بسم الله الرحمن الرحيم
வஸிய்யத்தின் சட்டங்கள்
**********************
نحمده ونصلى على رسوله
الكريم، أما بعد
قال الله تعالى فى كتابه
الحكيم
كُتِبَ عَلَيْكُمْ إِذَا
حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِن تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ
وَالْأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ
عن ابى امامة الباهلى
رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ان الله تبارك وتعالى قد
أعطى كل ذى حق حقه فلا وصية لوارثٍ (ترمذى)
அல்லாஹு தஆலா நமக்கு வழங்கியுள்ள மார்க்கமான தீனுல்
இஸ்லாம் பரிசுத்தமான மார்க்கம் மட்டுமல்ல. பரிபூரணமான மார்க்கமும் கூட. ஈருலகிலும்
நமக்குத் தேவையான அனைத்து நலவுகளையும் அல்லாஹ் இந்த தீனில் வைத்திருக்கிறான்.
வாழும் காலத்தில் ஒரு முஃமின் ஆற்ற வேண்டிய கடமைகளை
தனது வேதத்தின் வாயிலாகவும் தனது திருத்தூதரின் மூலமாகவும் மிகத் தெளிவாக
விளக்கித்தந்த ரப்புல் ஆலமீன் அந்த முஃமின் தனது வாழ்வின் அந்திம காலத்தில் தனது
ரப்பைச் சந்திக்கத் தயாராகுவதற்கு முன் அவர் ஆற்ற வேண்டிய கடமைகளையும் தனது
பரிசுத்த வேதத்தில் எடுத்துரைத்துள்ளான். அந்தக் கடமைகளில் ஒன்றுதான் வஸிய்யத்
செய்தலாகும். உயில்,
இறுதிவிருப்பம்,
மரண சாசனம் என்றெல்லாம் கூறப்படுகின்ற வஸிய்யத்தின் விஷயத்தில் இன்றைய மக்கள்
பெரும்பாலும் கவனக்குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். வாழ்க்கை முழுவதும் கடுமையாக
உழைத்து சொத்துக்களைச் சேர்க்கும் ஒருவர் வஸிய்யத் மற்றும் வராஸத் உடைய சட்டங்களை
அறிந்து அவற்றை சரியாக செலவிடாததால் அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆகிவிடுகிறார்.
வாழும்போது மட்டுமின்றி நமது மரணத்துக்குப்
பின்னரும் நமது செல்வம் நமக்கு பயனளிக்கும் வகையில் அதை எப்படி செலவிட வேண்டும்
என்பது குறித்த மார்க்கச் சட்டங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
வஸிய்யத் என்றால் என்ன?
*********************
ஒருவர் இறப்பதற்கு முன் அல்லது இறக்கும் தருவாயில்
தனது வாரிசாக இல்லாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது
பள்ளிவாசல்,
மத்ரஸா,
அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தில் ஒரு பகுதியை சொந்தமாக்கி
வைப்பதற்கு வஸிய்யத் என்று கூறப்படும்.
“நான் இன்னாருக்கு இவ்வளவு தரவேண்டும் என்று
வஸிய்யத் செய்கிறேன்”
“எனது மரணத்துக்குப் பிறகு எனது சொத்திலிருந்து
இவ்வளவை இன்னாருக்குத் தரவேண்டும் அல்லது இன்ன காரியத்திற்காக அதனை செலவிட
வேண்டும்”
என்று கூறுவது வஸிய்யத்தாகும். வியாதியின் போது
கூறினாலும் சரி,
ஆரோக்கியமான நிலையில் கூறினாலும் சரி. அந்த வியாதியில் அவர் மரணித்தாலும்
சரி. அல்லது அதற்குப்பிறகு மரணித்தாலும் சரி.
வஸிய்யத் செய்கிறேன் என்றோ, மரணத்துக்குப்பின்
என்றோ கூறாமல் “எனது இன்ன பொருளை
இன்னாருக்கு கொடுத்துவிடுங்கள். இன்ன காரியத்தில் செலவிடுங்கள் என்று கூறுவது
வஸிய்யத்தாக ஆகாது
(துர்ருல் முக்தார்)
அதேபோல் பள்ளி, மத்ரஸா கட்டுவதற்காகவோ ஹஜ்ஜு செய்வதற்காகவோ, அல்லது யாருக்கேனும்
அன்பளிப்பு,
ஸதகா செய்வதற்காகவோ ஒருவர் பணத்தை எடுத்து வைத்திருந்து அவற்றை
நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்டாலும் அதை வஸிய்யத்தாக கருதப்படாது. மாறாக
அப்பொருள் வாரிசுகளின் பாகத்தில் சேர்ந்துவிடும்.
(முஃபீதுல் வாரிஸீன், பக்-29)
இறப்பு நெருங்கும் ஒருவர் தனது இறப்புக்குப்பின்
தமது பெற்றோர்,
மனைவி,
பிள்ளைகள் போன்றோருக்கு தமது சொத்திலிருந்து எவ்வளவு கிடைக்க வேண்டும்
என்று வஸிய்யத் செய்வது ஆரம்பத்தில் கடமையாக ஆக்கப்பட்டிருந்தது.
இதைப்பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்.
كتب عليكم اذا حضر أحدكم
الموت _الخ
உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர்
செல்வத்தை விட்டுச் சென்றால் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அழகிய முறையில்
வஸிய்யத் செய்வது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. இறையச்சம் உடையோருக்கு இது
கடமையாகும்.
(2:180)
அதன் பிறகு பாகப்பிரிவினை தொடர்பாக திருமறையில் (4:11,12) ஆயத்துகள்
அருளப்பட்டபின் வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்ய வேண்டும் என்ற சட்டம்
மாற்றப்பட்டுவிட்டது.
அல்லாஹ் நிர்ணயித்துள்ள பங்குகளை உரியவர்கள்
வஸிய்யத் ஏதுமின்றி சட்டப்படி பெறுவார்கள் என்ற நிலை உருவாகிவிட்டது. எனவே வாரிசு
அல்லாதவருக்கு மட்டுமே வஸிய்யத் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் மாற்றம்
செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தமது
ஹஜ்ஜின் சமயத்தில் கூறினார்கள்:
ان الله تبارك وتعالى قد
أعطى كل ذى حق حقه فلا وصية لوارث
அல்லாஹு தஆலா ஒவ்வோர் உரிமையாளருக்கும் அவரவரது
உரிமையை வழங்கிவிட்டான். எனவே (சொத்துரிமை பெறும்) வாரிசுதாரர் எவருக்கும்
வஸிய்யத் செய்தல் கூடாது. (திர்மிதி)
வஸிய்யத் செய்வதன் அவசியம்
************************
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்
ما حق امرئ مسلم له شيئ
يوصى فيه يبيت ليلتين الا ووصيته مكتوبة عنده
வஸிய்யத் செய்யும் அளவு ஏதேனும் பொருளைப்
பெற்றுள்ள எந்த முஸ்லிமுக்கும் அவர் அதற்குரிய வஸிய்யத்தை எழுதி வைக்காமல் இரண்டு
இரவுகளை கழிப்பதற்கு அனுமதியில்லை என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி,
முஸ்லிம்)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதை நான் கேட்டதிலிருந்து எனது வஸிய்யத்
சாசனம் என்னிடம் தயாராக இல்லாமல் ஓர் இரவைக் கூட நான் கழிக்கவில்லை.
(முஸ்லிம்)
மேற்கண்ட ஹதீஸிலிருந்து வசதிபடைத்த எவரும் வஸிய்யத்
செய்வதில் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது என்று விளங்குகிறது.
அல்லாஹ்வின் வழமை
ஒரு காரியம் நடைமுறையில் பிந்தியதாக இருந்தாலும்
அது மிக முக்கியமானதாக இருந்தால் அதனை முதலில் கூறுவது அல்லாஹு தஆலாவின்
வழமையாகும். அக்காரியத்தில் தனது அடியார்கள் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது, தவறிழைத்து
விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாகும். உதாரணமாக திருக்குர்ஆன் 62:2 வது ஆயத்தில்...
“அவன்தான் மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான்” என்று அல்லாஹ்
கூறியுள்ளான். வாழ்க்கைக்குப் பிறகே மரணம் ஏற்படும் என்றாலும் மரணத்திற்குப்
பிறகுள்ள வாழ்க்கையை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக அல்லாஹ் மரணத்தை
முதலிலும் வாழ்வை பின்னரும் கூறியுள்ளான்.
திருக்குர்ஆன் 3:55 வது ஆயத்தில்...
“ஈஸாவே! உம்மை நாம் மரணமடையச் செய்வோம், இன்னும் நம் பக்கமாக
உயர்த்திக் கொள்வோம்”
என்று கூறியுள்ளான். இதில் முதலில் ஈஸா (அலை) வானின் பக்கம்
உயர்த்தப்பட்டுவிட்டார்கள் அவர்கள் மரணமடைவது என்பது தஜ்ஜாலை கொல்வதற்காக அவர்கள்
மீண்டும் இறங்கிவந்த பின்னரே நடைபெறும். கிறிஸ்தவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களை
கடவுளாக ஆக்கிய காரணத்தால் அவர்களும் மனிதர்தான். மற்றவர்களைப்போல அவர்களுக்கும்
மரணம் ஏற்படும் என்பதை உணர்த்துவதற்காக அல்லாஹ் அவர்களின் மரணத்தை முதலில்
கூறியுள்ளான்.
இதேபோல் வஸிய்யத் சம்பந்தமாக அல்லாஹ் கூறும்போது 4:11,12 ஆகிய இரண்டு
ஆயத்துக்களில் நான்கு இடங்களில் வஸிய்யத்தை நிறைவேற்றுவதை முதலிலும் கடன்களை
அடைப்பதை அடுத்தும் கூறியுள்ளான். ஆனால் கடன்களை அடைத்த பிறகே வஸிய்யத்தை
நிறைவேற்ற வேண்டும் என்பது ஷரீஅத் சட்டமாகும். அல்லாஹ் இவ்வாறு கூறக் காரணம்
என்னவெனில் கடன் கொடுத்தவர்கள் எப்படியும் இறந்தவரின் வாரிசுகளிடம் வந்து கடனை
பெற்றுக் கொண்டு விடுவர். அதனை வாரிசுகள் மறுக்க முடியாது. ஆனால் இறந்தவர்
யாருக்கேனும் ஒரு தொகையை வஸிய்யத் செய்திருந்தால் அதனை வாரிசுகள் கொடுக்காமல்
இருந்துவிட வாய்ப்புள்ளது. அவரும் அதனை கொடுத்தாக வேண்டும் என்று கடன்
கொடுத்தவர்களைப்போல உரிமை கோர முடியாது. எனவேதான் வஸிய்யத்தின் விஷயத்தில்
கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக அதனை அல்லாஹ் முதலில்
கூறியுள்ளான்.
வஸிய்யத் செய்வதற்கு கிடைக்கும் நன்மை
************************
தனது சொத்திலிருந்து எவர் வஸிய்யத் செய்கிறாரோ
அவருக்கு கிடைக்கும் நன்மையைப் பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய நபிமொழியை
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
من مات على وصية مات على
سبيل وسنة ومات على تقيّ وشهادة ومات مغفورا له
வஸிய்யத் செய்துவிட்டு இறந்தவர் நேரான வழியில், சுன்னத்தின் படி
இறந்தவராவார். இறையச்சம்,
ஷஹாதத்தின்படி இறந்தவராவார். (அதாவது இறையச்சம் உள்ளோர், ஷஹீதுகளின் அந்தஸ்து
அவருக்கு கிடைக்கும்) மேலும் அவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்
இறந்தவராவார்.
(இப்னுமாஜா)
வஸிய்யத் ஏற்படுத்தப்பட்ட காரணம்
*******************
மனிதன் தனது ஜீவிய காலத்தில் செய்யத்தவறிய சில
கடமைகளையும் நற் செயல்களையும் தனது மரண வேளையில் உணரும்போது அப்போது அவற்றைச்
செய்ய ஆற்றல் இருப்பதில்லை. எனவே வஸிய்யத்தின் மூலம் விடுபட்ட கடமைகளுக்கு
பரிகாரம் தேடிக்கொள்ளவும் தனது மரணத்துக்குப் பிறகும் நன்மை கிடைக்கும் வகையில்
தனது சொத்திலிருந்து ஏற்பாடு செய்து கொள்ளவும் அல்லாஹ் வஸிய்யத்தை
ஏற்படுத்தியிருக்கிறான்.
வஸிய்யத் யாருக்குச் செய்ய வேண்டும்?
******************
தான் இறந்த பிறகு தனது சொத்திலிருந்து
யாருக்கெல்லாம் பாகம் கிடைக்குமோ அத்தகைய வாரிசுதாரர்களுக்கு வஸிய்யத் செய்வது
கூடாது. வாரிசுகள் அல்லாத உறவினர்கள், நண்பர்கள், ஏழை, எளியோர்களுக்கு வஸிய்யத் செய்யலாம். மதரஸா, பள்ளிவாசல் போன்ற
தீனுடைய ஸ்தாபனங்களுக்கும் இதர நன்மையான காரியங்களுக்கும் வஸிய்யத் செய்யலாம்.
தந்தையோடு சேர்ந்து சிறுவயதிலிருந்து பாடுபட்டு
சொத்துகள் உருவாக காரணமாக இருந்த மூத்த மகன் தந்தைக்கு முன்பே மரணித்துவிட்டார்.
இப்போது தந்தையின் சொத்திலிருந்து ஷரீஅத் சட்டப்படி அந்த மகனின் அநாதைப்
பிள்ளைகளுக்கு பங்கு கிடைக்காது என்பதால் வஸிய்யத் செய்வதன் மூலம் தனது பேரன்
பேத்திகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்கலாம்.
அதேபோல ஒருவர் குழந்தை இல்லாமல் வேறு ஒருவரின்
குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். பத்து பதினைந்து வருடங்கள் கழித்து அவருக்கு
குழந்தைகள் பிறந்தன. இப்போது தனது சொத்திலிருந்து வளர்ப்பு மகனுக்கு
பாகப்பிரிவினை கிடையாது என்பதால் வஸிய்யத்தின் மூலம் அவருக்கு சொத்து கிடைக்க வழி
செய்யலாம்.
எவ்வளவு வஸிய்யத் செய்ய வேண்டும்?
***********************
குறைவான சொத்துள்ளவர்கள் வஸிய்யத் செய்ய
வேண்டியதில்லை. அந்த சொத்துக்களை வாரிசுகளுக்காக விட்டுவிடவேண்டும். அதிகமான
சொத்துள்ளவர்கள் தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியில் வஸிய்யத் செய்ய வேண்டும்.
மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாக வஸிய்யத் செய்திருந்தால் அவரது
மரணத்துக்குப்பிறகு அவரது வாரிசுதாரர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தால் அந்த
வஸிய்யத்தை நிறைவேற்றலாம். வாரிசுதாரர்கள் ஒப்புதல் அளிக்காவிட்டாலோ அல்லது
அவர்கள் அனைவரும் பருவ வயதை அடையாதவர்களாக இருந்தாலோ அப்போது மூன்றில் ஒரு
பகுதியை விட அதிகமாக வஸிய்யத்தை நிறைவேற்றக் கூடாது.
இதேபோல் ஒருவர் தனது வாரிசுகளுள் ஒருவருக்கு
வஸிய்யத் செய்திருந்து அவரது மரணத்துக்குப் பிறகு அதனை மற்ற வாரிசுகள் ஒப்புதல்
கொடுத்தால் நிறைவேற்றலாம். இல்லாவிட்டால் அந்த வஸிய்யத் செல்லாது. வஸிய்யத்
செய்தவர் உயிரோடு இருக்கும்போதே மேற்படி சட்டத்தில் வாரிசுதாரர்கள் ஒப்புதல்
கொடுத்தால் அது செல்லாது.
(ரத்துல் முக்தார் 10/279)
மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வஸிய்யத் செய்தல்
கூடாது என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்குச்
சென்றிருந்த சமயத்தில் நபித்தோழர் ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கடுமையாக
நோய்வாய்ப்பட்டு இருந்தார்கள். உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை அன்னாருக்கு
ஏற்படவில்லை. அவர்களை நலம் விசாரிப்பதற்காக நபியவர்கள் சென்றார்கள். ஸஃது (ரலி)
அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே!
எனக்கு செல்வம் உள்ளது. என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசுகள்
இல்லை. ஆகவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை (நற்காரியங்களில் செலவு
செய்ய) நான் வஸிய்யத் செய்யலாமா?” அதற்கு, ‘வேண்டாம்’ என நபி (ஸல்) கூறினார்கள். மீண்டும் அவர் “சொத்தில் பாதியை
வஸிய்யத் செய்யலாமா?”
என்று கேட்க,
அதற்கும் “வேண்டாம்” என்று கூறினார்கள்.
மீண்டும் அவர் “(என் செல்வத்தில்) மூன்றிலொரு பாகத்தை...? என்று கேட்டபோது, நபியவர்கள் “மூன்றிலொரு பாகம்
(வேண்டுமானால்) வஸிய்யத் செய்யலாம். ஆனால் அதுகூட அதிகம்தான்” என்று கூறினார்கள்.
பின்னர்,
انك ان تذر ورثتك أغنياء
خير من ان تذرهم عالة يتكففون الناس
உம்முடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக
விட்டுச் செல்வதை விட அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே
நல்லதாகும் என்று கூறினார்கள். (புகாரி)
ஒருவருக்கு வாரிசுகள் யாருமே இல்லையெனில் தனது
முழுச் சொத்தையும் அவர் வஸிய்யத் செய்யலாம். அதே போல் ஒரு பெண்ணுக்கு கணவரைத்
தவிர வேறு வாரிசுகள் இல்லையெனில் தனது பாதிச் சொத்தை வஸிய்யத் செய்யலாம்.
(தப்யீனுல் ஹகாயிக் 6/183)
தான் வஸிய்யத் செய்தவைகளை உயிரோடு இருக்கும்போதே
ஒருவர் நிறைவேற்றினால் அது அன்பளிப்பாகவோ, தானமாகவோ கருதப்படும். வஸிய்யத்தாக ஆகாது.
வாரிசு அல்லாதவருக்கு வஸிய்யத் செய்தார். பிறகு
வஸிய்யத் செய்தவர் இறப்பதற்கு முன்பே அவர் வாரிசாக ஆகிவிட்டார் என்றால் அவர் செய்த
வஸிய்யத் செல்லாது. (மற்ற வாரிசுகள் அனுமதித்தால் கூடும்.) உதாரணமாக தனது
சகோதரனுக்கு வஸிய்யத் செய்தார். மகன் இருப்பதால் சகோதரர் வாரிசாக முடியாது. அதன்
பிறகு தந்தைக்கு முன் மகன் இறந்து விட்டார். இப்போது சகோதரர் வாரிசாகிவிடுவார்.
எனவே முன்பு செய்த வஸிய்யத் செல்லாது. அதேபோல் வாரிசாக இருந்த தன் சகோதரனுக்கு
ஒருவர் வஸிய்யத் செய்தார். (சட்டப்படி செய்யக்கூடாது) பிறகு அவர் இறப்பதற்கு முன்
அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் காரணமாக சகோதரர் வாரிசாக
ஆவதிலிருந்து நீங்கிவிடுவார். எனவே முன்பு செய்த அந்த வஸிய்யத் செல்லுபடியாகும்.
வஸிய்யத்தை நிறைவேற்றும் முறை
***********-***********
முதலில் இறந்தவரின் அடக்கச் செலவுகளை அவரது
சொத்திலிருந்து நடுத்தரமான முறையில் செய்ய வேண்டும். அதன்பிறகு அவருக்கு ஏதேனும்
கடன்கள் இருந்தால் அவற்றை அவரது பொருளிலிருந்தே அடைக்க வேண்டும். அதன்பிறகு
மீதமுள்ள சொத்தின் மூன்றில் ஒரு பகுதியிலிருந்து அவர் செய்த வஸிய்யத்துகளை
நிறைவேற்ற வேண்டும். இறந்தவருக்கு நிறைய கடன்கள் இருந்து அவர் விட்டுச் சென்ற
பொருள் கடனை விட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் அவரின் வஸிய்யத் செல்லாது.
ஏனெனில் கடன்களை அடைத்த பிறகே வஸிய்யத்தை நிறைவேற்ற வேண்டும்.
மரண நேரத்தில் செய்யும் அன்பளிப்புகளும்
தர்மங்களும்
**********************
கடுமையான வியாதியால் பீடிக்கப்பட்ட ஒருவர் இனிமேல்
தாம் உயிர் பிழைக்க மாட்டோம் என்ற உறுதி ஏற்பட்ட நிலையில் அவர் மற்றவர்களுக்குச்
செய்யும் ஹிபா என்னும் அன்பளிப்புகளும் பள்ளிவாசல், மதரஸா போன்ற ஸ்தாபனங்களுக்கு செய்யும் வக்ஃபும்
வஸிய்யத்திலேயே சேரும்.
(ஃபதாவா மஹ்மூதிய்யா, 20/216)
இதுபோன்ற மரண வியாதியில் உள்ள ஒரு பெண் தனது கணவன்
தரவேண்டிய மஹரை மன்னித்துவிட்டால் அதுவும் வஸிய்யத்துதான். மேற்கண்ட ஹிபா, வக்ஃபு, மஹர் தொகை அனைத்தும்
சொத்தின் மூன்றில் ஒரு பாகத்திலிருந்தே கவனிக்கப்படும்.
வஸிய்யத் எப்படிச் செய்ய வேண்டும்?
************************
வஸிய்யத் செய்பவர் பருவ வயதை அடைந்தவராக புத்தி
சுவாதீனம் உடையவராக இருக்க வேண்டும். பருவ வயதை அடையாதவர் செய்யும் வஸிய்யத்
செல்லாது.
(ரத்துல் முக்தார்,
10/286)
சுய விருப்பத்தோடு வஸிய்யத் செய்திருக்க வேண்டும்.
நிர்பந்தப்படுத்தி செய்ய வைத்தால் அது கூடாது.
(ஃபதாவா மஹ்மூதிய்யா, 20/203)
வஸிய்யத்தை எழுதவேண்டும் என்று அவசியமில்லை. நாவால்
கூறினாலும் எழுதியதைப் போன்றே அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.
(ஃபதாவா தாருல் உலூம்,
17/457)
வஸிய்யத் செய்யும்போது வாரிசுகளோ அல்லது யாருக்கு
வஸிய்யத் செய்யப்படுகிறதோ அவர்களோ உடனிருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. வாய்
மூலம் செய்தாலும் அல்லது எழுத்து மூலம் செய்தாலும் இறையச்சம் உள்ள பேணுதலான இருவரை
சாட்சியாக ஏற்படுத்திக் கொள்வது நல்லது. வஸிய்யத் செய்தபின் அதனைத் தானே வாபஸ்
பெறுவதும் அதனை ரத்து செய்வதும் அந்த வஸிய்யத்தில் மாற்றம் செய்வதும் கூடும்.
(ஆப்கே மஸாயில் 6/397)
வஸிய்யத்தின் வகைகள்
************************
வஸிய்யத் நான்கு வகைப்படும். 1. வாஜிப், 2. சுன்னத், 3. முஸ்தஹப்பு, 4. ஹராம்
வாஜிபான வஸிய்யத்
எவருடையதேனும் அடமானப்பொருள் தன்னிடமிருந்து
அல்லது எவருக்கேனும் கடன் தரவேண்டியதிருந்து இறப்புக்கு முன்பே அவற்றை நிறைவேற்ற
முடியாவிட்டால் இறக்கும் தருவாயில் அதுபற்றி தெளிவாக வஸிய்யத் செய்வது வாஜிபாகும்.
அதேபோல் ஃபர்ளான தொழுகையோ, நோன்போ, ஹஜ்ஜோ, முந்திய வருடங்களின்
ஜகாத்தோ,
குர்பானியோ அவரது பொறுப்பிலிருந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு அல்லது ஈட்டுத்
தொகை (ஃபித்யா) கொடுப்பதற்குரிய சொத்து அவரிடம் இருப்பின் அப்போதும் வஸிய்யத்
செய்வது கடமையாகும்.
கடந்த வருடங்களின் குர்பானி பொறுப்பில் இருந்தால்
அவற்றுக்கு பகரமாக நடுத்தரமான ஆட்டின் விலையை சதகா செய்ய வேண்டும்.
அதே போல் பிறருடைய பொருள் ஏதேனும் அநியாயமான
முறையில் அவரிடமிருந்து அவர் அதனை திருப்பித்தராமல் இருந்திருந்தால் இறப்பதற்கு
முன் அதனை ஒப்படைப்பது குறித்து வஸிய்யத் செய்வது கடமையாகும்.
குறிப்பு: தொழுகை, நோன்பு போன்ற கடமைகள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும்
ஸதகத்துல் ஃபித்ரின் அளவு ஃபித்யாவாக கொடுக்க வேண்டும். (ரத்துல் முக்தார் 10/276)
திலாவத் ஸஜ்தாவுக்கும் ஸதகத்துல் ஃபித்ரின் அளவே
ஃபித்யாவாகும்.
முஸ்தஹப்பான வஸிய்யத்.
-----------------------------------
வாரிசல்லாத உறவினர்களுக்கும் ஏழை, எளியோருக்கும் வஸிய்யத்
செய்வது.
பள்ளிவாசல், மதரஸா மற்றும் இதர நன்மைக்குரிய வழிகளில் செலவு
செய்வது.
சுன்னத்தான வஸிய்யத்
---------------------------------
சுன்னத்தான வஸிய்யத் என்பது தனக்குப்பின் தன்
பிள்ளைகள் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது பற்றோடு இருக்க வேண்டும். தொழுகை, நோன்பு முதலான
கடமைகளை பேணுதலாக நிறைவேற்ற வேண்டும். உறவைச் சேர்ந்து வாழ வேண்டும். தங்களுக்குள்
எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உண்மை முஸ்லிமாக வாழ வேண்டும் என்று
அவர்களுக்கு வஸிய்யத் செய்வதாகும். இது நபிமார்கள் செய்த வஸிய்யத்தாகும்.
தந்தை உயிருடன் இருக்கும்போது பிள்ளைகளுள் சிலர்
தீனின்படி சரியாக நடக்க மாட்டார்கள். தந்தை செய்யும் உபதேசங்களை காதில் போட்டுக்
கொள்ள மாட்டார்கள். அவர் மரணிப்பதற்கு முன் அவர்களை அழைத்து இறுதி வஸிய்யத்
செய்யும் பொழுது அவர்களின் உள்ளத்தில் அது இறங்கிவிடலாம். அதை அப்படியே கடைபிடிக்க
ஆரம்பித்து அதனால் அவர்களின் வாழ்க்கையே மாறிவிடலாம். அல்லாஹ்வின திருத்தூதர்
(ஸல்) அவர்களும் தங்களின் உம்மத்தான நமக்கு நிறைய வஸிய்யத்துகளைச்
செய்துள்ளார்கள். அவற்றில் ஒன்றை மட்டும் இங்கே காண்போம்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
تركت فيكم أمرين لن
تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله
இரண்டு விஷயங்களை உங்களிடம் நான் விட்டுச்
செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் உறுதியாக கடைபிடித்து வரும்வரை வழிதவறிச்
செல்ல மாட்டீர்கள். 1.
அல்லாஹ்வின் வேதம்,
2. அவனுடைய தூதரின் நடைமுறை (சுன்னத்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (முஅத்தா மாலிக்)
ஹஜ்ரத் இப்ராஹிம் (அலை) மற்றும் ஹஜ்ரத் யஃகூப்
(அலை) ஆகிய இரு நபிமார்களும் தங்களின் பிள்ளைகளுக்குச் செய்த வஸிய்யத்தை அல்லாஹ்
திருக்குர்ஆனில் கூறுகிறான்.
ووصى بها ابراهيم ببنيه
ويعقوب يبنى ان الله اصطفى لكم الدين فلا تموتن الا وانتم مسلمون
இப்ராஹிமும் யஃகூபும் தம் பிள்ளைகளுக்கு இதையே
வஸிய்யத் செய்தனர். “என் மக்களே! அல்லாஹ்
உங்களுக்கு இம்மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளான். ஆகவே (அல்லாஹ்வுக்கு
அடிபணியும்) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணித்துவிடக்கூடாது (என்று கூறினர்) (2:132)
மற்றொரு ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
أم كنتم شهداء اذ حضر
يعقوب الموت اذ قال لبنيه ما تعبدون من بعدى قالوا نعبد الهك واله آبائك ابراهيم
واسمعيل واسحق الها واحدا ونحن له مسلمون
யஃகூபுக்கு இறப்பு நெருங்கிய போது நீங்கள்
(அவரருகில்) இருந்தீர்களா?
அவர் தம் மக்களிடம் எனக்கு பின்னர் எதை வழிபடுவீர்கள் என்று கேட்டார். அதற்கு
அவர்கள் உங்கள் இறைவனும் உங்கள் தந்தையரான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின்
இறைவனுமாகிய (அந்த) ஓரிறைவனையே வழிபடுவோம். நாங்கள் அவனுக்கு (முற்றிலும்)
அடிபணிந்தவர்கள் ஆவோம் என்று கூறினார்கள்.
(2:133)
தனக்குப்பின் தனது மக்கள் தீனின் படி வாழவேண்டும்
என்று கவலை கொண்டு அவர்களுக்கு அறிவுரை கூறி உபதேசிப்பது நபிமார்களும்
நல்லோர்களும் செய்த சுன்னத்தான வஸிய்யத்தாகும்.
ஹராமான வஸிய்யத்
-------------------------------------
தனது மகன்களுள் ஒருவர் தன்னிடம் சரியாக
நடக்கவில்லை. தன்னை கவனிக்கவில்லை என்பதற்காக அவருக்கு தனது சொத்தில் பங்கு
கிடையாது என்று சிலர் வஸிய்யத்தில் எழுதி விடுகின்றனர். இது ஹராமாகும். தந்தையிடம்
அவர் சரியாக நடக்கவில்லையெனில் அதனுடைய குற்றம் அவருக்கு ஏற்படும். அதற்காக
அவருக்கு சொத்தில் பங்கில்லாமல் ஆக்குவது கூடாது. அவ்வாறு வஸிய்யத் செய்தாலும்
தந்தைக்குப்பின் அந்த மகனுக்கும் பங்கு கிடைத்தே தீரும். ஏனெனில் இது அல்லாஹ் வகுத்தளித்த
சட்டமாகும்.
ஆனால் இவ்வாறு வஸிய்யத் செய்த தந்தைக்கும் அதன்
தண்டனை கிடைக்கும். இதைப்பற்றி ஹதீஸில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ان الرجل ليعمل وامرأة
بطاعة الله ستين سنة ثم يحضرهما الموت فيضاران فى الوصية فتجب لهما النار
ஒரு ஆணோ, பெண்ணோ அறுபது வருடம் வரை அல்லாஹ்வுக்கு வழிபட்டு
நற்காரியங்களை செய்து வருவர். பிறகு அவர்களுக்கு மரணம் வரும் சமயத்தில் அவர்கள்
தமது வாரிசுகளில் எவருக்கேனும் பாதிப்பு ஏற்படும் வகையில் வஸிய்யத் செய்துவிடுவர்.
அதனால் அவர்கள் நரகிற்கு செல்ல வேண்டியதாகிவிடும் என நபிகள் பெருமானார் (ஸல்)
அவர்கள் கூறியதாக அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வரும் ஆயத்தை ஓதிக்
காட்டினார்கள்.
من بعد وصية يوصى بها او
دين غير مضار وصية من الله والله عليم حليم
எதைக் கொண்டு வஸிய்யத் செய்யப்பட்டதோ அந்த
வஸிய்யத்துக்கும் கடனுக்கும் (கொடுத்த) பிறகு (மீதியில்) மூன்றில் ஒரு பாகத்தில்
அவர்கள் (அனைவரும்) கூட்டாளிகளாவார்கள். ஆனால் (அந்த வஸிய்யத்தைக் கொண்டு
வாரிசுகளுக்கு) பாதிப்பை ஏற்படுத்தாதவராக இருக்க வேண்டும். இது அல்லாஹ்வால்
ஏற்படுத்தப்பட்ட வஸிய்யத்தாகும். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தோனாகவும் பொறுமைமிக்கவனாகவும்
இருக்கிறான்.
- அல்குர்ஆன்: 4:12 (நூல்: அபூதாவூத், திர்மிதி)
மார்க்கம் அனுமதிக்காத, ஹராமான காரியங்களை
செய்யுமாறு வஸிய்யத் செய்வது கூடாது.
உதாரணமாக தனது கப்ரின் மீது குப்பா எழுப்ப
வேண்டும். அல்லது அதனை சிமெண்ட் கலவையால் உறுதியாக கட்ட வேண்டும். தனது சொத்தில்
ஒரு பகுதியை உரூஸ்,
சந்தனக்கூடு போன்றவைகளுக்காக செலவழிக்க வேண்டும் என்பது போன்ற
காரியங்களுக்காக வஸிய்யத் செய்வது ஹராமாகும். அவற்றை நிறைவேற்றுவது கூடாது.
வஸிய்யத்தை நிறைவேற்றுதல்
**********************
ஒருவர் ஏதேனும் வஸிய்யத் செய்திருந்தால் அவர் இறந்த
பின் அவரது அடக்கச் செலவுகள், கடன்களை நிறைவேற்றியது போக அவரது ஹராமல்லாத
வஸிய்யத்துகளை நிறைவேற்றுவது கட்டாயமாகும். அதைப் பற்றிய விளக்கத்தை இங்கு
காண்போம்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் தெரிவிக்கிறான்.
فمن بدّله بعد ما سمعه
فانما اثمه على الذين يبدّلونه ان الله سميع عليم
அ(ந்த வஸிய்யத்)தை செவியுற்ற பிறகு யாரேனும் அதை மாற்றினால் அந்த குற்றம் அதை
மாற்றியவரையே சேரும். அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்.
(அல்குர்ஆன் 2:181)
மேற்கண்ட ஆயத்திலிருந்து எவரிடம் வஸிய்யத்
செய்யப்பட்டதோ அல்லது எழுதி தரப்பட்டதோ அவர் அந்த வஸிய்யத்தை மாற்றுவதோ, மறைப்பதோ, அதில் கூடுதல் குறைவு
செய்வதோ கூடாது என்பதை அறியலாம்.
ஆனால் சில வஸிய்யத்களை மாற்றுவதற்கும், நிறைவேற்றாமல்
விட்டுவிடுவதற்கும் அனுமதியுண்டு.
உதாரணமாக,
தந்தை தன் மகளுக்கு ஓரிடத்தில் மாப்பிள்ளை பார்த்து
திருமணம் செய்து வைக்க நாடியிருந்தார். அதற்குள் அவருக்கு மரணம் சமீபித்துவிட அந்த
இடத்திலேயே திருமணம் செய்து வைக்குமாறு வஸிய்யத் செய்துவிட்டு இறந்துவிட்டார்.
இப்போது அப்பெண்ணுக்கு வலியாக வரக்கூடியவர்கள் விரும்பினால் வேறு இடத்தில்
திருமணம் செய்து வைப்பதும் கூடும்.
அல்லது அப்பெண் பருவ வயதை அடைந்திருந்தால் மணமகன்
விஷயத்தில் அவளே முடிவு எடுக்கலாம்.
தனது ஜனாசாவை இன்னார்தான் குளிப்பாட்ட வேண்டும்.
தனக்கு இன்ன ஆலிம்தான் தொழவைக்க வேண்டும். தன்னை இன்ன ஊரில்தான் அடக்கம் செய்ய
வேண்டும். இன்ன ஆடையில்தான் கபனிடவேண்டும். தனது சகோதரரோ அல்லது இன்ன உறவினரோ
தன்னை தீதார் பார்க்க வரக்கூடாது. தனது ஜனாஸா தொழுகை, அடக்கத்தில் கலந்து
கொள்ளக்கூடாது என்றெல்லாம் செய்யப்படும் வஸிய்யத்துகளை நிறைவேற்றுவது கட்டாயமல்ல.
அவற்றுக்கும் மாற்றம் செய்வது கூடும். எனினும் மேற்படி விஷயங்களில் எவை
ஷரீஅத்துக்கு முரணில்லாமல் இருக்கிறதோ அவற்றை நிறைவேற்றுவது மிகச் சிறந்தது.
தனது சொத்தின் மூன்றில் ஒரு பகுதியான மூன்று
இலட்சத்தில் இரண்டு இலட்சத்தால் தனக்காக ஹஜ்ஜு செய்யும்படியும் ஒரு இலட்சத்தை
மத்ரஸாவுக்கு கொடுக்கும்படியும் ஒருவர் வஸிய்யத் செய்திருந்தார். ஆனால் ஹஜ்
செய்வதற்கு இரண்டு இலட்சத்துக்கு மேல் செலவாகும் என்றால் முதலில் ஹஜ்ஜை
நிறைவேற்றிவிட்டு எவ்வளவு மீதியுள்ளதோ அதை மத்ரஸாவுக்கு கொடுக்க வேண்டும்.
ஒருவர் தன் சார்பாக ஹஜ் செய்யும்படியோ, குர்பானி கொடுக்கும்படியோ, மஸ்ஜித்
கட்டும்படியோ வஸிய்யத் செய்து பணம் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த பணம் அதனை
நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இல்லையெனில் அப்பணத்தை வேறு நற்காரியத்தில்
ஈடுபடுத்தலாம். மஸ்ஜிதுக்காக தந்ததை அதை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோரிடம்
கொடுத்து விடலாம். - அல்பஹ்ருர் ராயிக் 9:281
வஸிய்யத்தை நிறைவேற்றியபின் வஸிய்யத் செய்யப்பட்ட
தொகையில் மீதம் இருக்குமானால் அதனை வாரிசுகளுக்கு கொடுத்துவிட வேண்டும்.
தனக்குப்பின் ஒவ்வொரு வருடமும் குர்பானி
கொடுக்கும்படி வஸிய்யத் செய்து சொத்தையும் விட்டுச் சென்றிருந்தால் அவ்வாறே
செய்து வரவேண்டும். அந்த குர்பானியின் இறைச்சி முழுவதையும் ஏழைகளுக்கு சதகா செய்து
விடவேண்டும். தான் எதையும் சாப்பிடக்கூடாது. (ரத்துல் முக்தார் 9:395)
ஒருவர் தனது வாரிசுகளில் ஒருவருக்கும் வேறொரு
நபருக்கும் சேர்த்து மூன்றிலொரு பகுதியை வஸிய்யத் செய்திருந்தால் வேறொரு
நபருக்கு செய்த வஸிய்யத்தை நிறைவேற்ற வேண்டும். வாரிசுக்குச் செய்த வஸிய்யத்தில்
இதர வாரிசுகளின் அனுமதியைத் தேடவேண்டும். அவர்கள் அனுமதித்தால் கூடும்.
இல்லாவிட்டால் கூடாது. (பதாவா ஆலம்கீரி 6:90)
மனைவி, மகன் இருவரும் காணாமல் போய்விட்டதால் கணவர் தனது
சொத்து முழுவதையும் நற்காரியங்களுக்கு செலவிடுமாறு வஸிய்யத் செய்து விட்டார்
எனில் அவ்வாறே அதனை செலவிடக்கூடாது. மாறாக மூன்றில் ஒரு பகுதியை மட்டும்
செலவிடவேண்டும். மீதி இரண்டு பகுதியை பாதுகாத்து வைக்க வேண்டும். அவரின் மகனுக்கு 70 வயதாகும் வரை மகனோ, மனைவியோ
வரவில்லையெனில் அதன்பிறகுதான் மீதிச் சொத்தை நற்காரியங்களில் செலவிடவேண்டும்.
பல வஸிய்யத்துகள் செய்திருந்தால்...
***********************
ஒருவர் பல நபர்களுக்கு பல தொகைகளைக் குறிப்பிட்டு
வஸிய்யத் செய்திருந்து அதன் மொத்த தொகை மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாக
இருந்தால் வாரிசுகளின் அனுமதிபெற்று அதனை நிறைவேற்ற வேண்டும். வாரிசுகள்
அனுமதிக்கவில்லையெனில் மூன்றில் ஒரு பகுதிக்குள் அவர்களுக்கு பிரித்துக் கொடுக்க
வேண்டும்.
தொழுகை, நோன்பு போன்ற பர்ளான கடமைகளுக்கும் நபிலான
காரியங்களுக்கும் ஒருவர் வஸிய்யத் செய்திருந்தால் முதலில் பர்ளான கடமைகள்
தொடர்பான வஸிய்யத்தையே நிறைவேற்ற வேண்டும். பின்னர் மீதியுள்ள பொருளிலிருந்து
நபிலான காரியங்களை நிறைவேற்ற வேண்டும்.
அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பிற
மனிதர்களுக்கு தரவேண்டிய தானங்கள் இரண்டும் கலந்திருந்தால் அல்லாஹ்வுக்குரிய
கடமைகளை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமை தர வேண்டும்.
அல்லாஹ்வின் கடனுக்கும் அடியார்களின் கடனுக்கும்
இடையிலான வித்தியாசம்
அல்லாஹ்வின் கடன் என்பது ஒருவர் அல்லாஹு
தஆலாவுக்குச் செய்ய வேண்டிய கடமையான வணக்கங்களைக் குறிக்கும். உதாரணமாக பர்ளான
தொழுகைகள்,
ரமளான் நோன்புகள்,
கப்பாரா என்னும் குற்றப்பரிகார நோன்புகள், ஜகாத், விடுபட்ட குர்பானிகளுக்காக தர வேண்டிய தர்மங்கள், கடமையான ஹஜ், ஸதகத்துல் ஃபித்ரு
தர்மங்கள் மற்றும் ஏதேனும் அவர் நேர்ச்சை செய்து தன் மீது வாஜிபாக்கிக்
கொண்டிருந்தால் அத்தகைய காரிங்கள்.
அடியார்களின் கடன் என்பது அவர் பிறருக்குத்
தரவேண்டிய கடன்களைக் குறிக்கும். மனைவிக்குத் தரவேண்டிய மஹர் தொகையும் இந்தக்
கடனில் சேரும்.
மேற்கண்ட இரண்டு வகை கடன்களுக்கும் இடையே மூன்று
வித்தியாசங்கள் உள்ளன. அவற்றை தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
1. இறந்தவர் வஸிய்யத் செய்திருந்தாலும்
செய்யாவிட்டாலும் அவரை அடக்கம் செய்தபின் அடுத்ததாக அவர் பிறருக்குத் தரவேண்டிய
கடன்களை நிறைவேற்றுவது கடமையாகும்.
ஆனால் அவர் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
இருந்தால் அவற்றைச் செய்யுமாறு வஸிய்யத் செய்திருந்தால் மட்டுமே கடமையாகும்.
இல்லாவிடில் அவற்றை நிறைவேற்றுவது வாரிசுகளின் மீது கடமையாகாது.
2. இறந்தவரை அடக்கம் செய்தபின் அவர் வாங்கிய கடனை
அடைப்பதில் அவர் விட்டுச்சென்ற முழுச் சொத்தும் காலியானாலும் பரவாயில்லை. கடன்களை
முழுமையாக அடைக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வின் கடன்களை மற்றவர்களின் கடன்களை
அடைத்ததுபோக மீதமுள்ள சொத்தின் மூன்றின் ஒரு பகுதியிலிருந்து மட்டுமே நிறைவேற்ற
வேண்டும். அதைவிட அதிகமாக பணம் தேவைப்பட்டால் அவரது வாரிசுகளின் அனுமதி
தேவையாகும்.
3. அடியார்களின் கடன்களை நிறைவேற்றுவதற்குத்தான்
முன்னுரிமை. அதனை நிறைவேற்றிய பின் சொத்தும் மீதி இருந்து வஸிய்யத்தும்
செய்யப்பட்டு இருந்தால்தான் அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்ற வேண்டும்.
வஸிய்யத் எப்போது முறியும்?
************************
1. தான் எழுதிய வஸிய்யத்தை அவரே திரும்பப் பெறுவதால்
அல்லது அதனை மாற்றி விடுவதால் அந்த வஸிய்யத் முறிந்துவிடும்.
2. எவருக்கு வஸிய்யத் செய்யப்பட்டதோ அவர் அதனை
ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால் வஸிய்யத் முறிந்துவிடும். வஸிய்யத் செய்யப்பட்ட
பொருள் அவரின் வாரிசுகளுக்கு கிடைத்துவிடும்.
3. வஸிய்யத் செய்தவருக்கு முன்னதாக வஸிய்யத்
செய்யப்பட்டவர் இறந்துவிட்டால்...
4. வஸிய்யத் செய்யப்பட்டவருக்கு மனநிலை
பாதிப்படைந்துவிட்டால்...
5. வஸிய்யத் செய்யப்பட்ட பொருள் உரியவருக்கு
கிடைப்பதற்கு முன்பே அது அழிந்தோ, அல்லது தொலைந்தோ போய்விட்டால்..
6. அப்பொருள் வேறொருவரின் பொருளாக இருந்து அதற்கு
உரிமையுடையவர் அதனை உரிமை கோரினால்...
7. வஸிய்யத் செய்யப்பட்ட காலம் முடிந்து போய்விட்டால்...
8. ஷரீஅத்துக்கு மாற்றமாக ஒருவர் வஸிய்யத்
செய்திருந்தால்...
9. நிர்பந்தப்படுத்தி வஸிய்யத்தை எழுதி
வாங்கியிருந்தால்...
மேற்கண்ட நிலைகளில் அந்த வஸிய்யத் செல்லாது.
முறிந்து போய் விடும்.
- ஆதாரம்: ஃபிக்ஹு மற்றும் ஃபத்வா நூல்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.