ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஹஜ்ஜின் தத்துவங்கள்


بسم الله الرحمن الرحيم
ஹஜ்ஜின் தத்துவங்கள்
÷÷÷÷÷÷÷÷ ÷÷÷÷

قال الله تعالى :﴿إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ / فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ)

4/1274- وعن أبي هريرة قالَ: سَمِعْتُ رسُولَ اللَّهِ يَقولُ: منْ حجَّ فَلَم يرْفُثْ، وَلَم يفْسُقْ، رجَع كَيَومِ ولَدتْهُ أُمُّهُ. متفقٌ عَلَيْهِ.

5/1275- وعَنْهُ أَنَّ رسولَ اللَّهِ ، قالَ: العُمْرَة إِلَى العُمْرِة كَفَّارةٌ لِمَا بيْنهُما، والحجُّ المَبرُورُ لَيس لهُ جزَاءٌ إلاَّ الجَنَّةَ. متفقٌ عليهِ.
6/1276- وَعَنْ عَائِشَةَ، رضي الله عَنْهَا، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللَّه، نَرى الجِهَادَ أَفضَلَ العملِ، أفَلا نُجاهِدُ؟ فَقَالَ: "لكِنْ أَفضَلُ الجِهَادِ: حَجٌّ مبرُورٌ" رواهُ البخاريُّ.

7/1277- وَعَنْهَا أنَّ رَسُولَ اللَّهِ ، قَالَ: مَا مِنْ يَوْمٍ أَكثَرَ مِنْ أنْ يعْتِقَ اللَّه فِيهِ عبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ. رواهُ مسلمٌ.

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கியுள்ள பரிசுத்த மார்க்கமான இஸ்லாத்தின் கடமைகள் ஒவ்வொன்றுக்கும் வெளிரங்கம் இருப்பதைப் போன்று உள்ளமையும் உண்டு.

நம்மையெல்லாம் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹுத்தஆலா மட்டுமே வணங்கத்தகுதி பெற்றவன்.அவனைத்தவிர வேறு யாரும் யாருக்கும் நன்மையோ தீமையோ செய்திட முடியாது. நமது தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கையைத் தவிர வேறு எந்த வழிமுறைகளிலும் வெற்றி கிடையாது என்பதே கலிமாவின் உள்ளமையாகும்.

தொழுகையில் தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரை கட்டுக்கோப்புடன் அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவுடன் தொழுகையை நிறைவேற்றுவது போல அல்லாஹ் கூறிய முறையில் கட்டுக்கோப்புடன் வாழ்வதே தொழுகையின் உள்ளமையாகும்.

தொழுகையின் மூலம் அல்லாஹ்வை நெருங்கிவரும் மனிதன் அல்லாஹ்விடம் தனது அன்பை வலுப்படுத்துவதற்காக உண்ணுதல்,பருகுதல்,இச்சையை பூர்த்திசெய்தல் ஆகியவற்றை துறந்து அத்தன்மைகள் அறவே இல்லாத இறைவனுடன் நெருங்கிவிட வேண்டும் என்பதே நோன்பின் உள்ளமையாகும்.

இம்மூன்று அமல்களையும் தமது உடல் உறுப்புகளைக்கொண்டு செயலாக்கும் மனிதன் அல்லாஹ்வின் நெருக்கத்தை மென்மேலும் பெறுவதற்காக தனது பொருளாதாரத்தை செலவளிக்கிறான்.கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தின் மோகம் எனது உள்ளத்தில் இல்லை.உள்ளத்தில் அல்லாஹ்தான் இருக்கிறான் என்பதை பறைசாற்றி அவன் கூறிய இடத்தில் மனமுவந்து செலவழிப்பதன் மூலம் அவனது நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கிக்கொள்வதே ஜகாத்தின் உள்ளமையாகும்.

இவ்வாறு நெருங்கி நெருங்கி இறையின் பக்காதலில் மிகைத்து உள்ளமெல்லாம் நிறைந்துவிட்ட பரிசுத்த நாயனைப்பார்க்க வேண்டும் என்ற உச்சகட்ட உந்துதல் ஏற்படும் போது அதற்கு அவன் ஏற்படுத்திக்கொடுத்த வடிகால் தான் ஹஜ் என்னும் உன்னத இறைவணக்கமாகும்.

லைலாவின் மீது காதல் கொண்ட மஜ்னூன் இப்படிச்சொல்வான்.


أَمُرُّ عَلى الدِيارِ دِيارِ لَيلى

أُقَبِّلَ ذا الجِدارَ وَذا الجِدارا

وَما حُبُّ الدِيارِ شَغَفنَ قَلبي

وَلَكِن حُبُّ مَن سَكَنَ الدِيارا

லைலாவின் வீட்டை நான் கடந்து சென்றால் அவ்வீட்டின் சுவர்கள் ஒவ்வொன்றாக நான் முத்தமிடுகிறேன்.
அவ்வீட்டின் மீது எனக்கு எந்தப்பிரியமுமில்லை.எனது பிரியமெல்லாம் அவ்வீட்டில் வசிப்பவளின் மீதுதான்.

தன் இதயத்தில் பொங்கியெழும் இறையன்பின் காரணமாக ஹஜ்ஜூக் கடமையினை நிறைவேற்றிடப்புறப்படும் அடியார் தன்னை இன்னாரென அடையாளம் காட்டிக்கொண்டிருந்த வழக்கமான ஆடைகளை விடுகிறார்.
பரட்டைத் தலையோடும் எவ்வித அலங்காரமும் இல்லாத கபன் போன்ற ஆடையுடனும் ஹரமில் அங்குமிங்கும் அலைகிறார். கஃபாவைச்சுற்றிச்சுற்றி வருகிறார்.  அதில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டு தன் இறைவன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்.

ஸஃபா மர்வாவுக்கிடையில் ஓடுகிறார்.தன்னை மறந்த நிலையில் இறைவா!
لبيك لبيك اللهم لبيك ...
இறைவா! இதோவந்து விட்டேன்.உன்சமுகம் வந்து விட்டேன்.உனக்கே அனைத்து புகழும் இறைவா! என்று திரும்பத் திரும்ப ஒரு மஜ்னூனைப்போல சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

மினா, அரஃபா, முஜ்தலிஃபா  பெருவெளிகளில் பகலிரவைப்பாராமல் நடக்கிறார். ஜம்ராத்களில் கல்லெறிந்து தன் இதயத்திலிருந்த ஷைத்தானை விரட்டியடிக்கிறார்.குர்பானியை நிறைவேற்றி அவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்ய தன்னை தயார் செய்கிறார்.
கண்களால் காண முடியாத நேசனின் மீதுள்ள அன்பை உடலாலும் உயிராலும் உணர்வாலும் வெளிப்படுத்துகிறார்.

ஹஜ்ஜூக்காக புறப்படுபவர் தனது வாகனத்தில் ஏறும் போது முந்தைய காலங்களில் மக்கள் ஹஜ்ஜூக்காக எவ்வளவு சிரமப்பட்டு வந்து சென்றார்கள். இன்று அல்லாஹ் நமக்கு பயணத்தை எவ்வளவு இலேசாக ஆக்கிக் கொடுத்துள்ளான் என்பதை நினைவு கூர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இதேபோல் ஒரு நாள் மரணித்து மறுமையை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.பயணத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கும்போது மறுமையின் பயணத்திற்காக நாம் என்ன தயாரிப்பு செய்துள்ளோம் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.
இஹ்ராம் ஆடைக்காக வெள்ளைத்துணியை வாங்கும் போது கஃபன் ஆடையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் ஆடையில் இறையில்லத்தைச் சந்திப்பது மௌத்துக்குப் பின் கஃபனுடைய ஆடையில் இறைவனை சந்திப்பது போன்றதாகும்.

இந்தப்பயணமே நமது இறுதிப்பயணமாகக்கூட அமைந்து விடலாம்.இந்த ஆடையே நமது உண்மையான கஃபனாக ஆகிவிடலாம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

மேலும் குடும்பத்தையும் தொழிலையும் செல்வத்தையும் விட்டுச்செல்வது மௌத்துக்குப்பின்னால் இதுபோன்றுதான் செல்ல வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
அரஃபா மைதானத்தில் தங்குவதை மஹ்ஷர் மைதானத்தில் நிற்பதைப் போலவும் ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஓடுவதை மறுமையில் சிபாரிசை வேண்டுவதற்காக நபிமார்களிடம் ஓடுவதைப்போலவும் உருவகப்படுத்திப்பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் ஹஜ் பயணம் மறுமைப்பயணத்திற்கு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.இறைக்காதலுக்கு வழிகோலாகவும  திகழ்கிறது.உண்மையான இறைக்காதலின் ஆழத்தை ஹஜ்ஜைத் தவிர வேறெந்த வணக்கத்தின் மூலமும் வெளிப்படுத்த முடியாது.
இந்த ஹஜ்ஜூக்கு கிடைக்கும் நற்கூலி பற்றி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிக்கூறுவார்கள்.

4/1274- وعن أبي هريرة قالَ: سَمِعْتُ رسُولَ اللَّهِ يَقولُ: منْ حجَّ فَلَم يرْفُثْ، وَلَم
يفْسُقْ، رجَع كَيَومِ ولَدتْهُ أُمُّهُ. متفقٌ عَلَيْهِ.
எவர் (இஹ்ராமின்போது) உடலுறவு கொள்வதிலும் தீய பேச்சுக்கள் பேசுவதிலும் ஈடுபடாமல் ஹஜ் செய்கிறாரோ அவர் அன்று பிறந்த குழந்தையைப்போல பாவங்கள் அற்றவராகத்திரும்பிவருகிறார். (புஹாரி, முஸ்லிம் ).

ஹாஜிகள் இறைவனின் நெருக்கத்தைப்பெற்ற இறக்காதலர்களாவார்கள். எனவே அவர்களை யார் திட்டினாலும் அவர்களுடன் சண்டையிட்டாலும் அல்லாஹ்வின் கோபமும் சாபமும் அவர்கள் மீது ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு முஸ்லிமைத்திட்டுவதையே பெரும் குற்றமாகக் கருதும் இஸ்லாம் இறையில்லத்தை தரிசிக்க வந்த இடத்தில் இச்செயலில் ஈடுபடுவதை சாதரணமாக விட்டு விடுமா என்ன?
ஹஜ்ஜுக்குச் சென்று இக்காரியத்தில் ஈடுபடுபவர் திரும்பி வரும்போது இறுகிய உள்ளம் படைத்தவராகதிரும்பி வருகிறார்
அதற்குப்பின்னர் அவரது உள்ளத்தில் பிறர் மீது இரக்கமோ அன்போ ஏற்படுவதில்லை.அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்த நிலையை பெறுவதற்கு பதிலாக மிகத்தாழ்ந்தவராக ஆகிவிடுகிறார்.
அவசரக்காரனாக உள்ள மனிதன் தனது இடம்,சூழ்நிலை ஆகியவற்றை அறியாது இச்செயலில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதால்தான் மனிதனைப்படைத்த இறைவனும் ( 2:197)ஆயத்தில் தெளிவாகக் கூறிவிட்டான்.


: {الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ} [سورة البقرة):

ஹஜ்(ஜுடைய காலம் அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே இம்மாதங்களில் எவரேனும் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் செய்து) ஹஜ் கடமையை நிறைவேற்ற நிய்யத்து-நாடிவிட்டால் ஹஜ்ஜின் போது இச்சைகளைத் தூண்டக் கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது.
(அல்குர்ஆன் : 2:197)