வியாழன், 28 நவம்பர், 2019

இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம்


بسم الله الرحمن الرحيم
இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம்
+++++++++++++++++++++++++++++++

قال الله تعالي : يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا...
قال رسول الله صلي الله عليه وسلم :
طلب كسب الحلال فريضة بعد الفريضة

இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் வணக்க வழிபாடுகளைப்போன்றே வியாபாரமும் கொடுக்கல் வாங்கலும் மார்க்கத்தின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். கொள்கைகளிலும் வணக்கங்களிலும் பல உட்பிரிவுகள் இருப்பது போல நமது மார்க்கம் வியாபாரத்திற்கும் பல கிளைச் சட்டங்களை விவரித்துள்ளது.
ஹலால்-ஹராம்‚மக்ரூஹ்-மக்ரூஹ் அல்லாதவை‚ ஆகுமான தூய்மையான பொருட்கள்-அசுத்தமான பொருட்கள் பற்றிய விரிவான சட்டங்களை எடுத்துரைத்து குர்ஆனும் ஹதீஸூம் நமக்கு தெளிவான வழிகாட்டலைத் தந்துள்ளன.

என்னதான் தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை பேணுதலோடு நிறைவேற்றி வருபவர்களாக இருந்தாலும் தங்களின் கொடுக்கல் வாங்கலை தூய்மையாக வைத்துக் கொள்வதிலும் அவற்றில் ஆகுமான மற்றும் ஆகாத வழிகளைக்கண்டறிவதிலும் கவனம் செலுத்தவில்லை என்றால் அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார்களாக ஆக முடியாது. இதனால் அவர்களின் வணக்கங்கள் குறைபாடுள்ளவையாகவே இருக்கும்.

வியாபாரமும் தீனைச்சேர்ந்ததே
---------------------------------------------------
கொடுக்கல் வாங்கல்‚வியாபாரம் சம்பந்தமாக ஷரீஅத் கூறும் சட்டங்களை பின்பற்றி நடப்பதில் முஸ்லிம்கள் பின்தங்கி இருப்பது வேதனைக்குரியதாகும். இந்தப்பின்னடைவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.இவர்கள் வெறும் கொள்கைகள் மற்றும் வணக்கங்களை மட்டுமே தீன் என்று விளங்கி வைத்துள்ளனர். வியாபாரத்தில் ஹலால் ஹராம் பற்றிய சிந்தனைகளை மறந்து அதில் அலட்சியமாக இருப்பதால் பொருளாதாரத்தில் அவர்கள் பின் தங்கி விட்டனர். வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அவர்களால் அடைய முடியவில்லை.

வியாபாரம் செய்வது வாழ்க்கைச் செலவினங்களைத் தேடுவதற்குரிய நல்ல வழிமுறை ஆகும். மார்க்கச்சட்டங்களுக்கு உட்பட்டு இதனைச் செய்யும்போது உலகிலும் அது இலாபம் தருவதோடு மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்தையும் ஏராளமான நன்மைகளையும் பெற்றுத் தரக் கூடியதாக இருக்கிறது.

வியாபாரத்தின் சிறப்புகள்
----------------------------------------
1يَأَيهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ (168)

2:168. மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.

37 - إنَّ اللهَ يُحِبُّ المؤمِنَ المُحتَرِف
வியாபாரம் செய்யும் முஃமினைஅல்லாஹ் விரும்புகிறான்.(தப்ரானி)

طلب كسب الحلال فريضة بعد الفريضة
ஹலாலான முறையில் சம்பாதிப்பது மற்றுமொரு மார்க்கக் கடமையாகும்.

நபிமார்களுடன் இருக்கும் நல்லோர்...
---------------------------------------------------------உலகைத் தேடுவதற்காகவும் செல்வத்தைச் சேர்ப்பதற்காகவும் செய்யும் வியாபாரத்தில் வியாபாரி தனது எண்ணத்தை சற்று மாற்றி அல்லாஹ்வின் கட்டளைப்படி ஹலாலான இரணத்தைத்தேடுவது‚ ஹலாலான வருமானத்தின் மூலம் பெற்றோர் மனைவி பிள்ளைகள் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் பராமரிப்பு‚ அவர்களின் தேவைகளை நிறைவேற்றித் தருதல் ‚ஏழை-எளியவர்களுக்கும் தேவையுடையவர்களுக்கும் உதவி செய்தல் ஆகிய காரணங்களுக்காக நான் இந்த வியாபாரம் செய்கிறேன். என்று நிய்யத் வைத்து இஸ்லாமிய சட்டங்களின் படி அந்த வியாபாரத்தை அவர் நடத்தினால் அல்லாஹ்வின் கிருபையால் அந்த வியாபாரம் பரகத் செய்யப்பட்டதாக ஆகி விடுகிறது. அவ்வாறு வியாபாரம் செய்வோர் மறுமையில் நபிமார்கள்‚நல்லோர்களுடன் இருப்பர் என்றும் நற்செய்தி கூறப்பட்டுள்ளது.

நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء
உண்மையும் நேர்மையும் நிறைந்த வியாபாரி(மறுமையில்) நபிமார்கள்‚உண்மையாளர்கள்‚ஷஹீதுகளுடன் இருப்பார்.(திர்மிதீ)

வேறோரு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

التجار يحشرون يوم القيامة فجارا الا من التقي وبر وصدق
இறையச்சம் கொண்ட உண்மைபேசி(வியாபாரத்தில்)நல்ல முறையில் நடந்து கொள்பவர்களைத்தவிர (மற்ற) வியாபாரிகள்அனைவரும் பாவிகளாக எழுப்பப்படுவார்கள்.
(தப்ரானி)

இவ்விரு ஹதீஸ்களிலும் வியாபாரிகளின் வெளிப்படையான இரண்டு நிலைகளை கூறப்பட்டுள்ளது. ஒரு ஹதீஸில் அவர்களை புகழ்ந்தும் மற்றொரு ஹதீஸில் இகழ்ந்தும் கூறப்பட்டுள்ளது.

நல்ல வியாபாரியும் கெட்டவியாபாரியும்
---------------------------------------------------------------
எந்த வியாபாரி நல்ல நிய்யத்துடனும் நேர்மையாகவும் தனது வியாபாரத்தின் மூலம் ஹலாலானதைத் தேட வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்கிறாரோ அவரின் மறுமைநிலை நல்லதாக இருக்கும். அவரது
நல்லெண்ணம் மற்றும் நேர்மையின் காரணமாக மறுமையில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பார்.

எந்த வியாபாரி வியாபாரத்திற்கு இஸ்லாம் கூறும் அடிப்படைச் சட்டங்களை விட்டும் விலகி ஹலால் ஹராம் வித்தியாசமின்றி செல்வம் சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஏமாற்றி‚பொய்கூறி‚மோசடி செய்து‚பிறர் பொருளை அபகரித்து இவ்விதமாக வியாபாரம் செய்கிறாரோ அவரைத்தான் நபியவர்கள் பாவி என்று கூறினார்கள். மறுமையில் இவர் கெட்டவர்களுடன் இருப்பார்.

நமது மார்க்கமேதைகள் குர்ஆன்-ஹதீஸிலிருந்து வெற்றிகரமான-இலாபகரமான வியாபாரத்துக்குரிய சில அடிப்படைச் சட்டங்களை எடுத்துரைத்துள்ளனர். அவற்றைச்செயல்படுத்திவியாபாரம் செய்யும் போது அவ்வியாபாரம் உலகிலும் இலாபமளிக்கும்‌. மறுமையிலும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்க காரணமாகிவிடும். அதாவது அந்த வியாபாரம் தீனைச்சேர்ந்ததாக -ஓர் இபாதத்தாக மாறிவிடும். எனவே ஒரு முஸ்லிம் வியாபாரி தான் செய்யும் வியாபாரத்தில் இந்த சட்டங்களை கடைபிடிப்பது அவசியமாகும்.

உண்மைபேசுதல்
-----------------------------
பொருளை விற்பனை செய்யும் போது எப்போதும் உண்மையே பேச வேண்டும். பொய்சொல்லியோ அல்லது பொய் சத்தியம் செய்தோ வியாபாரம் செய்தால் அந்த நேரத்தில் இலாபம் கிடைத்தாலும் உண்மையில் அந்த வியாபாரத்திலும் அதன் வருமானத்திலும் பரகத் எடுபட்டுப்போய்விடும்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

فان صدقا وبينا بورك لهما في بيعهما وان كتماوكذبا محقت بركة بيعهما.
விற்பவரும் வாங்குபவரும் உண்மையைப்பேசி‚வியாபாரத்தை தெளிவுபடுத்திக் கொண்டால் அவர்கள் கொடுக்கல் வாங்கலில் பரகத் செய்யப்படுகிறது. அவ்விருவரும் எதையேனும் மறைத்துக் கொண்டால் அல்லது பொய் பேசினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படுவதில்லை‌.   (  بخاري)

மற்றொரு ஹதீஸில் உள்ளது.

ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم: المسبل إزاره، والمنان فيما أعطى، والمنفق سلعته بالحلف الكاذب،

மறுமை நாளில் மூன்று பேரிடம் அல்லாஹ் பேச மாட்டான்.அவர்களை(அருள் பார்வையால் பார்க்க மாட்டான். அவர்களை தூய்மைப்படுத்த மாட்டான்.(அவர்களுள் ஒருவர்) பொய்ச் சத்தியம் செய்து தனது பொருளை  விற்க முயற்சிப்பவர்.
(முஸ்லிம்)
வியாபாரம் செய்பவர் பொய் பேசுவது‚பொய்ச்சத்தியம் செய்வதை விட்டும் முழுமையாக தவிர்த்துக்கொள்ள வேண்டும். பொய்சொல்லி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது பெரும் குற்றமாகும்.


பொருளிலுள்ள குறையை மறைக்கக்கூடாது.
----------------------------------------


வியாபாரப்பொருளிலுள்ள குறையை மறைத்து‚ வாங்குபவரை ஏமாற்றுவதை விட்டும் முஸ்லிம் வியாபாரி தவிர்ந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் வியாபாரிகள் போலியான பொருளை தரமான பொருள் என்று கூறி விற்கின்றனர். சில நேரங்களில் அதிலுள்ள குறைகளை மறைத்து விடுகின்றனர். பழையதை புதியது என்று கூறி விற்று விடுகின்றனர்.
அப்படிப்பட்ட பொருளை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டுவதை தங்களுடைய திறமையாகவும் தந்திரமாகவும் கருதிக்கொள்கின்றனர். நினைவில் வையுங்கள். இது புத்திசாலித்தனமல்ல. மிகப்பெரிய மோசடியாகும். அதனால் பலருக்கு பாதிப்புகள்‚வியாதிகள்‚ஏன் மரணம் கூட ஏற்படலாம்.


عن أبي هريرة: أن رسول الله مر على صبرة طعامٍ، فأدخل يده فيها، فنالت أصابعه بللًا، فقال: ((ما هذا يا صاحب الطعام؟))، قال: أصابته السماء يا رسول الله! قال: ((أفلا جعلته فوق الطعام كي يراه الناس، من غش فليس مني))؛ رواه مسلم.
ஒருமுறை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கடையில் விற்பனைக்குவைக்கப்பட்டிருந்த தானியங்களைப்பார்த்தார்கள்.அந்த தானியக்குவியலில் தங்களின் விரல்களை நுழைத்தார்கள். விரல்களில்ஈரம் பட்டது.
"இது என்ன?" என்று அந்த வியாபாரியிடம் கேட்க‚ அல்லாஹ்வின் தூதரே! இந்த தானியங்கள் மழையில்
நனைந்து விட்டன என்று கடைக்காரர் கூறினார். அப்படியானால் நனைந்து விட்ட தானியங்களை மக்கள் பார்க்கும் விதத்தில் ஏன் மேலே வைக்கவில்லை
من غش فليس مني
ஏமாற்றுபவர் நம்மைச்சேர்ந்தவரல்ல
என்று கூறினார்கள்.                ( முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் உள்ளது.
من بإعداد عيبا لم ينبه عليه لم يزل في مقت الله
பொருளிலுள்ள குறையை கூறாமல் விற்பவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்காகி விடுவார். (இப்னுமாஜா)
என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

வாஸிலா இப்னுஅஸ்கஃ ( ரஹ்) அவர்கள் தமது ஒட்டகம் ஒன்றை 300திர்ஹங்களுக்கு விற்ற பின்னர் அதனை வாங்கியவரிடம் இது பயணத்திற்கா? அல்லது இறைச்சிக்கா? என்று கேட்டார்கள். அவர் பயணத்திற்காகவே வாங்கியுள்ளேன் என்று கூறிய போது‚அப்படியானால் 100திர்ஹங்கள் குறைத்துக் கொள்ளுங்கள். இதன் கால்களில் குறையுள்ளது என்று கூறினார்கள்.

வியாபாரப்பொருட்களிலுள்ள குறைகளை மறைக்கக்கூடாதுஎன்பது ஷரீஅத் கூறும் வியாபாரச்சட்டங்களில் மிக முக்கியமானதாகும். அவற்றில் ஏதேனும் குறையிருந்தால் அதனைமிகத் தெளிவாக கூறிவிட வேண்டும். அதனால் வியாபாரத்தில் மறைமுகமான முறையில் பரகத் ஏற்படும்.


அளவில் குறைவு செய்யக்கூடாது
----------------------------------------
வியாபாரத்திலோ‚கொடுக்கல் வாங்கலிலோ வாடிக்கையாளர் மற்றும் பாத்தியப்பட்டவருக்கு கொடுக்க வேண்டிய அளவைவிட குறைத்துக் கொடுப்பது பெரும்பாவமாகும். இச்செயலிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.


وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ (4) لِيَوْمٍ عَظِيمٍ (5) يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ (6)

அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்து வாங்குகிறார்கள். மற்றவர்களுக்கு அளந்து கொடுத்தால் குறைத்து அவர்களை நஷ்டப்படுத்தி விடுகின்றனர். மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? என்று குர்ஆனில் 86: 1, 2, 3 ல் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

பிறர் தனக்கு ஏதேனும் தர வேண்டியதிருந்தால் அதன் அளவைவிட அதிகமாக அதனை வசூலித்தலும் தான் பிறருக்கு ஏதேனும் தர வேண்டியதிருந்தால் அதன் அளவை குறைத்துக் கொடுப்பதும் இன்று மக்களின் பொதுவான நடைமுறையாக உள்ளது. இது மார்க்கத்துக்கு முரணான‚மார்க்கம் விரும்பாத நடைமுறையாகும். அவ்வாறு நடப்பவர்களுக்கு அல்லாஹ் நாசத்தையும் நஷ்டத்தையுமே ஏற்படுத்துவான்.

தான்வாங்கும் போது அளவாக வாங்கிக் கொள்வதும் பிறருக்கு தர வேண்டியதை சற்று அதிகமாக நிறுத்துக்கொடுப்பதும் இஸ்லாம் கூறும் வியாபாரத்தின் நேர்மையாகும்.
إذا وزنتم فارجحوا
நீங்கள் நிறுக்கும் போது அதிகமாக நிறுத்துக்கொடுங்கள். என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்‌ (இப்னுமாஜா)


நபி ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் உம்மத்தினர் அளவில் குறைவு செய்ததால் அவர்கள் அழிக்கப்பட்ட வரலாறு நமக்குத் தெரிந்ததே.

وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ * بَقِيَّتُ اللَّهِ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ * قَالُوا يَا شُعَيْبُ أَصَلَاتُكَ تَأْمُرُكَ أَنْ نَتْرُكَ مَا يَعْبُدُ آبَاؤُنَا أَوْ أَنْ نَفْعَلَ فِي أَمْوَالِنَا مَا نَشَاءُ إِنَّكَ لَأَنْتَ الْحَلِيمُ الرَّشِيدُ
قال تعالى: ﴿ وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَأَخَذَتِ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ * كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا أَلَا بُعْدًا لِمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُودُ ﴾ [هود: 94، 95]

ஹராமானவற்றை விற்கக்கூடாது.
---------------------------------------
இஸ்லாம் எந்தப் பொருட்களை ஹராமாக்கியுள்ளதோ அந்தப் பொருட்களை விற்பதும் வாங்குவதும் ஹராமாகும். உதாரணமாக மது‚போதைதரும் பொருட்கள் வட்டி வாங்குவது கொடுப்பது இசைக்கருவிகள் ஆபாசமான புத்தகங்கள் நாவல்கள் போன்றவை.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ان الله ورسوله حرم بيع الخمر والميتة والخنزير والاصنام
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது٫தானாக இறந்தவை٫ பன்றி٫சிலைகள் ஆகியவற்றை விற்பதையும் வாங்குவதையும் ஹராமாக்கியுள்ளார்கள்.
(புஹாரி)

ان الله إذا حرم شيئا حرم ثمنه
அல்லாஹ் ஒரு பொருளை ஹராமாக்கினால் அதன் கிரயத்தொகையையும் ஹரமாக்கிவிடுவான்.
(ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)


மேற்கூறப்பட்ட ஹதீஸில் சில பொருட்களே கூறப்பட்டிருந்தாலும் அனைத்து ஹராமான பொருட்களின் சட்டமும் இதுதான். எனவே தடை செய்யப்பட்ட பொருட்களை ஒரு முஸ்லிம் விற்பனை செய்யக்கூடாது. அதனால் பாவம் ஏற்படுவதோடு இறைவனுக்கு மாறு செய்வதும் அதற்கு துணை போவதும் ஏற்படுகிறது.

இறைவணக்கங்களை விட்டு விடக்கூடாது.
---------------------------------------
வியாபாரத்தில் ஈடுபடும்போது அல்லாஹ்வுக்குச்செய்ய வேண்டிய கடமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் மூழ்கி அல்லாஹ்வை மறந்து விடக்கூடாது.
வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கும் போது தீனுடைய ஏதேனும் ஒரு தேவை வந்தால் ஒரு முஃமின் தீனுடைய தேவைக்கே முன்னுரிமை அளிப்பார். அதன்மூலம் இம்மை மறுமை இரண்டிலும் அவர் வெற்றியாளராக ஆகி விடுவார்.

رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله

அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் அவர்களுடைய வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அவர்களின் கவனத்தை திருப்பி விடாது.  ( அந்நூர்:37)
என்று இத்தகையவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் பேசுகிறான்.

ஸஹாபாக்களும் வியாபாரமும்
-------------------------------------
வியாபாரம் செய்வது தான் வாழ்வாதாரத்தின் அடிப்படை.வியாபாரம் செய்யாமல் வாழவே முடியாதுஎன்ற எண்ணம் ஒரு முஃமினுக்கு வந்து விடக்கூடாது. மாறாக அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் மறுமையில் அவன் தரும் அருட்கொடைகளையுமே பெரிதாக கருத வேண்டும். உள்ளத்தில் உலக மோகம் வந்து விடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
சங்கைக்குரிய ஸஹாபாக்களும் வியாபாரம் செய்தார்கள். ஆனால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை முன்னால் வரும் போது வியாபாரத்தை விட்டு விட்டு அக்கடமையை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்தனர்.

ஹழ்ரத் கதாதா (ரலியல்லாஹூஅன்ஹூ) அவர்கள் கூறினார்கள்.


وقال قتادة كان القوم يتبايعون ويتجرون ولكنهم إذا نابهم حق من حقوق الله لم تلههم تجارة ولا بيع عن ذكر الله حتى يؤدوه إلى الله
ஸஹாபாக்கள் வியாபாரம் செய்து வந்தார்கள்.ஆனால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை ஏதேனும் வந்து விட்டால் அதனை அல்லாஹ்வுக்காகச் செய்து அவனை நினைவு கூர்வதை விட்டும் எந்த வியாபாரமும் அவர்களைத் தடுக்கவில்லை. (புஹாரி)

தான தர்மங்களை செய்து வர வேண்டும்.
-----------------------------------------------------------------
உங்களின் செல்வத்திலிருந்து ஏழை எளியவர்களுக்கும் பங்கு கொடுங்கள். நீங்கள் ஜகாத் கடமையானவராக இருந்தால் சரியான முறையில் கணக்கிட்டு உங்களின் ஜகாத்தை வழங்குங்கள். உங்கள் மீது ஜகாத் கடமையாக இல்லாவிட்டாலும் ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை கொடுத்து வாருங்கள். சதகா செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் யாசகம் கேட்போரை விரட்டாதீர்கள்.
அதேபோல் தீனுடைய ஸ்தாபனங்கள் மற்றும் சமுதாயப் பணிகளுக்கு தாராளமாக உதவி செய்து உங்களின் சமுதாய அக்கறையையும் தீனுக்காக அர்ப்பணிக்கும் உணர்வையும் வெளிப்படுத்துங்கள்.

மறுமையின் வியாபாரம்
----------------------------------------
இதுவரை சொல்லப்பட்டது உலக வியாபாரத்தைப்பற்றியது. ஒரு முஸ்லிம் உலக வியாபாரத்தை விட மறுமை வியாபாரத்தில் ஈடுபடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அதில்தான் நிரந்தரமான முடிவில்லாத இலாபம் இருக்கிறது.அந்த வியாபாரத்தை செய்வதன்பால் ஆர்வமூட்டி ‚நரக நெருப்பை விட்டும் அது பாதுகாக்கும் வியாபாரம் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.


{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ (10) تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ (11) يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (12)} [الصف
(10) நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

(11)  (அதாவது:)அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்)(.61:10‚11)

உலகில் செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் கூறும் வழிமுறைப்படி செய்வது முஃமின்கள் மீது அவசியமாகும். ஏனெனில் முஃமின்கள் இஸ்லாமிய வழிமுறைப்படி நடக்க கடமைப்பட்டவர்கள். எனவே குர்ஆன் ஹதீஸின் ஒளியில் அறுவுறுத்தப்பட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு செய்யும் வியாபாரம்தான் இஸ்லாமிய வியாபாரமாகும்.
இன்று ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உலக மோகமும் செல்வத்தை சேகரிக்கும் ஆசையும் குடிகொண்டுள்ளது.அச்செல்வம் ஹலாலான முறையில் வந்தாலும் சரி.ஹராமான வழியில் வந்தாலும் சரி.அதன்விளைவாக இஸ்லாமிய இல்லங்களில் இருக்க வேண்டிய ஈமானிய உயிரோட்டம் இல்லாமல் போய்விட்டது. பணப்பெருக்கம்இருந்தும் வாழ்க்கையிலும் அமல்களிலும் பரகத் இல்லை. உண்மையான அமைதியையும் உள்ளத்தின் நிம்மதியையும் இழந்து விட்டோம்.
இழந்து போன நிம்மதியையும் மகிழ்ச்சியான வாழ்வையும் திரும்பப்பெற விரும்பினால் இஸ்லாமிய முறைப்படி வியாபாரம் செய்யுங்கள். அத்துடன் நரகத்தைவிட்டும் பாதுகாக்கும் மறுமையின் வியாபாரத்தையும் விட்டு விடாதீர்கள். இதுதான் உண்மையான வெற்றியும் நிரந்தர நிம்மதியுமாகும்.