கிறது; உங்களுக்குப் பின் வருபவைகளின் தகவலும் இருக்கிறது; உங்களுக்கிடையில் நடைபெறும் பிரச்சனைகளின் தீர்வும் இருக்கிறது; அது தெளிவான விபரங்கள் அடங்கியதாகும்  அது [ஒன்றும்] நகைச்சுவை [புத்தகம்] அல்ல………………"
என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அலி [ரலி] நூல்: முஸன்னஃப் பின் அபீ ஷைபா
v எனவே பொது சிவில் சட்டம் அது எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்க முடியாதது.
v எங்களைப் பொருத்தவரை இஸ்லாமியச் சட்டம் என்பது எங்கள் உயிரை விட முக்கியமானது.
v ஆகவே அதில் விளையாடுவது எங்கள் உயிருடன் விளையாடுவதை விடவும் கொடியதும் பொல்லாததுமாகும்.
v எனவே இது தொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என உறுதி கூறும் கையெழுத்து படிவத்தில் கையொப்பமிட்டு ஷரிஅத் சட்டத்தை பாதுகாக்க நம்முடைய பங்களிப்பை செலுத்துவோம்.
v அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள நமக்கான உரிமைகளை காக்க உடனே நாமும் கையொப்பமிட்டு உறவினர்கள் நண்பர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
v ஷரிஅத்தை காப்பது நமது மார்க்க கடமை அது நமது இறை நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை பறைசாற்றுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.