வியாழன், 12 ஜூலை, 2018

சூதாட்டம்


بسم الله الرحمن الرحيم
சூதாட்டம்
**************
முன்னுரை: மனிதன் தன் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள பொருளதாரம் இன்றி அமையாததாகும். பொருளாதரத்தைப் பெற்றவன் சுயமரியாதையுடன் தான் வாழ்வதோடு, தன்னைச் சார்ந்துள்ளவர்களையும் வாழவைக்கின்ற சக்தியைப் பெறுகின்றான். தான் விரும்பியதை வாங்கவும், அனுபவிக்கவும் அதிகாரம் பெற்றுள்ள அவன் தனக்கு ஏற்படுகின்ற நோய் போன்ற இடையூறுகளை சிறந்த முறையில் கலைவதற்கும் சக்தி பெறுகின்றான். இத்துடன் பொருளதார வலிமையால் தான் சார்ந்துள்ள சமூகத்தில் அவனுக்கென தனிமரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கின்றது.
இந்நிலையில் நுகர்வுமயமாக்கல் பரவலாக்கப்பட்ட பின் உலகெங்கிலும் வாழும் மனித சமூகத்தில் ஒவ்வொருவரும் தான் விரும்பியதை அனுபவிக்கும் வெறியை ஊடகத்தின் மூலம் ஊட்டப்படுகின்றார்கள்.

இதனால் சாமானியன் முதற்கொண்டு சாணக்கியவன் வரை ஒவ்வொருவரும் தான் விரும்பியதை அனுபவிக்கத் துடிக்கின்றான். ஒரு காலத்தில் காசுள்ளவன் சைக்கிலிலும், மோட்டார்களிலும், கார்களிலும் செல்லும் போது காசில்லாதவன் நடந்தே தன் பணியைச் செய்தான். இந்நிலை இன்று தலை கீழாக மாறிவிட்டது.
இன்று விரும்புபவர் அவரிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நினைத்ததை தவனை முறையில் பணத்தை கட்டி வாங்கி அனபவிக்கும் நிலை உருவாக்கப்படுள்ளது.
இதன் பின்னனியில் இன்று மனிதா! உன் வாழ்வின் இலக்கு என்ன? என்று நாம் சந்திப்போரிடம் கேட்டால் பணம் பணம் பணம் என்ற பதிலே வரும். காலை விழித்ததிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை நாலொன்றுக்கு பல வேளைகளை செய்யும் மனிதனின் தொடர் ஓட்டமே இதற்கு சாட்சி.

இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் உலகை முறையாகவும், தேவைக்கேற்பவும் அனுபவிப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அதற்கு வேண்டிய பொருளாதாரத்தை முறையாகவும், மார்க்கம் சொன்ன முறையிலும் பெறவேண்டும். மார்க்கம் தடை செய்த வகையிலும் பெறுவதற்கு அனுமதி இல்லை.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ (البقرة : 267)
2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும் பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள் கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்) கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும் எந்தத்) தேவையுமற்றவனாகவும் புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.

عَنِ المِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ» خ: 2027
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தன் கரத்தால் உழைத்து உண்ணுவதை விட சிறந்ததை யாரும் உண்ண முடியாது. நிச்சயமாக நபி தாவூத் (அலை) அவர்கள் தன் கரத்தால் உழைத்து உண்ணுபவராக இருந்தார்கள்.

عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا، فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ» خ : 2074

உங்களில் ஒருவர் தன் முதுகில் விரகை சுமப்பது அவர் பிறரிடம் யாசிப்பதை விட சிறந்ததாகும். ஏனெனில் அவர் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். (புஹாரி:2047)

பொருளீட்டல் முறையில் மாரக்கம் தடை செய்த, குறுக்கு வழிமுறையே சூதாட்டமாகும்.

சூதாட்டம் என்றால் என்ன?
******************************
பணம் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை பந்தயமாக வைத்து விளையாடுவதற்கு சூதாட்டம் எனப்படும். அதாவது விளையாடுவோர்களில் ஒவ்வொருவரும் ஏதேனும் பொருளை கொடுத்து, பின்னர் அதில் வெற்றி பெறுவோர் அதனை எடுத்துக் கொள்வதற்கு சூதாட்டம் எனப்படுகின்றது.
இச்சூதாட்டத்தின் நோக்கம் குறுகிய காலத்தில், உடல் உழைப்பின்றி பணத்தை அடைவதேயாகும். இது ஒரு வகையில் போதையைப் போன்றதாகும். இதில் சிக்கியவன் அதிலிருந்து மீளுவது மிகவும் சவாலான காரியம்.

அதனால் மனிதர்களில் சிலர் சூதாடுவதற்கு பணம் கிடைக்காத போது வீட்டிலுள்ள பொருட்களையோ ஏன் சில நேரங்களில் தங்களின் குழந்தைகளையோ அல்லது மனைவியையோ கூட பந்தயப் பொருளாக வைத்து விளையாடிடும் அவல நிலையை சமூகத்தில் காலம் காலமாக பார்க்க முடிகின்றது. இது அன்று முதல் இன்று வரை நடை பெறுகின்ற சம்பவமாகும்.


நவீன யுகத்தின் சூதாட்ட வடிவங்கள்:
****************************************
1. பார்வையாளர்களின் சூதாட்டம்:
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்த யுகத்தில் சூதாட்டம் கம்ப்யூட்டரின் வழியே சமூக வலைதளங்களில் கொடிகட்டி பறக்கின்றது. இவ்வகை சூதாட்டத்தில் பார்வையாளர்களாக இருப்பவர்கள் தாங்கள்; கணித்திடும் அணியே வெல்லும் என்றும், அது தோற்றால் நான் இவ்வளவு தொகையைத் தர தயாராக இருப்பதாவும், அது வென்றால் மற்றவர்கள் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைத் தரவேண்டும் என்றும் சூதாடுகிறார்கள்.

2. ரசிகர்களை சூதாட வைக்கும் நிறுவனங்கள்:
williams hill, paddy power, coral, bat365
ஆகிய இந்நிறுவனங்கள் தங்கள் நாட்டில் அனுமதி பெற்று, வரி செலுத்துகின்ற சூதாட்ட நிறுவனங்களாகும்.

இந்நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களை புரோக்கர்கள் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் சொல்வது போல் அவர்கள் செயல்பட்டால் பெருங்கொண்ட தொகையைத் தருவதாக கூறி, அவர்களுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்கின்றனர். பின்னர் விளையாட்டு ரசிகர்களிடம் கேள்விகள் கேட்டு ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து சூதாட வைக்கின்றார்கள். இதைப் பற்றி எதுவும் அறியாத விளையாட்டு ரசிகர்கள் தன்நாட்டு அணி தோல்வியுற்றதை நினைத்து அழுது கொண்டும், சிலர் தற்கொலை செய்து கொண்டும் தன் வாழ்நாளை நாசப்படுத்திக் கொள்கின்றனர்.

கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்தயத்தில் கேட்கப்படும் முக்கியமான சில கேள்விகள்
******************************
1) குறிப்பிட்ட போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்? அல்லது போட்டி சமநிலையா?

2) இரு அணிகளிலும் அதிக ஓட்டம் பெறும் வீரர் யார்?

3)இரு அணிகளிலும் அதிக விக்கட்டுகள் எடுக்கும் வீரர்கள் யார்?

4) குறிப்பிட்ட ஓவர்களில் குறிப்பிட்ட அணி குறிப்பிட்ட ஓட்டங்களை எட்டுமா? இல்லையா?

5) மைதானத்துக்குள் ஆடிக்கொண்டிருக்கும் வீரர்கள் இருவரும் குறிப்பிட்ட சொந்த ஓட்ட எண்ணிக்கையை எட்டுவார்களா? இல்லையா?

6) குறிப்பிட்ட ஓட்டங்களுக்குள் அடுத்த இலக்கு சரியுமா? இல்லயா?

7) அடுத்ததாக ஆட்டமிழக்கபோகும் வீரர் யார்?

8) அடுத்த வீரர் ஆட்டமிழக்கபோகும் முறை என்ன? (காட்சா? விக்கட் கீப்பர் காட்சா? போல்டா? LBWW வா? அல்லது வேறா?)

9) இனிங்க்ஸ் முடிவில் குறிப்பிட்ட அணி குறிப்பிட்ட ஓட்டங்களை தாண்டுமா? மாட்டாதா?

10) குறிப்பிட்ட ஜோடிகளின் இணைப்பாட்டம் குறிப்பிட்ட ஓட்டங்கள் வரை வீழ்த்தப் படாமல் இருக்குமா?

சூதாட்டம் பற்றி திருமறையில்:
************************
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ (البقرة : 188)

2:188. அன்றியும் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும் நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும் அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

قال الله تعالي : يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا (البقرة : 219)
2:219. (நபியே!) மதுபானத்தையும் சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: 'அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது' (நபியே! 'தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் '(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்' என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும் அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.

قال الله تعالي : إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصابُ وَالْأَزْلامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَالمائدة: 90،
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ، فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ» م : 2260

4549. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர் தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தேய்த்தவரைப் போன்றவர் ஆவார். இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ»  د : 4938

சதுரங்கம் விளையாடுபவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்தவனாவான். (அபூதாவூத்:4938)

சூதாட்டத்தின் தீமைகள்:
****************************
1.    மனிதனை உழைக்க விடாமல், நமக்கு ஒருநாள் பணத்தை குவிக்கும் என்ற தவறான எண்ணத்தை உருவாக்குகின்றது.
சூதாடுபவர்கள் வேலைக்குச் செல்லாமல் ஊரின் ஓரங்களில் உட்கார்ந்து விளையாடுவதை ஒவ்வொரு ஊரிலும் காண முடியும்.
2.    குடும்ப கட்டமைப்பை சீர்குலைக்கின்றது.
பணத்தை, பொருளைக் கொண்டு சூதாடுபவன் தன் குடும்பத்தை வறுமையில் வாட்டுகின்றான். மனைவி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, குழந்தை படிப்பை இழந்து குழந்தை தொழிலாளர்களாக பணி செய்ய வேண்டிய நிலை..........
3.    பொருளதாரத்தை தகர்க்கின்றது.
4.    பகையை உருவாக்குகின்றது.
5.    தொழுகை மற்றும் அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் தடுக்கின்றது.

إِنَّما يُرِيدُ الشَّيْطانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَداوَةَ وَالْبَغْضاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَالمائدة: 90- 91
5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

6.    மனிதனை குற்றவாளியாக்குகின்றது
7.    உடல் ஆரோக்கியத்தை கெடுக்கின்றது
8.    தீய பழக்கங்களுக்கு தூண்டுகிறது.
9.    ஒரு நாட்டுக்கு மிகப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றது. எனவேதான் இந்தியா கூட சூதாட்டத்தை சட்டப்பூர்வமானதாக ஆக்கிவிடலாமா? அப்படி ஆக்கினால் சூதாட்டத்தில் சம்பாதித்து பதுக்கப்படும் கருப்பு பணத்தை வெளிக் கொணரலாம் என்று ஆலோசிப்பதாக சில தினங்களுக்கு முன் பத்திரிக்கைச் செய்தியில் ஒரு செய்தி வந்திருந்தது. எனினும் பின்னர் அந்த செய்தியை அரசு மறுத்து அறிக்கை விட்டுள்ளது.

முடிவுரை: ஜனநாயக நாட்டைப் பொறுத்த வரை மக்களுக்குத்தான் அதிகாரம் என்ற கொள்கையைக் கொண்டது. அதனால் ஜனநாயக நாட்டில் வாழுகின்ற மக்கள் மது, ஓரிணைச் சேர்க்கை, விபச்சாரம், சூதாட்டம் என்று எவ்வளவு இழிவான காரியமாக இருந்தாலும் அதனை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று மக்கள் போராடினால் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் அதனை சட்டமாக ஆக்கிவிட முடியும்.

ஆனால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அப்படி மாற்ற முடியாது. அனைத்து அதிகாரங்களும் அல்லாஹ்வுக்குத்தான். அவனுடைய சட்டத்தை யாரும் மாற்ற முடியாது.
وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِنْ تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَنْ يُصِيبَهُمْ بِبَعْضِ ذُنُوبِهِمْ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ (49) أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ (50)

5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால் சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.

وآخر دعوانا أن الحمد لله رب العالمين