புதன், 18 அக்டோபர், 2017

தொழுகையின் சட்டங்கள்

தொழுகையின் சட்டங்கள்
***********************************
இஸ்லாம் வலியுருத்தும் கடமைகளில் மிக முக்கியமானது தொழுகை. தீனுடைய தூணாகவும் முஸ்லிமை முஸ்லிமல்லாதவரை விட்டும் பிரித்துக்காட்டும் அடையாளமாகவும் தொழுகை இருப்பதால் அல்லாஹ் தன் அருள்மறையில் 62 இடங்களில் தொழுகையைப் பற்றிக் கூறியுள்ளான். அல்லாஹு தஆலா ஓரிடத்தில் கூறினாலே அது மிக முக்கியமானதாகத்தான் இருக்கும் எனும்போது 62 இடங்களில் கூறியிருப்பதிலிருந்து தொழுகையின் அவசியத்தை நன்கு உணர முடியும்.

பெருமானார் ( ஸல்) அவர்கள் தொழுகையின் சிறப்பு. பயன். அவசியம். மற்றும்சட்டங்கள் பற்றியும் அதனை விடுவதால் விளையும் நஷ்டங்கள் பற்றியும் கூறியுள்ள எண்ணற்ற ஹதீஸ்களில் ஒன்றை மட்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.
عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ ، فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ : انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنْ الْفَرِيضَةِ ؟ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ )
،( .நஸயி 465)

மறுமை நாளில் ஓர் அடியாரிடம் அவரின் அமல்களில்  முதன்முதலில் விசாரிக்கப்படுவது தொழுகையைத்தான். அது சரியாக இருந்தால் அவர் வெற்றிபெற்று விடுவார். அது சரியில்லாவிடில் அவர் நஷ்டமடைந்து விடுவார் என்று பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா ( ரலி) நூல் நஸயி ( 465)

ஒரு முஃமின் வெற்றி பெறுவது தொழுகையைக் கொண்டுதான். எனவேதான் தொழுகைக்கு சொல்லப்படும் அழைப்பில் حي علي الصلاة தொழுகைக்கு வாருங்கள் என்று கூறியபின் حي علي الفلاح வெற்றியின் பக்கம் வாருங்கள்  என்று கூறப்படுகிறது.

அல்லாஹ்வின் பேரருளால் இன்று அதிகமான பள்ளிவாசல்கள் உருவாகி வருகிறது. தொழுகையாளிகளும் அதிகரித்து வருகின்றனர். அதேசமயம் நாம் தொழும் தொழுகைகள் மறுமையில் நம்மை வெற்றிபெறச் செய்யுமளவு தகுதியுள்ளதாக இருக்கின்றனவா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

நமது தொழுகைகள் அனைத்தும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு முழுமையான நன்மைகள் கிடைக்கப் பெற சில முக்கிய சட்டங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

* *தொழுகைக்கு முன்**
***************************
*  வீட்டிலிருந்து கிளம்பும் போதே உளுவுடன்
புறப்படுதல்

*  வழியில் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளல்.

*  உளு செய்யும் போது உலக பேச்சுக்களை
பேசாதிருத்தல்.

*  பள்ளிக்குள் நுளையும் போது துஆ ஓதி          இஃதிகாஃபின் நிய்யத்துடன் நுழைதல்.

தொழுகைக்கு ஓடிவரக்கூடாது. ஹதீஸில் இதற்கு தடை வந்துள்ளது.
636- ِ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻋَﻦِ اﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ. ﻭَﻋَﻦِ اﻟﺰُّﻫْﺮِﻱِّ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺳَﻠَﻤَﺔَ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻋَﻦِ اﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ: ((ﺇِﺫَا ﺳَﻤِﻌْﺘُﻢُ اﻹِﻗَﺎﻣَﺔَ ﻓَﺎﻣْﺸُﻮا ﺇِﻟَﻰ اﻟﺼَّﻼَﺓِ، ﻭَﻋَﻠَﻴْﻜُﻢْ ﺑِﺎﻟﺴَّﻜِﻴﻨَﺔِ ﻭَاﻟْﻮَﻗَﺎﺭِ ﻭَﻻَ ﺗُﺴْﺮِﻋُﻮا، ﻓَﻤَﺎ ﺃَﺩْﺭَﻛْﺘُﻢْ ﻓَﺼَﻠُّﻮا ﻭَﻣَﺎ ﻓَﺎﺗَﻜُﻢْ ﻓَﺄَﺗِﻤُّﻮا))صحيح البخاري).
636. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.”  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

நிலையில் அல்லது ருகூஉவில் இமாமுடன் சேர வேண்டும் என்பதற்காக பள்ளியின் கண்ணியத்தை மறந்து சிறுவர்களைப் போல வேகமாக ஓடிவருபவர்கள் இந்த ஹதீஸை கவனத்தில் கொள்வார்களாக.

ஆடை
**************
மறைக்கப்பட வேண்டிய பாகங்கள் வெளியே தெரியும் படியான மெல்லிய ஆடை. உருவப்படங்கள் உள்ள சட்டை . டீஷர்ட். கரண்டைக்குக் கீழே ஆண்கள் ஆடை உடுத்துவது. தொழுகையின் போது ஆண்கள் தங்கமோதிரம் அணிந்திருப்பது கூடாது. தொழுகைக்கு வெளியிலேயே இவை கூடாது எனும் போது தொழுகையில் இவை பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல சில இளைஞர்கள் ஸஜ்தாவுக்கு செல்லும்போது அவர்களின் மேல் சட்டை உயர்ந்து இடுப்பு பகுதி வெளியில் தெரியும் நிலை ஏற்படுகிறது. தொப்புளிலிருந்து முழங்கால்வரை உடலின் முன் பகுதியை எப்படி மறைப்பது கடமையோ அதேபோல பின்பகுதியும் மறைக்கப்பட வேண்டும். ஸஜ்தா செய்து முடிக்கும் வரை அவ்வாறே வெளிப்பட்டிருந்தால் தொழுகையே கூடாமல் போய்விடும். பின்பு அந்த தொழுகையை திரும்ப தொழவேண்டும்.

ஸஃப்பை சரிசெய்தல்
*******************************
தொழுகை முழுமையாக நிறைவேறுவதில் ஸஃப்பை சரிசெய்வதற்கும் பங்கிருக்கிறது. நபி( ஸல்) அவர்கள் ஸஃப்பை சரிசெய்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் காட்டியுள்ளார்கள்.
723-  عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ)).بخاري
வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை நிலைபெறச்செய்வதாகும் என்று நபி ( ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஸஃப்பை சரிசெய்யும்போது நாண்கு விஷயங்களை கவனிக்க வேண்டும்

1. முன்பின்னாக நிற்காமல் ஒரே நேர்கோட்டில்
நிற்பது.(அனைவரின்குதிங்கால்களும் நேராக
இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்வது)

2. இடைவெளி இல்லாமல் தோளோடுதோள்
சேர்த்து நிற்பது

3. ஒவ்வொரு ஸஃப்பையும் இமாமுக்கு நேர்
பின்னாலிருந்து ஆரம்பிப்பது.

4. ஒரு ஸஃப் பூர்த்தியானவுடன் அடுத்த ஸஃப்பை
ஆரம்பிப்பது.

( மக்களில் சிலர் ஒரு ஸஃப்பில் இடமிருக்க அதில் சேராமல் ஓரமாக போய் நின்று கொண்டு அடுத்து வருபவர்களையும் தம்மோடு நிற்குமாறு அழைக்கின்றனர். இது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.)
5. ஸஃப்பில் சேருவதற்காக தொழுது கொண்டிருப்பவர்களை கடந்து  வருவது கூடும்.

தொழுகையாளிகளை கடந்து செல்லல்
*****************************************************
தொழுபவர்களுக்கு முன்னால் கடந்து செல்வதை பெரும் குற்றமாக மார்க்கம் எச்சரித்துள்ளது.
510 -، ﻋﻦ ﺑﺴﺮ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﺃﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺧﺎﻟﺪ، ﺃﺭﺳﻠﻪ ﺇﻟﻰ ﺃﺑﻲ ﺟﻬﻴﻢ ﻳﺴﺄﻟﻪ: ﻣﺎﺫا ﺳﻤﻊ ﻣﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ اﻟﻤﺎﺭ ﺑﻴﻦ ﻳﺪﻱ اﻟﻤﺼﻠﻲ؟ ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ ﺟﻬﻴﻢ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «§ﻟﻮ ﻳﻌﻠﻢ اﻟﻤﺎﺭ ﺑﻴﻦ ﻳﺪﻱ اﻟﻤﺼﻠﻲ ﻣﺎﺫا ﻋﻠﻴﻪ، ﻟﻜﺎﻥ ﺃﻥ ﻳﻘﻒ ﺃﺭﺑﻌﻴﻦ ﺧﻴﺮا ﻟﻪ ﻣﻦ ﺃﻥ ﻳﻤﺮ ﺑﻴﻦ ﻳﺪﻳﻪ» ﻗﺎﻝ ﺃﺑﻮ اﻟﻨﻀﺮ: ﻻ ﺃﺩﺭﻱ، ﺃﻗﺎﻝ ﺃﺭﺑﻌﻴﻦ ﻳﻮﻣﺎ، ﺃﻭ ﺷﻬﺮا، ﺃﻭ ﺳﻨﺔ
510. புஸ்ரு இப்னு ஸயீத் அறிவித்தார்.  தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூ ஜுஹைம்(ரலி) அவர்களிடம் ஸைத் இப்னு காலித்(ரலி) அனுப்பு வைத்தார். தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைம்(ரலி) விடையளித்தார்கள்.  இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன் னழ்ரு என்பவர் நாற்பது ஆண்டுகள்என்று கூறினார்களா? அல்லது நாற்பது மாதங்கள்அல்லது நாற்பது நாள்கள்என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

40 முழம் நீளத்தை விடக்குறைவாக உள்ள மஸ்ஜிதிலோ. அல்லது வேறு இடத்திலோ ஒருவர் தொழுதால் அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவருக்கு முன்னால் கடந்து செல்வது கூடாது. அவருக்கு முன்னால் எத்தனை ஸஃப் காலியாக இருந்தாலும் சரி. துண்டு கர்ச்சீப்பை காட்டிக் கொண்டு வருவதும் கூடாது.

40 முழம் அல்லது அதைவிட நீளமுள்ள மஸ்ஜித் அல்லது வேறு இடத்தில் ஒருவர் தொழுதால்  அவரை கடந்து செல்ல வேண்டுமெனில் இரண்டு. மூன்று ஸஃப் அளவு இடைவெளி விட்டு கடந்து செல்ல வேண்டும்.

குறிப்பு: ஒரு ஸஃப் என்பது 2 1/2 முழம்  நீளமுடையதாகும். பர்ளு தொழுகையின் ஜமாஅத் முடிந்தவுடன் பின்வரிசையில் மஸ்பூக்காக வந்து எழுந்து தொழும் மக்களை கண்டு கொள்ளாமல் முன்வரிசையிலுள்ளவர்கள் அவர்களை கடந்து செல்வதை அதிகமாக காணமுடிகிறது. மேற்கண்ட ஹதீஸை கவனித்து அதனை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

ருகூஉ . ஸஜ்தாவில் கவனிக்க வேண்டியவை
***********************************************************
இமாம் ருகூஉவில் இருக்கும்போது இமாமுடன் சேருபவர் ஒரு ருகுன் ( ஒரு தஸ்பீஹ்) அளவு சேர்ந்திருந்தால்தான் அந்த ரகஅத் நிறைவேறும் முக்ததி ருகூஉவுக்குச் செல்லும் அதேநேரம் இமாம் தலையை உயர்த்தி விட்டார். அதன்பிறகு முக்ததி தனியாக ருகூஉவில் இருந்துவிட்டு எழுந்தால் அந்த ரகஅத்தை திருப்பித் தொழவேண்டும்.

இமாம்களுள் சிலர் ருகூஉவிலிருந்து எழும்போது தக்பீர் கூறாமல் நேராக நின்ற பிறகு கூறுவர். இமாம் தக்பீர் கூறவில்லை என்று நினைத்து முக்ததி ருகூவிற்கு சென்று அந்த ரகஅத் கிடைத்து விட்டதாகக் கருதி மீதியுள்ள ரகஅத்துக்களை மட்டும் தொழுதாரெனில் அந்த தொழுகையே கூடாமல் போய்விடும்.
எனவே இமாம்களும் இது விஷயத்தில் கவணமாக இருந்து நிலைக்கு வந்தபின் தக்பீர் சொல்வதை தவிர்த்து தக்பீர் கூறிக்கொண்டே நிலைக்கு வரவேண்டும்.

*ஸஜ்தாவில்*
******************
809-  عَنِ ابْنِ عَبَّاسٍ أُمِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا الْجَبْهَةِ وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالرِّجْلَيْنِ
809. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

ஸஜ்தா செய்கின்றபோது மணிக்கட்டிலிருந்து முழங்கைவரையுள்ள பகுதியை தரையில் படுக்க வைக்கக் கூடாது. ஸஜ்தா செய்து முடிக்கும் வரை கால்களை தரையை விட்டும் உயர்த்தக் கூடாது. ஸஜ்தாவின்போது இரண்டு கால்களின் ஒரு விரலைக்கூட தரையில் வைக்காமல் உயர்த்தி விட்டால்  அந்த ஸஜ்தா கூடாது. ஸஜ்தா கூடாவிட்டால் தொழுகையும் நிறைவேறாது.

அதேபோல் ஒரு ருகுன் (ஒரு தஸ்பீஹ்) அளவை விடக் குறைவாக நெற்றியை தரையில் வைத்து எடுத்துவிட்டாலும் ஸஜ்தா நிறைவேறாது.

சுன்னத்தான தொழுகைகள்
***************************************
பர்ளான தொழுகையில் ஏற்படும் குறைகளை சரிசெய்வதற்காகவே சுன்னத்தான தொழுகைகள் தரப்பட்டுள்ளது.
قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ : انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنْ الْفَرِيضَةِ ؟ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ ) ، وصححه الألباني في " صحيح سنن الترمذي "
கடமையான தொழுகையில் ஏதேனும் குறைபாடு வைத்திருந்தால் அல்லாஹ் ( மலக்குகளிடம்) என் அடியானிடம் ஏதேனும் கூடுதலான தொழுகைகள் உண்டா எனப் பாருங்கள் என்று கூறுவான். பிறகு கூடுதலான அத்தொழுகைகள் மூலம் அவர் ஏற்படுத்திய குறைகள் சரி செய்யப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ( ரலி) நூல் திர்மிதி 378

எனவே முன் பின் சுன்னத்துகளை பேணுதலாகத் தொழுதுவருவது பர்ளான தொழுகைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படக் காரணமாக இருப்பதால் அவை பற்றிய சில சட்டங்களை தெரிந்து கொள்வோம்.

ஃபஜ்ரின் முன் சுன்னத்
*********************************
عن ابي هريرة رضي الله عنه إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة)).رواه مسلم
இவ்வாறு ஹதீஸ் இருந்தும்கூட
ஃபஜ்ரின் முன் சுன்னத்துக்கு நபி ( ஸல்) அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ள காரணத்தால் மார்க்க மேதைகளுள் சிலர் இதனை வாஜிபின் அளவுக்கு வலியுறுத்தியுள்ளார்கள். எனவே ஃபஜ்ருடைய ஃபர்ளுக்கு இகாமத் கூறி தொழுகை ஆரம்பிக்கப்பட்ட பின்பு வருபவர் முன் சுன்னத் தொழுதுவிட்டு இரண்டாவது ரகஅத்தின் ருகூஉவிற்குள் இமாம் ஜமாஅத்தில் சேர்ந்துவிட முடியுமெனில் சுன்னத்தை வெளிப்பள்ளியில் அல்லது பள்ளியின் ஓரத்தில் தொழவேண்டும்.

இரண்டாவது ரகஅத்திலும் சேரமுடியாதெனில் அப்போது முன் சுன்னத் தொழாமல் ஜமாஅத்தில் சேர்ந்துவிடவேண்டும். பிறகு ஃபர்ளு தொழுத பின் முன் சுன்னத் தொழுவது கூடாது. சூரிய உதயத்துக்குப் பிறகுதான் தொழவேண்டும். அப்போது அது நஃபிலாகத்தான் நிறைவேறும்.
(ஃபதாவா மஹ்மூதிய்யா 7/195)

லுஹரின் முன் சுன்னத்
**********************************
லுஹருக்கு முன்னுள்ள நான்கு ரகஅத்துகள் கட்டாயமான சுன்னத்தாகும்.
من حافظ علي اربع ركعات قبل الظهر وأربع بعدها حرمه الله علي النار
(ترمذي 393)
லுஹரின் ஃபர்ளுக்கு முன்னால் இதனைத் தொழ முடியாவிட்டால் லுஹருடைய பின் சுன்னத்தை தொழுது விட்டு அதன்பிறகு இந்நான்கு ரகஅத்துகளைத் தொழவேண்டும்.
(ரத்துல் முஹ்தார் 2/58. 59)

அஸர். இஷாவின் முன் சுன்னத்
***************************************
அஸர் மற்றும் இஷாவின் முன் சுன்னத் கட்டாயமில்லாத சுன்னத்தாகும் எனவே ஃபர்ளு தொழுகைக்குமுன் நான்கு ரகஅத் சுன்னத் தொழுமளவு நேரமில்லை.  குறைவான நேரமே இருக்கிறது எனில் இரண்டு ரகஅத்துகள் மட்டும் தொழுது கொள்ளலாம். ஏனெனில் இதுவும் ஹதீஸில் வந்துள்ளது. ( நூல்:  திர்மிதி)

ஆனால் லுஹரின் முன்சுன்னத்தை இரண்டாகத் தொழுவது கூடாது.

வாகனத்தில் தொழுதல்
**********************************
நின்று தொழுவதற்கு சக்தி பெற்றவர் ஃபர்ளு. வாஜிபு மற்றும் ஃபஜ்ருடைய முன்சுன்னத் ஆகிய தொழுகைகளை இரயில். பேருந்து போன்ற எந்த வாகனத்திலும் அமர்ந்து தொழுவது கூடாது. அவ்வாறு தொழுதால் தொழுகை நிறைவேறாது. கீழே இரங்கியபின் திருப்பித் தொழவேண்டும்.
நின்று தொழ முடியாத காரணத்தால் அமர்ந்து தொழுவதற்கு நோயாளிக்கு மார்க்கம் சலுகை வழங்கியிகுப்பதைப் போல வாகனத்தில் பயணம் செய்யும் போதும் நின்று தொழமுடியாத நிலையிருப்பதால் அமர்ந்து தொழுவது கூடும்  என சிலர் தவறாக விளங்கி அவ்வாறே தொழுது வருகின்றனர். ஆனால் நோயாளி அமர்ந்து தொழுவதை பயணி வாகனத்தில் அமர்ந்து தொழுவதோடு ஒப்பிடுவது சரியல்ல என்பதை மார்க்க அறிஞர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
ஃபதாவா மஹ்மூதிய்யா 7/532

ஃபர்ளு வாஜிப். அல்லாத சுன்னத் மற்றும் நஃபிலான தொழுகைகளை வாகனத்தில் அமர்ந்து தொழுவது கூடும்.

நாற்காலித் தொழுகை
**********************************
நாற்காலியில் அமர்ந்து தொழுவது பற்றி கேட்கப்பட்ட  கேள்விக்கு ஸஹாரன்பூர் மழாஹிருல் உலூம் மத்ரஸாவில்  தரப்பட்ட  ஃபத்வா ஒன்றை கீழே கொடுத்திருக்கின்றோம்.

கேள்வி: சிரமப்பட்டுத்தான் எழுந்து நின்று தொழமுடியும் என்ற நிலையில் நின்றுதான் தொழ வேண்டுமா? அமர்ந்து தொழலாமா?

பதில்: நிற்பதால் அதிகமாக வலியும் வேதனையும் உண்டாகிறது. அல்லது நின்று தொழுவதால் நோய் அதிகரித்து விடும் அல்லது நோய் குணமாவது தாமதப்படும் என்ற அச்சம் உண்டாகிறது அல்லது நிற்பதால் தலைசுற்றல் வந்துவிடும் என்ற பயம் இருக்கிறது. இந்நிலைகளில் நிற்பது அவசியமாகாது. ( துர்ருல் முஹ்தார் 1/508)
இப்படிப்பட்டவர் கீழே அமர்ந்து ருகூஉ . சுஜூதுடன் தொழவேண்டும். ருகூஉ . சுஜூதை நிறைவேற்ற சக்தியிருந்தும் நாற்காலியில் அமர்ந்து தொழுவதும். சைகையால் ருகூஉ சுஜூதை செய்வதும் கூடாது.
கீழே அமர்ந்து ருகூஉ. சுஜூதை நிறைவேற்றுவது சிரமமாக இருந்தாலோ அல்லது சஜ்தா செய்வது மட்டும் சிரமமாக தரையில் செய்யமுடியாத நிலை இருந்தாலோ அப்போது நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடும்.
وان تعذر  ( الركوع والسجود)  ليس تعذرهما شرطا بل تعذر السجود كاف لاالقيام أومأ قاعدا وهو أفضل من الايماء قائما لقربه من الارض
துர்ருல் முஹ்தார் 1/ 509

அல்லாஹ் மிக அறிந்தவன்
முஃப்தி. முஹம்மது தாஹிர்
மதரஸா மழாஹிருல் உலூம்
ஸஹாரன்பூர் ( உ .பி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.