புதன், 24 அக்டோபர், 2018

*இஸ்லாமும் நடு நிலையும்*


بسم الله الرحمن الرحيم

*இஸ்லாமும் நடு நிலையும்*
***********************************
ஒரு காரியத்தை செய்ய வேண்டிய முறைப்படி செய்வதற்கு நடுநிலை என்று கூறப்படும் அதில் வரம்பு மீறுவதோ அல்லது குறைபாடு செய்வதோ அக்காரியத்தை கெடுத்து விடும்.
உதாரணமாக உணவு சமைக்கும்போது அதில் உப்பு புளி காரம் போன்றவற்றை சரியான அளவில் சேர்க்கும் போது தான் அவ்வுணவு  உண்ண தகுந்ததாக இருக்கும்.  மாறாக அது கூடினாலோ அல்லது குறைந்தாலோ உணவின் சுவை கெட்டு விடும்.
உலக காரியங்களிலும் சரி மார்க்கச் சட்டங்களிலும் சரி அவற்றை செய்ய வேண்டிய முறைப்படி செய்வதே நன்மை பயக்கும் . நலன் விளையும். அதற்கு மாறு செய்வது தீமைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமாகி விடும்.

மார்க்க விஷயங்களில் இறைவனும் அவன் திருத்தூதரும் விரும்புகின்ற விதத்தில் நடுநிலையோடு செயல்படும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்றான்.

وكذالك جعلناكم أمة وسطا.
இவ்வாறே உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக நாம் ஆக்கியுள்ளோம் (குர்ஆன் 2:143)

மார்க்க விஷயங்களில் நமக்கு முன்னால் சென்ற சில சமுதாயத்தினர் வரம்பு மீறி சென்றோ அல்லது அவற்றில் குறைபாடு செய்தோ இறைவனின் கோபத்திற்கு இலக்காகி அழிந்து போயினர்.
ஆனால் இந்த உம்மத்தை மார்க்கத்தில் நடுநிலையைப் பின்பற்றக்கூடியவர்களாக ஆக்கி அழிவை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாத்து விட்டான்.

@@@@@
*நடுநிலையான சமுதாயம்.*

ஒரு பொருள் சிறிது சிறிதாக உருவாகி இறுதியில் முழுமை அடைவது போல மனித சமுதாயம் ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் துவங்கி இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில்
முழுமை பெற்றுள்ளது. எனவே இந்த உம்மத் எல்லா விதத்திலும் நடுநிலையான சமுதாயமாக அமைந்துள்ளது.


*நம்பிக்கையில் நடுநிலை.*
***********************************
முந்திய உம்மத்தினர்களில் சிலர் தங்களின் நபியை இறைவனின் மகன் என  நம்பியதால் வழிகெட்டனர்.

وَقَالَتِ الْيَهُوْدُ عُزَيْرُ ۨابْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَى الْمَسِيْحُ ابْنُ اللّٰهِ‌ ذٰ لِكَ قَوْلُهُمْ بِاَ فْوَاهِهِمْ‌  يُضَاهِئُونَ قَوْلَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ‌  قَاتَلَهُمُ اللّٰهُ ‌ اَنّٰى يُؤْفَكُوْنَ‏‏ 

யூதர்கள் (நபி) "உஜைரை" அல்லாஹ்வுடைய மகன்   என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் "மஸீஹை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?
(அல்குர்ஆன் : 9:30)


ஆனால் இந்த உம்மத்தோ நபிமார்கள் அனைவருக்கும் தலைவராக இருந்த முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனின் தூதர்களில் ஒருவர் என்றும்  அவர்களின் உண்மையான தகுதியை விளங்கி ஈமான் கொண்டுள்ளனர்.

முந்திய உம்மத்தினர்  நபியின் கட்டளையை புறக்கணித்து நேரடியாக நபிக்கு மாறு செய்தனர்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அமாலிகா எனும் கூட்டத்தினருடன் போர் புரியுமாறு தமது சமூகத்தினருக்கு கட்டளையிட்ட போது அந்தக் கட்டளைக்கு செவிசாய்க்காது அவர்கள் இப்படி பதிலளித்தார்கள்.

قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا‌ فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قَاعِدُوْنَ‏ 
(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் அவ்வூரிலிருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் நுழைய மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும்  (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்" என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 5:24)

ஆனால் இந்த உம்மதின் முன்னோடிகளான கன்னியமிக்குரிய ஸஹாபாக்கள் நபியவர்களின் கட்டளைக்காக தமது உயிரையே கொடுக்கத் தயாராக இருந்த பல வரலாற்று நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.

பத்ர் யுத்தம் நடைபெறுவதற்கு முன்பாக நபியவர்கள் தன் தோழர்களான சஹாபாக்களை அழைத்து மக்காவிலிருந்து வரும் எதிரி படைகளை எதிர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியபோது முஹாஜிர்களை சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் ரலி அவர்களும் . அன்சாரிகளைச் சேர்ந்த ஸஃது பின் முஆத் ரலி அவர்களும் இவ்வாறு முழங்கினார்கள்.
நபி மூஸா அலை அவர்களின் சமூகம் கூறியது போன்று நாங்கள் கூறமாட்டோம் . நீங்கள் எங்களை மதீனாவிலிருந்து நீண்ட தூரத்தில் உள்ள பர்குல் கிமாத்என்ற இடம் வரை எங்களை அழைத்துச் சென்றாலும் நாங்கள் அனைவரும் வரத்தயார் . கடலுக்குள் எங்களை மூழ்கச் சொன்னாலும் நாங்கள் தயார் என்று வீரஉரை நிகழ்த்தி நபிக்கு கட்டுபடுவதை விட தங்களின் உயிர் பெரிதில்லை என்பதை உணர்த்தினார்.

மேலும் முந்திய உம்மத்தினர் நபியின் உயர்ந்த அந்தஸ்தை விளங்காமல் தங்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்தனர் . அதை விடவும் மேலே சென்று நபிமார்களைக் கொலை செய்வதற்கும் துணிந்தனர்.

ஆனால் சஹாபாக்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு சிறு கஷ்டம் கூட ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்தார்கள்.

குபைப் ரலி அவர்கள் காஃபிர்களால் கைது செய்யப்பட்டு தூக்கில் போடப்படும் போது அங்கு சூழ்ந்து நின்றிருந்தவர்களில் ஒருவன்

உம்மை விடுதலை செய்துவிட்டு உமக்கு பதிலாக முஹம்மதை தூக்கிலிடுவதை நீர் சம்மதிப்பீரா? என்று கேட்டபோது

و الله ما احب أن يشاك محمد بشوكة و انا جالس في بيتي

அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் வீட்டில் நிம்மதியாக இருக்கும் போது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலில் முள் குத்துவது கூட நான் விரும்ப மாட்டேன் என்று கூறினார்கள்

@@@@@

*வணக்கங்களில் நடுநிலை.*

முந்தைய உம்மத்தினர் இறைவனின் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் உலகத்தின் மீது மோகம் கொண்டு மார்க்கச் சட்டங்களில் பல குளறுபடிகளைச் செய்தனர் பணம் வாங்கிக் கொண்டு இறைவனின் வேதமான தவ்ராத்தின் வார்த்தைகளை மாற்றி விட்டனர்

தங்களிலுள்ள செல்வந்தர்களுக்கு ஒரு சட்டத்தையும் ஏழைகளுக்கு ஒரு சட்டத்தையும் கூறி வேதத்தில் மாற்றம் செய்தனர் இவர்களின் இந்த அக்கிரமச் செயலைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கண்டிக்கின்றான்.

فَوَيْلٌ لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِيَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًافَوَيْلٌ لَّهُمْ مِّمَّا کَتَبَتْ اَيْدِيْهِمْ وَوَيْلٌ لَّهُمْ مِّمَّا يَكْسِبُوْنَ‏ 
எவர்கள் தங்கள் கையைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக் கிரயத்தையடைவதற்காக "இது அல்லாஹ் விடமிருந்து வந்ததுதான்" என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்! அல்குர்ஆன் : 2:79)

முந்தைய உம்மத்தில் இன்னொரு கூட்டம் உலகை முற்றிலுமாக வெறுத்து ஹலாலானவைகளைக் கூட தமக்குத்தாமே ஹராமாக்கிக் கொண்டு திருமணம் செய்யாமல் காடுகளிலும் ஆலயங்களிலும் சென்று தங்கி துறவு வாழ்க்கையை மேற்கொண்டனர்

ஆனால் இந்த உம்மத்தில் வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அந்த வேதத்தின்படி நடுநிலையோடு செயல்படும்படி கட்டளையிட்டுள்ளான்.  உடலை வருத்திக் கொள்ளும் படியான வணக்கங்களில் ஈடுபடுவதையும் திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொள்வதையும் மார்க்கம் முற்றிலும் தடை செய்துள்ளது . மார்க்கம் கடமையாக்கிய கட்டாய கடமைகள்  போக உபரியான வணக்கங்களை பொறுத்தவரை ஒவ்வொருவரும் தத்தமது உடல் நிலைக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு உள்ள வணக்கங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.


@@@@@

*நாகரீகத்தில் நடுநிலை*

சமுதாயத்தின் ஒரு அங்கமான மனிதன் தான் சார்ந்து வாழும் சமுதாயத்தினரிடையே கண்ணியமாகவும் மரியாதையுடனும் வாழ்வதற்கு தேவையான எல்லாப் பண்புகளையும் ஒழுக்கங்களையும் இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது


குறிப்பாக மனிதன் சுத்தமாகவும் அலங்காரம் செய்தும் தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும். அழுக்கோடு அலைவதும் மிடுக்கோடு திரிவதும் கூடாது

உடல் உடை இரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்வதோடு ஆணும் பெண்ணும் அவர்களுக்கு மார்க்கம் அனுமதித்த அளவுக்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் .
அந்த வகையில் ஒரு ஆண் தங்கம் அணிவது பட்டாடை அணிவது தலைமுடியை கறுப்பாக மாற்றுவது தாடியை சிரைப்பது பெண்களைப் போன்று கழுத்தில் கை கால்களில் மற்றும் காதுகளில் ஆபரணம் அணிவது கைகளில் மருதாணி பூசுவது கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிவது முதலிய அலங்காரங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.


ஓர் ஆண் தனது விரலில் வெள்ளியினாலான 4 கிராம் 374 மில்லி கிராம் எடையை விட அதிகம் இல்லாத மோதிரம் மட்டுமே அணிவதற்கு இஸ்லாம் அனுமதித்துள்ளது.

இதுவன்றி வேறெந்த ஆபரணமும் எந்த உலோகத்திலும் உடலின் எந்த உறுப்பிலும் ஆண் அணியக்கூடாது

@@@@@

*மனித நேயத்தில் நடுநிலை.*

படைப்பினங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த மனிதன் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்ட காலமும் வரலாற்றில் உண்டு.
இன்னும் சில பகுதிகளில் மனிதர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு வரும் செய்திகளும் கேட்க முடிகின்றது

அறியாமைக்கால அரபுலகில் ஒருவரின் ஒட்டகம் இன்னொருவரின் ஒட்டகப் பட்டியினுள் நுழைந்து சேதப்படுத்தியதற்காக இரு குடும்பங்களிடையே ஏற்பட்ட சண்டை பெரும் யுத்தமாக உருவாகி ஹர்பே பஸூஸ் என்ற பெயரில் நூறு ஆண்டுகள் யுத்தம் தொடர்ந்து நடந்து பல ஆயிரக்கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர் மனிதநேயம் என்பது மருந்துக்கு கூட இல்லாத காலம் அது.

இன்னொருபுறம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று கூறி உணவுக்காக கூட கால்நடைகளை அறுப்பது பெரும் பாவமாக கருதப்பட்டது அதை ஜீவகாருண்யம் என்று அழைக்கப்பட்டது.

ஆனால் இஸ்லாம் தான் உண்மையான மனிதநேயத்தையும் உண்மையான ஜீவகாருண்யத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

நிர்பந்த நிலையில் எதிர்த்துவரும் எதிரிகளுடன் தற்காப்பு யுத்தம் செய்வது அநியாயமாக கொலை செய்தவர்களை பழி வாங்குவது மனிதநேயத்திற்கு மாற்றமல்ல . உணவுக்காக அனுமதிக்கப்பட்ட கால்நடைகளை உண்பது ஜீவகாருண்யத்திற்கு மாற்றமானது அல்ல என்பதை எடுத்துக் கூறி இவ்விரண்டிலும் சில நெறிமுறைகளை வகுத்து அவற்றை பின்பற்றுவதை கட்டாயமாக்கியது.

@@@@@

*பெண்ணுரிமையில் நடுநிலை* .

பெண்களுக்கு ஆன்மாவே இல்லை என்றும் அவர்கள் மனிதப் படைப்பே இல்லை என்றும் கருதி பெண்களை மிகக் கேவலமாக சில சமுதாயங்கள் நடத்தி வந்தது . சொல்லொணாக் கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்பட்டது. அதன் உச்ச கட்டமாக பெண் குழந்தைகளை உயிரோடு மண்ணில் புதைப்பதும் கணவன் இறந்தவுடன் அவளும் நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற உடன்கட்டை ஏறுதல் என்ற கொடுஞ் செயலும் அரங்கேறிக்கொண்டிருந்தது.

இன்னொரு புறம் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் எனவே ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற வறட்டு சித்தாந்தமும் முன்வைக்கப்பட்டது

இவ்விரண்டிற்குமிடையே பெண்களின் உண்மையான மதிப்பு என்ன என்பதை இஸ்லாம் எடுத்துக்காட்டி அதை முறையாக அவர்கள் பெறுவதற்கு இஸ்லாம் வழி செய்தது.


@@@@@

*சட்டங்களில் நடுநிலை* .

முந்திய உம்மத்தினரின் சிலருக்கு அவர்களின் மார்க்கத்தில் கடுமையான சட்டங்கள் தரப்பட்டிருந்தது. வேறு சிலருக்கோ மிக இலகுவாக சட்டங்கள் தரப்பட்டு இருந்தது.
ஆனால் நம்முடைய இந்த உம்மத்தினருக்கு அவர்களின் சக்திக்கு ஏற்ப நடுநிலையான சட்டங்கள் தரப்பட்டுள்ளன அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் ஆடையில் அசுத்தம் பட்டால் பட்ட இடத்தை கத்திரியால் வெட்டி எடுக்க வேண்டும் அப்போதுதான் அது சுத்தமாகும்.

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் ஆடையில் அசுத்தம் பட்டாலும் ஆடை அசுத்தமாகாது அதே நிலையில் தொழுகை கூடிவிடும்

நமது ஷரீஅத்தில் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையான சட்டமாக அசுத்தத்தை தண்ணீரால் முழுமையாக கழுவிவிட்டால் ஆடை சுத்தமாகிவிடும் என்ற சட்டம் தரப்பட்டுள்ளது.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் மாதவிடாயுள்ள சமயத்தில் மனைவியை விலக்கி வைத்து விட வேண்டும் சேர்ந்து படுப்பதோ உறவு கொள்வதோ. தொடுவதோ கூடாது.

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் அந்த நிலையிலும் மனைவியுடன் உறவு கொள்வது கூடும் நமது ஷரீஅத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்வதை தவிர்த்து மற்ற விஷயங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் அநியாயமாக ஒருவர் இன்னொருவரை கொலை செய்துவிட்டால் பதிலுக்கு கொன்றவரை கொலை செய்துவிடுவது கடமையாகும் அவரை மன்னிப்பது கூடாது

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
ஷரீஅத்தில் கொலை செய்தவரை மன்னிப்பது கடமையாகும் அவரை கொல்வது-பழி வாங்குவது கூடாது.

நமது ஷரீஅத்தில் கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு முழு இஷ்டம்  தரப்பட்டுள்ளது அவர்கள் விரும்பினால் கொன்றவரை பழிக்கு பழியாக கொலை செய்வதும் கூடும் அல்லது நஷ்டஈடு வாங்கியோ வாங்காமலோ அவரை மன்னிப்பதும் கூடும் .

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் கணவன் மனைவியை தலாக் விட்டு அவள் வேறொருவரை திருமணம் செய்து விட்டால் இனி எப்பொழுதும் முதல் கணவர் அவளை திருமணம் செய்ய முடியாது

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் திருமணம் செய்த பின்பு கணவன் மனைவியை தலாக் விடுவதற்கு அறவே அனுமதி இல்லை.

ஆனால் நமது ஷரீஅத்தில் மனைவி கணவனுக்கு ஒத்துவராவிட்டால் அவளை தலாக் விட்டு பிரிந்து விடுவதற்கும் . பின்பு அப்பெண் வேறொருவரை திருமணம் செய்து அந்தக் கணவர் இம்மனைவியுடன் உடலுறவு கொண்டு பின்பு இவரை விட்டும் மரணம் அல்லது தலாக்கின் காரணமாக பிரிந்து விட்டால். இத்தா முடிந்த பிறகு  மீண்டும் முதல் கணவருடன் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு.

மேலும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில்  நான்கில் ஒரு பகுதி ஜகாத்தாக  கடமையாக்கப்பட்டிருந்தது. நமக்கு நாற்பதில் ஒரு பகுதிதான் கடமையாகும். அவர்கள் தொடர்ந்து 20 மணி நேரம் நோன்பு வைக்க வேண்டும் அதை முடித்தவுடன் ஒரே ஒரு தடவை மட்டுமே சாப்பிட முடியும்.
நமக்கோ அதைவிட குறைவான நேரம் நோன்புடைய நேரமாகவும் மஃரிப் நேரத்திலிருந்து  அதிகாலை ஸஹர்  நேரம் முடியும்வரை விரும்பிய அளவு சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு சட்டங்களில் நமக்கு சலுகை வழங்கப்பட்டு அனைத்து உம்த்தினரை விட நடுநிலையான உம்மத்தாக இவ்வுலகில் அல்லாஹ் நம்மை ஆக்கியதோடு மறுமையில் அனைத்து நபிமார்களும் தம் உம்மத்தினருக்கு இறைவனின் அழைப்பை எடுத்துரைத்தார்கள் என்பதற்கு சாட்சி சொல்லும் பாக்கியத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறான்

இதைப்பற்றி பின் வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَکُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا

இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;.
(அல்குர்ஆன் : 2:143)

இது சம்பந்தமாக புகாரி ஷரீபில் வந்துள்ள ஒரு அறிவிப்பை பார்ப்போம்

ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪ اﻟﺨﺪﺭﻱ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻳﺪﻋﻰ ﻧﻮﺡ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ، ﻓﻴﻘﻮﻝ: ﻟﺒﻴﻚ ﻭﺳﻌﺪﻳﻚ ﻳﺎ ﺭﺏ، ﻓﻴﻘﻮﻝ: §ﻫﻞ ﺑﻠﻐﺖ؟ ﻓﻴﻘﻮﻝ: ﻧﻌﻢ، ﻓﻴﻘﺎﻝ ﻷﻣﺘﻪ: ﻫﻞ ﺑﻠﻐﻜﻢ؟ ﻓﻴﻘﻮﻟﻮﻥ: ﻣﺎ ﺃﺗﺎﻧﺎ ﻣﻦ ﻧﺬﻳﺮ، ﻓﻴﻘﻮﻝ: ﻣﻦ ﻳﺸﻬﺪ ﻟﻚ؟ ﻓﻴﻘﻮﻝ: ﻣﺤﻤﺪ ﻭﺃﻣﺘﻪ، ﻓﺘﺸﻬﺪﻭﻥ ﺃﻧﻪ ﻗﺪ ﺑﻠﻎ: {ﻭﻳﻜﻮﻥ اﻟﺮﺳﻮﻝ ﻋﻠﻴﻜﻢ ﺷﻬﻴﺪا} [ اﻟﺒﻘﺮﺓ: 143]
ﻓﺬﻟﻚ ﻗﻮﻟﻪ ﺟﻞ ﺫﻛﺮﻩ: {ﻭﻛﺬﻟﻚ ﺟﻌﻠﻨﺎﻛﻢ ﺃﻣﺔ ﻭﺳﻄﺎ ﻟﺘﻜﻮﻧﻮا ﺷﻬﺪاء ﻋﻠﻰ اﻟﻨﺎﺱ ﻭﻳﻜﻮﻥ اﻟﺮﺳﻮﻝ ﻋﻠﻴﻜﻢ ﺷﻬﻴﺪا

4487. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், 'இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், '(நம்முடைய செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?' என்று இறைவன் கேட்பான். அவர்கள், 'ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)' என்று சொல்வார்கள். அப்போது அவர்களின் சமுதாயத்தாரிடம், 'உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை' என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், 'உங்களுக்கு சாட்சியம் சொல்கிறவர் யார்?' என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், 'முஹம்மதும் அவரின் சமுதாயத்தினரும்' என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், 'நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்' என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே 'இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக' எனும் (திருக்குர்ஆன் 02:143) இறைவசனம் குறிக்கிறது.
'நடுநிலையான' (வசத்) என்பதற்கு 'நீதியான' என்று பொருள்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை.