புதன், 29 நவம்பர், 2017

சுந்தர நபியின் சுன்னத்துகளும் அதைப்பின்பற்றுவதன் அவசியமும்

بسم الله الرحمن الرحيم
சுந்தர நபியின் சுன்னத்துகளும் அதைப்பின்பற்றுவதன் அவசியமும்
 ★★★★★★★★★★★★★★★★★★★

قال الله تعالى :قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيم...

பெருமானார் ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்  அவர்கள் அவதரித்த புண்ணியமிகு ரபீஉல்அவ்வல் மாதத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மீலாது விழாக்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.
அல்ஹம்து லில்லாஹ்!

ஒரு முஸ்லிமைப்பொருத்தவரை அவர் ரபீஉல்அவ்வல் மாதத்தில் மட்டுமல்ல;மாறாக வருடம் முழுவதும் மீலாது விழா கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்.
لقد كان لكم في رسول الله أسوة حسنة
என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க காலைமுதல் மாலை வரை அவர் கடைபிடிக்கும் எண்ணற்ற சுன்னத்துகளில் ஏந்தல் நபி முஹம்மது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்அவர்களை நினைவுகூறாமல் எந்த நாளையும் அவரால் கழிக்க முடியாது.

அல்லாஹ் தன் திருமறையில்
إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرً
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.(17:09)
என்று கூறுகிறான்.

குர்ஆனில் அனைத்தும்  உள்ளது.ஆனால் அதன்படி நடக்க நமக்கு ஓர் முன்மாதிரி தேவை.வெறும் படிப்பு மட்டும் போதாது.

அதனை பயிற்றுவிக்க பயிற்சியாளரும் இருந்தால்தான் கல்வியின் பயனை முழுமையாகப்பெறமுடியும்.

இல்லாவிடில் இதுவரை சமைத்திராத ஒருவர்  சமையல் குறிப்பை மட்டும் வைத்து சமைப்பதைப் போலாகிவிடும்.

எனவே நபி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள் குர்ஆனின் செயல்முறை விளக்கமாக இருந்தார்கள் என்பதை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின்
كان خلقه القرآن.   (الأدب المفرد- ٣٠٨)
என்ற வரிகள் உணர்த்தும்.

இதைத்தான் அல்லாஹ் தன் திருமறையில்
قد جاءكم من الله نور وكتاب مبين (المائدة-١٥)
என்ற ஆயத்தில் கூறுகிறான்.

வழிகாட்ட ஒரு புத்தகம் தேவை. அதைப்படிக்க வெளிச்சமும் தேவை.

திருமறை என்னும் நூலை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் நடைமுறை என்னும் வெளிச்சத்தில் படிப்பவர்க்குப்பெயர்தான் முஸ்லிம்.

குர்ஆனை ஓதிக்காட்டுவதுடன் நபியவர்கள் நின்றுவிடவில்லை.அதன் சட்டங்களுக்கு செயல்விளக்கம் தந்தார்கள்.அதனைத்தான் சுன்னத்துகள் என்கிறோம்.

சுன்னத்என்றால் என்ன?
•••••••••••••••••••••••••••••••••
அகராதியில் சுன்னத் என்பதற்கு பாதை என்று பொருள்.ஷரீஅத்தில், மார்க்கத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட நபியவர்களால் வழமையாகச் செய்யப்பட்ட, கட்டாயமில்லாத செயலுக்கு சுன்னத் என்று சொல்லப்படும்.(நூல்:ரத்துல் முஹ்தார்1/103)

சுன்னத்தின் சட்டம்
•••••••••••••••••••••••••••
சுன்னத்தை விட்டவர் பாஸிக் ஆவார்.அதை மறுப்பவர் பித்அத்வாதியாவார்.(ஜவ்ஹரா)
தல்வீஹ் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
முஅக்கதா(-கட்டாயம் பேண வேண்டிய)சுன்னத் அதை விடுவது ஹராமுக்கு நெருங்கிய குற்றமாகும்.அதன்மூலம் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் ஷபாஅத் மறுமையில் கிடைக்காமல் போய்விடுகிறது.

சுன்னத்தைப் பின்பற்றி நடப்பது நேர் வழியாகும்.அதனை விட்டு விடுவது வழிகேடாகும்.அதனை எடுத்துநடப்பதன் மூலம் தீன் பரிபூரணமடையும்.அதனை விட்டுவிடுவது தீனில் குறைபாடும்தீங்கும் ஏற்படக்காரணமாகும்.

சுன்னத்தின் முக்கியத்துவம் பற்றிய
***************************************
ஹதீஸ்கள்
***********
المتمسك بسنتي عند فساد أمتي له أجر مئة شهيد
எனது உம்மத்தில் சுன்னத்துகள் மங்கிப்போன குழப்பமான காலத்தில் எனது சுன்னத்தை யார் கடைபிடித்து வருவாரோ அவருக்கு நூறு ஷஹீதுகளுடைய நன்மை கிடைக்கும்.             (தப்ரானி)

من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة
எனது சுன்னத்தை உயிர்ப்பித்தவர் என்னை உயிர்ப்பித்தவராவார்.என்னை உயிர்ப்பித்தவர் என்னோடு சுவனத்தில் இருப்பார்.(திர்மிதி

قال النبي صلى الله عليه وسلم  لبلال بن الحارث رضي الله عنه: «مَنْ أحْيا سُنَّةً من سُنَّتِي قدْ أُمِيتَتْ بَعدِي فإنَّ لهُ من الأجرِ مِثلَ مَنْ عَمِلَ بِها من غَيرِ أنْ يَنْقُصَ من أُجُورِهِمْ شيءٌ ومَنِ ابْتدَعَ بِدعةً ضَلالَةً لا يَرْضَاها اللهُ ورسولُهُ كان عليه مِثلُ آثامِ مَن عَمِلَ بِها لا يُنقِصُ ذلِك من أوزارِ الناسِ شيئًا
எனக்குப்பின்னால் மரணித்துவிட்ட எனது சுன்னத்துகளிலிருந்து ஒரு சுன்னத்தை உயிர்பிப்பவருக்கு அதன்படி அமல் செய்தவருக்கு கிடைப்பதைப்போன்ற நன்மை கிடைக்கும்.ஆனால் அமல் செய்தவரின் நன்மையில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.(திர்மிதி)

من أحيا سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة
எனது சுன்னத்தை உயிர்பித்தவர் என்னை நேசித்தவராவார்.என்னை நேசித்தவர் என்னோடு சுவனத்தில் இருப்பார்.(தப்ரானி)

சுன்னத்தின் முக்கியத்துவம் பற்றி ஸஹாபாக்கள்
••••••••••••••••••••
ஹஜ்ரத் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

أَنَّ عَائِشَةَ ، قَالَتْ : إِنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : " لَسْتُ تَارِكًا شَيْئًا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ بِهِ إِلا عَمِلْتُ بِهِ ، وَإِنِّي لأَخْشَى إِنْ تَرَكْتُ شَيْئًا مِنْ أَمْرِهِ أَنْ أَزِيغَ "

நபி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள் செய்த எந்த செயலையும் நான் செய்யாமல் விட்டதில்லை.ஏனெனில் நபியவர்கள் செய்தவற்றில் எதையேனும் விட்டு விட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று பயப்படுகிறேன்.(புஹாரி)

ஹஜ்ரத் உமர் பாரூக் (ரலி) அவர்கள் ஹஜருல்அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள்.பிறகு,
إنِّي لأَعْلَمُ أَنَّك حَجَرٌ , لا تَضُرُّ وَلا تَنْفَعُ , وَلَوْلا أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ .
நீ ஒரு கல்.உன்னால் (நேரடியாக)பிறருக்கு எந்த பயனையும் தர முடியாது.எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்த முடியாது.

நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நான் உன்னை முத்தமிடமாட்டேன் என்று கூறினார்கள்.                  (நூல்: முஸ்லிம் 1270)


உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவா்கள்   ஹூதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் மக்காவாசிகளிடம் தூதராகச்சென்றாா்கள்.

அங்குள்ள தலைவர்களைச்சந்திக்க  வேண்டுமென்றால் கீழாடையை கரண்டைக்குக்கீழ் அணிந்து செல்லுமாறு மக்கள் கூறியபோது,
என் தோழர் முஹம்மது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்அவர்கள் இப்படித்தான் ஆடை அணிவார்கள்.அதற்கு மாற்றமாக நான் அணியமாட்டேன்.என்று கூறி மறுத்துவிட்டார்கள்.

ஹஜ்ரத் ஹூதைபா(ரலி) அவர்கள் ஈரானை வெற்றி கொண்டாா்கள். அதற்க்கு முன்பு   அந்த அரசனிடம் பேச்சு வாா்தைக்காக சென்றார்கள்.
அரசர் விருந்தளித்தார்.சாப்பிடும்போது ஹூதைபா அவர்களின் கைதவறி சிறிது உணவு கீழே விழுந்து விட்டது. உடனே ஹூதைபா அவர்கள் அதை எடுத்து சுத்தம் செய்து சாப்பிடுகிறார்கள்.அதைப்பார்த்து அருகிலிருந்தோர் முகம் சுளித்தபோது,

أأترك سنة حبيبي لهؤلاء الحمقاء
"இந்த மடையர்களுக்காக நான் எனது நேசருடைய சுன்னத்தை விட வேண்டுமா?"
என்று கேட்டார்கள்.

இறைநேசர் ஆக வேண்டுமா?
•••••••••••••••••••••••••••••••••••••••
ஹஜ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த சோதனைகளில் அவர்கள் முழுவெற்றிபெற்று அல்லாஹ்வின் அன்பைப்பெற்றார்கள்.அந்த அன்பின் நினைவாக அன்னாரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை அல்லாஹ் ஹஜ்ஜிலும் குர்பானியிலும் கடமையாக ஆக்கினான்.

ஆனால் அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ் கொண்டிருந்த அன்பின் நினைவாக அன்னாரின் முழு வாழ்க்கையையும் முஸ்லிம்களுக்கு முன் மாதிரியாக ஆக்கிவிட்டான்.

لقد كان لكم في رسول الله أسوة حسنة( ٣٣:٢١)
என்ற ஆயத்தில் அல்லாஹ் இதனை எடுத்துரைப்பதைப்பார்க்கலாம்.

இறைநேசர் ஜூனைதுல்பக்தாதி(ரஹ்) கூறுவார்கள்.

அல்லாஹ்வை அடைவதற்கான அனைத்து வழிகளும்அடைக்கப்பட்டுவிட்டன.முஹம்மது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் வழியைத்தவிர.  ,சுன்னத்தைப் பின்பற்றாமல் யாரும் இறைநேசர் ஆகமுடியாது.

பிரச்சினைகளுக்குத்தீர்வு
***"************************
இன்றைய காலத்தில் நம்மவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு சுன்னத்தைப் பின்பற்றுவதில்தான் இருக்கிறது.

ஏனெனில் சுன்னத்தில்தான்,

1.அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கிறது.

2.அல்லாஹ்வின் பிரியம் ஏற்படுகிறது.

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.                         ( 3:31)

3.நபியவர்களின் ஷபாஅத் கிடைக்கிறது.

من ترك سنتي لم ينل شفاعتي( المعجم الكبير)

எனது சுன்னத்தை விட்டவர் எனது ஷபாஅத்தைப்பெறமுடியாது என்பது நபியவர்களின் திருவாக்கு.

4.ஈமானின் ஒளி அதிகரிக்கிறது .

5.பர்ளான அமல்கள் பாதுகாக்கப்படுகிறது.

6.பித்அத்கள் அழிந்து போகிறது.

7.வியாதிகள் அணுகாமல் பாதுகாப்பு ஏற்படுகிறது.

8.உடலுக்கு உற்சாகமும் ஆரோக்கியமும் கிடைக்கிறது.

9.மனக் கவலைகள்,சங்கடங்கள் நீங்குகின்றன.

10.மாற்றுமதசகோதரர்களுக்கு அதுவே தஃவத்தாக ஆகிவிடுகிறது.

இன்னும் எண்ணற்ற, எண்ணற்ற ஈருலக பலாபலன்கள் இதில் அடங்கியுள்ளன.

சுன்னத்தைப் பின்பற்றுவதில் அளவிலா ஆசையும் தேட்டமும் உடையவர்களே அதன் சுவையை உணர முடியும்.

அல்லாஹூதஆலா நமக்கும் அந்த சுவையைத்தந்து விட்டால் அதைவிடப்பெரிய பாக்கியம் வேறொன்றுமில்லை.

இன்றைய காலத்தில் நாகரிகம் என்ற பெயரில் சுன்னத்துகளுக்கு மாற்றமான பல செயல்பாடுகள் நம்மவர்களின் வாழ்வில் நுழைந்துவிட்டன.மனிதனை புனிதனாக மாற்றக்கூடிய,வாழ்க்கையில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தக்கூடிய சுன்னத்துகள் அலட்சியப்படுத்தப்பட்டு மேலை நாட்டுக்கலாச்சாரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

வாழ்வின்அனைத்து துறைகளிலும் அழகிய வழியைக்காட்டி உலகிற்கே நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்த அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கையை அழகிய முன் மாதிரியாகக்கொள்வதை விட்டுவிட்டு ஆபாசங்களும் அசிங்கங்களும் நிறைந்த,வெட்கமும் ஒழுக்கமும்அற்ற,சிறுநீர்கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் செல்பவர்களின் வாழ்க்கையில் முன் மாதிரியைத்தேடப்படுகிறது.

ஒரு காரியத்தை நாம் மன விருப்பப்படியும் செய்யலாம்.  பெருமானார் ஸல்லல்லாஹூஅலைஹி அலைஹிவசல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்த  வழி முறைப்படியும் செய்யலாம்.  ஆனால் இரண்டுக்குமிடையே வானம் பூமிக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் இருக்கிறது.

சிலர் இது சுன்னத்துதானே செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே என்று கருதி விட்டு விடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு சுன்னத்தாக விடப்பட்டு விட்டால் பிறகு நபியின் உம்மத் என்பதற்கு என்ன அடையாளம்தான்  நம்மிடம் எஞ்சி இருக்கும் .நாளை மறுமையில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நபி அவர்களிடம் சென்று அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும்படி நாம் கேட்க முடியும்?

இமாம் ஹஸன் பஸரி ரஹ்மத்துல்லாஹிஅலைஹி  அவர்களின் சபையிலே ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது இது சுன்னத்து தானே என்று சாதாரணமாகக் கூறிவிட்டார் அதைக்கேட்டு கடுமையாகக் கோபமடைந்த  ஹஸன் பஸரி அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து  நீ எழுந்து செல்!

உன் வாயில்  குப்ரின் வாடை வீசுகிறது என்று கூறினார்கள் .

சுன்னத்தான காரியத்தை அலட்சியமாகக்கருதுவது குப்ருக்கு  நெருக்கமான பாவமாகும் .

ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி( ரலி) அவர்களிடம்யூதனொருவன் உங்கள் நபி சிறுநீர் கழிக்கும் முறையைக் கூட  சொல்லித்தந்துள்ளார்களாமே என்று ஏளனமாகக் கேட்டான்.

உடனே ஸல்மான்  அவர்கள், "ஆம்! சிறுநீர் கழிக்கும் முறையைக்கூட எங்களின் நபி சொல்லித் தந்துள்ளார்கள் என்று பெருமை பொங்க பதிலளித்தார்கள்.

நபியவர்களின் எந்த சுன்னத்தையும் விடாமல் பின்பற்றியதன் காரணமாகத்தான்ஸஹாபாக்கள் விண்ணின் மீன்களாய் பிரகாசித்தார்கள்.

எனவே நாமும் எந்த சுன்னத்தையும் அலட்சியப்படுத்தி விடாமல்  தனியாக இருக்கும் போதும் கூட்டத்தில் இருக்கும் போதும் நமது நபி நமக்கு கற்றுத்தந்த அழகிய நடைமுறைகளை நமது வாழ்வின் செயல்முறைகளாக ஆக்கி அண்ணலாரின் மீதுள்ள நமது பிரியத்தை ஆழமாக இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுவோமாக!