வியாழன், 6 டிசம்பர், 2018

பெரும் புரட்சியாளர் பெருமானார்


بسم الله الرحمن الرحيم

பெரும் புரட்சியாளர் பெருமானார்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

قال الله تعالي :يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ
إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (13)

قال رسول الله صلى الله عليه وسلم :(( يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى،( رواه أحمد)


சமுதாய சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசாத தலைவர்கள் கிடையாது. ஆனால் பேசிய, கனவு கண்ட மாற்றத்தை கண்முன்னே நிகழ்த்திக் காட்டியவர்கள் அவர்களில் மிகச்சிலரே. அவர்கள் தம் வாழ்நாளில் ஏற்படுத்திய மாற்றங்களும் பெரும்பாலும் அவர்களின் மறைவோடு மறைந்து போய்விட்டன என்பதுதான் யதார்த்தமான உண்மை. ஆனால் 23 ஆண்டுகள் என்ற மிகக் குறைந்த கால கட்டத்தில் யாரும் கனவிலும் காணமுடியாத மிகப் பெரிய புரட்சியை, மாபெரும் சமுதாயச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தியதோடு மட்டுமின்றி தங்களின் மறைவுக்குப்பின் அதனை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று இலட்சியத்துடன் செயல்படுத்துகின்ற துடிப்பான சமுதாயத்தை உருவாக்கி உலக இறுதி நாள் வரை அம்மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் ஏற்பாட்டையும் செய்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே.

பெருமானார் வழங்கிய பெண்ணுரிமைகள்
----------------------------------------------------------------------
பெண்களின் நிலை எப்படியுள்ளது என்பதைக் கொண்டுதான் ஒரு நாட்டின் நிலையைக் கூற முடியும் என முன்னால் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியிருக்கிறார். ஒரு சமுதாயம் முழுமையான வளர்ச்சி பெற வேண்டுமாயின் அங்குள்ள மனித வளங்கள் முழுவதும் முறையாகப் பயன்படுத்தப்படவேண்டும். மனித வளத்தில் சரிபாதி பெண்கள். எனவே பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்கப்பட்டால் தான் அவர்களால் சமுதாய மேம்பாட்டுக்கு தங்களுடைய பங்களிப்பை செய்ய முடியும் என்பதையுணர்ந்த பெருமானார், பெண் சிசுக்கொலை மலிந்து கிடந்த, பெண்கள் மிருகங்களைப் போல் நடத்தப்பட்டு வந்த அரபு தேசத்தில் பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கி அவர்களையும் சமுதாயத்தில் கண்ணியத்தோடு வாழ வழி செய்தார்கள்.

பெருமானார் வழங்கிய பெண்ணுரிமைகளில் முதன்மையானது கல்வி. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட மக்களிடம் கல்வியைத் தேடுவது முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமை என்றுரைத்து பெண்களும் கல்வி கற்பதை கட்டாயமாக்கினார்கள். மேலும் தங்களின் அன்பு மனைவி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மார்க்க விஷயங்களைக் கற்றுக் கொடுத்து எனது வஹியின் பாதி ஞானத்தை ஆயிஷாவிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று சஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்கள்.

كما كانتِ المرجعَ الكبيرَ لكِبار الصحابة، خاصَّة عندَ المواقف والملمَّات، كما كانتْ تُفتي بما لدَيْها من عِلمٍ وفِقه في عهد الخليفةِ عمرَ وعثمانَ - رضي الله عنهما - إلى أن تُوفِّيت - رحمها الله ورضي عنها.

قال أبو موسى الأشعري رضي الله عنه: "ما أشكل علينا أصحاب رسول الله صلى الله عليه وسلم حديث قط، فسألنا عائشة إلا وجدنا عندنا منه عِلمًا" (رواه الترمذي في سننه، ج: [5/705]).


எங்களுக்கு மார்க்கத்தின் எந்த விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டாலும் நாங்கள் ஆயிஷா(ரலி)விடம் தான் செல்வோம் என்று நபித்தோழர் ஹஜ்ரத் அபூமூஸா(ரலி) அவர்கள் அறிவிப்பதிலிருந்தே அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் கல்வி ஞானத்தை நாம் மதிப்பிட முடியும்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (( مَنْ كَانَ لَهُ ثَلاثُ بَنَاتٍ أَوْ ثَلاثُ أَخَوَاتٍ أَوْ ابْنَتَانِ أَوْ أُخْتَانِ فَأَحْسَنَ صُحْبَتَهُنَّ وَاتَّقَى اللَّهَ فِيهِنَّ فَلَهُ الْجَنَّةُ )

பெண்ணாக பிறப்பது பெரும் பாவம் என்று கருதுமளவுக்கு பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்துக் கொல்லும் கொடூர செயல் புரிந்தோரை மாற்றி ஒருவர் பெண் குழந்தைகளைப் பெற்று அவர்களை நல்ல முறையில் வளர்த்து அதில் ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரை சுவர்க்கத்தில் நுழையைச் செய்வான் ( திர்மிதி ) என்று கூறி பெண் சிசுக்கொலையை ஒழித்தார்கள்.
பின்னாளில் ஹிஜ்ரி 7ல் உம்ரா செய்ய மக்கா வந்தபோது ஹழ்ரத் அலி , ஹழ்ரத் ஜாஃபர், ஹழ்ரத் ஜைது (ரலி) ஆகிய மூவரும் ஹழ்ரத் ஹம்ஜா(ரலி) வின் மகளை வளர்ப்பதற்கு போட்டியிட்டார்கள் என்றால் அது பெருமானாரின் புரட்சியால் ஏற்பட்ட விளைவுதானே.

வாள் பிடிக்கும் கைக்குத்தான் வாரிசுரிமை என்று சொல்லி பெண்கள் தம் பெற்றோரின் சொத்திலிருந்து வாரிசாவதைத் தடை செய்த கால கட்டத்தில் பெருமானார் குர்அனின் 4 : 7 ஆயத்தின் அடிப்படையில் பெற்றோர் உறவினர் சொத்திலிருந்து பெண்களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்.

لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ ۚ نَصِيبًا مَّفْرُوضًا (7)

கணவன் இறந்த பின் மறுமணம் செய்யாமல் இருந்தால் தான் பரலோகத்தில் புண்ணியம் கிடைக்கும் என்ற மூடக் கொள்கையை  ஒழித்து கணவன் இறந்த பின் 4 மாதம் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டித்த பிறகு தான் விரும்பும் ஒருவரை மறுமணம் செய்து கொள்ள பெண்களுக்கு அனுமதி வழங்கினார்கள் பெருமானார். இதே போல் மகளிடம் திருமணம் பற்றி தந்தை கேட்க வேண்டியதில்லை. அவர் யாருக்குத் தன்னைத்  திருமணம் செய்து வைக்கிறாரோ அவரைத் தான் கணவனாக மகள் ஏற்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை உடைத்து பெண்ணிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று கூறியதோடு அவ்வாறு அனுமதி வாங்காது தந்தை செய்து வைத்த திருமணத்தை அவரது மகள் முறையிட்டதன் பேரில் ரத்து செய்து தீர்ப்பளித்தார்கள்.

இவ்வாறு பெண்களுக்கு கல்வியுரிமை, சொத்துரிமை, கணவனை தேர்வு செய்யும் உரிமை, கணவனைப் பிரிந்து வாழும் உரிமை, மஹர் பெரும் உரிமை, மறுமணம் புரியும் உரிமை, தொழில், வியாபாரம் செய்யும் உரிமை,பேச்சுரிமை போன்ற பல உரிமைகளை பெருமானார் வழங்கி, பெண் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

பெருமானார் போதித்த சமத்துவம்
-------------------------------------------------------

எங்கே பிறப்பின் அடிப்படையில் மனிதனுக்கு உரிய சமூக அந்தஸ்து மறுக்கப்படுகிறதோ, அங்கே ஓர் இனம் மற்றோர் இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுகிறது. அந்த ஆதிக்கம் தான் நான் பெரியவன், நீ தாழ்ந்தவன் என்ற இனவாதத்திற்கு மனிதனை அழைத்துச் செல்கிறது. எனவே மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற நிலையை அகற்றி மனிதர்களனைவரும் அல்லாஹ்வின் அடிமை.அவனுக்கு முன் அனைவரும் சமமானவர்கள் என்று போதித்து பிறப்பையோ, நிறத்தையோ, மொழியையோ, அதிகாரத்தையோ, செல்வத்தையோ முன் வைத்து மனிதர்களுக்கிடையே எழுப்பப்பட்ட ஏற்றத்தாழ்வு சுவர்களை தகர்த்தெறிந்தார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

الدين النصيحة قلنا: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم

روى الإمام أحمد في (المسند:ج2ص224ر7086) ثنا محمد بن عبيد ثنا زكريا عن عامر سمعت عبد الله بن عمرو سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : المسلم من سلم الناس من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه.


பிறர் நலன் நாடுவதுதான் மார்க்கமென்றும் தனது நாவு, கரத்தால் பிறருக்கு தீங்கு செய்யாதவனே பரிபூரணமான முஸ்லிம் என்றும் கூறி பிறருடைய உரிமைகளை வழங்கி மனி சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் மூலம் தான் ஒருவர் உண்மையான முஸ்லிமாக முடியும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.
மனித சமத்துவம் பற்றி இறுதி ஹஜ்ஜிலே பெருமானார் ஆற்றிய உரை வரலாற்றுப் பிரசித்தி பெற்றது.


قال الله تعالي :يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (13) ۞

(( يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى،

"மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவன். உங்கள் தந்தை ஆதமும் ஒருவரே! நீங்கள் யாவரும் அவருடைய மக்களே: அவரோ மண்ணால் படைக்கப்பட்டவர். எந்த ஓர் அரபியும் அரபியல்லாத அஜமியை விடவோ அல்லது அஜமி, அரபியை விடவோ எவ்வகையிலும் உயர்ந்தவரல்லர். அது போலவே சிவந்த நிறமுடையவர் கருத்த நிறமுடையவரை விடவோ, கருத்த நிறமுடையவர் சிவந்த நிறமுடையவரை விடவோ உயர்ந்தவரல்லர். நிச்சயமாக அல்லாஹ்விடம் தக்வா என்னும் இறையச்சமுடையவரே உயர்ந்தவராவார்."  (நூல் :அஹ்மது)

என்ற ஹதீஸின் மூலம் இறையச்சஅடிப்படையில் தான் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படவேண்டுமே தவிர, இன, மொழி அடிப்படையிலல்ல என்பதை போதித்தது மட்டுமின்றி அதை பெருமானார் தங்களின் செயலிலும் காட்டினார்கள்.

ஆம்! ஹிஜ்ரி எட்டில் நடந்த மக்கா வெற்றியின் போது 10,000 சஹாபாக்கள் புடைசூழ வெற்றி வீரராக மக்காவிற்குள் நுழைந்த பெருமானார் தாங்கள் அமர்ந்து வந்த ஒட்டகத்தில் தங்களுக்குப் பின்னால் ஹழ்ரத் உஸாமா (ரலி) அவர்களை அமர வைத்திருந்தார்கள். ஒரு காலத்தில் அடிமையாக இருந்து உரிமை விடப்பட்டவரின் மகனை இஸ்லாத்தின் மிகப்பெரிய வெற்றியான மக்கா வெற்றியின் போது தமக்குப் பின்னால் அமர வைத்து பிறப்பால் அனைவரும் சமம் என்பதை இந்த அவனிக்கு உணர்த்தினார்கள். அடிமைகளை மிருகங்களை விடக்கேவலமாக நடத்தி வந்த குறைஷிகள் இக்காட்சியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த போதே, கஃபத்துல்லாஹ்விற்கு அருகில் வந்த பெருமானார் கீழே இறங்கி வலது பக்கத்தில் ஹழ்ரத் உஸாமாவும் இடது பக்கத்தில் ஹழ்ரத் பிலாலும் தொடர கஃபாவிற்குள் நுழைகிறார்கள். அடிமைகளின் உடல் கூட கஃபாவின் மீது பட்டுவிடக் கூடாது என்று கவனமாக பாதுகாத்து வந்த குறைஷிகளின் கண்முன்னே அடிமையாக இருந்தவரின் மகனையும் நீக்ரோ குலத்தைச் சேர்ந்த கருப்பரான ஹழ்ரத் பிலாலையும் அழைத்துக் கொண்டு கஃபாவினுள் பிரவேசித்த பெருமானாரின் இச்செயல் இஸ்லாத்திற்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. மனித சுதந்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.

மதுவிலக்கை நிகழ்த்திக் காட்டிய மாநபி
----------------------------------------------------------------

சமுதாயத்தைச் சீர்குலைப்பதில் மதுவின் பங்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஒழிக்க வேண்டிய அரசாங்கமே மதுபானக் கடைகளை நடத்தி கொளுத்த லாபம் கண்டு வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
கடந்த தீபாவளியன்று தமிழகத்தின் மது விற்பனை பற்றி மாலைமலர் வெளியிட்டுள்ள செய்தியைப்பாருங்கள்.

தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை என்பதால் விற்பனை களைகட்டியது. குறிப்பாக தீபாவளி நாளான நேற்று காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகள் திருவிழா போன்று காட்சியளித்தது.
இந்நிலையில், கடந்த மூன்று  நாட்களாக தமிழகத்தில் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.260 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு 70 கோடி ரூபாய் அதிகம் விற்பனையாகியுள்ளது.

. பெரியவர்கள் ஒருபுறமிருக்க, பள்ளிப்படிப்பை முடிப்பதற்குமுன்பே பெரும்பாலான மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி விடுவதாக சமீபத்தில் நடந்த ஒரு சர்வே கூறுகிறது.

படித்துப் பழக வேண்டிய வயதில் இளைஞர்கள் குடித்துப் பழகிவருவது வேதனையல்லவா? நாளைய தலைவர்களாக நாட்டை தூக்கி நிறுத்த வேண்டிய சமுதாயம் குடியில் வீழ்ந்து கிடந்தால் நாட்டின் எதிர்காலம் என்னாவது? சமுதாயத்தில் மெல்லமெல்ல ஊடுருவி இன்று மனித குலத்தையே ஆட்டிப் படைக்கும் மது என்ற அரக்கனை ஒழிக்க முடியாமல் உலகமே திணறிக் கொண்டிருக்கும் சமயத்தில் மதுவின்றி வாழ்வதையே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மதுவில் ஊறிப்போயிருந்த அரபகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்திய பெருமானாரின் புரட்சியை நாம் சற்று திரும்பிப் பார்ப்பது நல்லது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் மதுவின் தீமைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
[١]عن ابن عباس - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " اجتنبوا الخمر، فإنها مفتاح كل شر (2) " (3)

மது பாவங்கள் அனைத்துக்கும் தாய் என்றும் வெட்கக்கேடான அனைத்து செயல்களுக்கும் அது தான் அடிப்படை என்றும் வர்ணித்த பெருமானார்,
ஈமானும் மதுவும் ஒரு மனிதனிடம் ஒன்று சேராது என்று கூறி உண்மையான முஃமின் மது அருந்தக் கூடாது என்பதை எடுத்துச்  சொன்னார்கள்.  மேலும்  மதுவின்  விஷயத்தில் 10 மனிதர்களை பெருமானார் சபித்தார்கள்.
]عن ابن عباس - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -:  أتاني جبريل فقال: يا محمد، إن الله - عز وجل - قد لعن الخمر وعاصرها , ومعتصرها  وشاربها، وحاملها، والمحمولة إليه، وبائعها، ومبتاعها , وساقيها، ومستقيها  وآكل ثمنها

1.   (மதுவை தயாரிப்பதற்காக) பழங்களை பிழிபவன்
2.   மதுவை தயார் செய்பவன்
3.   குடிப்பவன்
4.   குடிக்கக்கொடுப்பவன்
5.   அதை கொண்டுவருபவன்
6.   கொண்டு வருமாறு கேட்பவன்
7.   விற்பவன்
8.   வாங்குபவன்
9.   மதுவை அன்பளிப்பு செய்பவன்
10.  அதன் வருமானத்தில் உண்பவன் (திர்மிதி)

மதுவின் தீமைகளை பெருமானார் உபதேசித்த போது சஹாபாக்களில் ஒரு கூட்டத்தினர் மது குடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டனர்.


எனினும் அது ஹராமாக்கப்படாததன் காரணமாக மற்றவர்கள் குடித்து வந்தனர். கடைசியாக மதுவை ஹராமாக்கி ஆயத் இறங்கிய போது அதை மக்களுக்கு அறிவித்து வர ஓர் அறிவிப்பாளரை பெருமானார் அனுப்பி வைக்கிறார்கள்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபியவர்களின் அறிவிப்பாளர் மதீனாவின் தெருக்களில் சுற்றி மது ஹராமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அறிவித்த போது யாருடைய கைகளில் மதுக்குவளைகள் இருந்ததோ அவற்றை அதே இடத்தில் அவர்கள் எறிந்து விட்டார்கள். மேலும் வீடுகளில் வைத்திருந்த மதுப்பானைகளை வெளியிலே கொண்டு வந்து உடைத்தார்கள். மதீனாவின் வீதிகளில் மழை வெள்ளம் போல் மது ஓடியது. அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் வரை மழை பெய்யும் போதெல்லாம் மண்ணிலிருந்து மதுவாடை வீச ஆரம்பித்துவிடும்.                                      (மஆரிபுல் குர்ஆன்)

மது வியாபாரம் செய்து வந்த ஒரு ஸஹாபி மது பானங்களை வாங்குவதற்காக அப்போது ஷாமுக்கு (சிரியா) சென்றிருந்தார். மது பானங்களை வாங்கிக் கொண்டு அவர் திரும்பி வரும் போது மதீனாவில் நுழைவதற்கு முன்பே மது ஹராமாக்கப்பட்ட செய்தி அவருக்குக் கிடைக்க, மதுவின் பீப்பாய்கள் அனைத்தையும் நகருக்கு வெளியிலே ஒரு மலையின் மீது வைத்துவிட்டு நேரே பெருமானாரிடம் சென்று, "எனது இந்த பொருட்களைப் பற்றி என்ன சட்டம்? நான் இவற்றை என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அனைத்தையும் கீழே கொட்டிவிடுமாறு பெருமானார் கூறியதும் உடனே எவ்வித தயக்கமுமின்றி மதீனாவுக்கு வெளியில் சென்று தாம் கொண்டு வந்த அனைத்து பீப்பாய்களையும் கவிழ்த்து விட்டார்.

எது பழக்கமாகிவிட்டதோ அதனை விடுவது எவ்வளவு சிரமம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தடையுத்தரவை காதில் வாங்கிய மறுகணமே உள்ளத்தில் ஊறிப்போயிருந்த பழக்கத்தை உடனே உதறித்தள்ளி சில நிமிடங்களுக்கு முன் எதன் மீது ஆசை கொண்டிருந்தார்களோ இப்போது அதன் மீது மிகவும் வெறுப்பு கொள்ளக்கூடியவர்களாக அவர்களை மாற்றினார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

1400 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாம் என்ற பெயரில் பெருமானார் ஏற்படுத்திய புரட்சி அன்றைய சமுதாயத்தை மாற்றியதோடு மறைந்து விடவில்லை. மாறாக உலக இறுதி நாள் வரை வரக்கூடிய முழு மனித சமுதாயத்தையும் அது அமைதிப் பாதைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. உலகில் ஐந்தில் ஒரு பகுதியினர் நேரடியாகவும் மற்றவர்கள் மறைமுகமாகவும் இம்மாண்பு மிகு நெறியை கடைப்பிடித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.