بسم الله الرحمن الرحيم
ஷரீஅத்தின்
பார்வையில் சந்திர ஆண்டு
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
قال الله سبحانه وتعالى :إن عدة الشهور عند الله إثني عشر شهرا
في كتاب الله يوم خلق السماوات والأرض، منها أربعة حرم( القرآن الكريم 9:36)
மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்குரிய அத்தியாவசியத் தேவைகளில் நாள், நேரம், மாதம் மற்றும் ஆண்டுக் கணக்கை அவன் தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாக
இருக்கிறது. மனிதன் தனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்குரிய
ஏற்பாட்டைச் செய்துள்ள அல்லாஹ், நாள், நேரக்கணக்கை மனிதன் தெரிந்து கொள்வதற்கு வசதியாக
சூரியனையும் சந்திரனையும் படைத்திருக்கிறான். இதனைப்பற்றி அல்லாஹ் தனது அருள்
மறையில் 17வது சூரா 12வது ஆயத்தில் தனது அருட்கொடையாக குறிப்பிட்டுள்ளான்.
சூரியன், சந்திரன் இரண்டின் மூலமாகவும் ஆண்டுக்கணக்கை
அறிந்து கொள்ள முடியுமென்றாலும் இஸ்லாத்தின் பார்வையில் சந்திர ஆண்டுக்கே
முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஏனெனில் அல்லாஹ் கடமையாக்கியுள்ள அநேக இபாதத்துகளை
நிறைவேற்றுவதற்கு சந்திர ஆண்டுக் கணக்கு தான் உதவியாக இருக்கிறது. சந்திர
ஆண்டுக்கணக்கு வணக்க வழிபாடுகளுக்கும் சூரிய ஆண்டுக்கணக்கு உலக நடைமுறைகளுக்கும்
உரியதாகும் என இப்னுல் அரபி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே நேரக்கணக்கிற்கு
சூரியனையும் மாதம், வருடம் அறிவதற்கு சந்திரனையும் பயன்படுத்துவதே
சரியான முறையாகும்.
சூரிய ஆண்டுக் கணக்கு
---------------------------------------------
சூரியனின் சுழற்சியை வைத்துக் கணிக்கப்பட்டுள்ள சூரிய ஆண்டு (ஆங்கிலேய வருடம்)
வெவ்வேறு காலகட்டங்களில் பலவித மாறுதல்களுக்கு உட்பட்டு கடைசியாக 1582-ம் ஆண்டு இப்போதுள்ள அமைப்பில் “கிரிகோரியன் காலண்டர்” எனும் பெயரில் அறிமுகமானது. இதில் ஜனவரி முதல்
டிசம்பர் வரை ஓர் ஆண்டுக்கு 12 மாதங்கள், அவற்றில் 7 மாதங்கள் 31 நாட்களையும் 4 மாதங்கள் 30 நாட்களை கொண்டது. பிப்ரவரி எனும் மாதம் மட்டும் 28 நாட்களை உடையது. ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் 6 மணி நேரம். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வருடத்திலும் மீதமுள்ள 6 மணி நேரத்தைக் கூட்டி ஒரு நாளாக்கி
அவ்வருடத்தின் பிப்ரவரி மாத்திற்கு 29 நாட்கள் தரப்படும். இதற்கு லீப் வருடம் என்று பெயர்.
சந்திரஆண்டு
----------------------
சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு “சந்திரஆண்டு” அல்லது “ஹிஜ்ரீ ஆண்டு” என்று பெயர். இதில் ஓர் ஆண்டுக்கு 354 நாட்கள் 8 மணி நேரம் 48 நிமிடங்கள். ஒரு மாதம் என்பது 29 நாட்கள் 12 மணி நேரம் 44 நிமிடங்கள். முஹர்ரம் முதல் துல்ஹஜ் வரை வருடத்திற்கு 12 மாதங்கள் அவற்றில் 7 மாதங்கள் 30 நாட்களைக் கொண்டவை. 5 மாதங்கள் 29 நாட்களைக் கொண்டவை. இவற்றில் எந்த மாதமும் 28 நாட்களிலோ அல்லது 31 நாட்களிலோ முடியாது.
சந்திர ஆண்டைப் பொறுத்தவரை அம்மாதத்தின் துவக்கத்தை பிறையைப் பார்ப்பது
கொண்டுதான் அறியமுடியும். அதாவது மாதத்தின் 29ம் நாள் பிறை பார்க்க வேண்டும். புதுப்பிறை தெரிந்தால் அடுத்த மாதம்
துவங்கிவிட்டது என்று பொருள். பிறை தெரியாவிட்டால் அம்மாதத்தை 30 நாட்களாகக் கணக்கிட்டு அதற்கடுத்த நாளை (31வது நாள்) அடுத்த மாதத்தின் துவக்க நாளாகக்
கொள்ள வேண்டும்.
சந்திர ஆண்டில் எந்த மாதமும் 29 நாட்களைக் கொண்டதாகவோ 30 நாட்களைக் கொண்டதாகவோ நிரந்தரமாக இருக்காது.
இந்த ஆண்டில் ஒரு மாதம் 29 நாட்களில் முடிகிறது என்றால் அடுத்த ஆண்டில்
அம்மாதம் 30 நாட்களிலும் முடியலாம். எனவேதான் ஒரு வருட
ரமழான் மாதத்தில் 30 நோன்புகள் வைக்கும் நாம் இன்னொரு வருட ரமழானில் 29 நோன்புகள் வைக்கிறோம். ஹிஜ்ரி 2-ல் நோன்பு கடமையானது. அதற்குப்பின் 8 ஆண்டுகளில் நபி (ஸல்) அவர்கள் 5 ஆண்டுகளில் 29 நோன்புகளும் 3 ஆண்டுகளில் 30 நோன்புகளும் நோற்றுள்ளார்கள். மாதங்களின் நாட்களை முடிவு செய்வதை அல்லாஹ் தனது
கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். நாட்களின் எண்ணிக்கை 29 அல்லது 30 என மாறி மாறி வந்தாலும் ஓர் ஆண்டுக்கு 354 நாட்கள் என்ற எண்ணிக்கை சரியாக வந்துவிடும். சில நேரங்களில் ஆண்டுக்கு 355 நாட்கள் வருவது உண்டு.
சந்திர ஆண்டின் தொடக்கம்
--------------------------------------------------
கிறிஸ்தவர்களும் யூதர்களும் சூரிய ஆண்டுக் கணக்கை உருவாக்கி பயன்படுத்தி
வந்தார்கள். ஆனால் அரபு மக்கள் அந்த காலண்டரைப் பின்பற்றவில்லை. தங்களுக்கென தனி
ஆண்டுக் கணக்கையும் உருவாக்கவில்லை. தனியாக அவர்களுக்கு ஆண்டு இல்லாவிட்டாலும்
இஸ்லாமிய மாதங்களான முஹர்ரம் முதல் துல்ஹஜ் வரையிலான 12 மாதங்களும் அவர்களுடைய பயன்பாட்டில்
இருந்துவந்தது. இம்மாதங்களின் நாட்களை பிறையைப் பார்த்து அறிந்து வந்தார்கள்.
ஆண்டுக் கணக்கை நினைவில் வைப்பதற்காக அக்காலகட்டத்தில் நிகழ்ந்த ஏதேனுமொரு முக்கிய
நிகழ்வுடன் தொடர்புபடுத்தி ஆண்டை நினைவில் வைத்துக் கொள்வார்கள்.
உதாரணத்திற்கு “யானை ஆண்டை” குறிப்பிடலாம். நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 50 அல்லது 55 நாட்களுக்கு முன் யமன் நாட்டை ஆண்டு வந்த அப்ரஹா
அல்அஷ்ரம் என்ற மன்னன் 13 யானைகள் மற்றும் 60,000 படை வீரர்களோடு கஅபத்துல்லாஹ்வை இடிப்பதற்காக மக்காவிற்கு வந்தான். அவனையும்
அவனது படையையும் அபாபீல் எனும் சிறுகுருவிகளின் மூலம் சிறுகற்களை எறியவைத்து
அல்லாஹ் அழித்த வரலாற்றை திருக்குர்ஆன் “அல்ஃபீல்” எனும் சூராவில் எடுத்துரைக்கிறது. இந்த நிகழ்வு
நடந்தது கி.பி.571ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி. அரபு மக்கள் இவ்வாண்டுக்கு “யானை ஆண்டு” என்று பெயரிட்டு அதிலிருந்து ஒவ்வொரு
வருடத்திற்கும் யானை ஆண்டு ஒன்று, யானை ஆண்டு இரண்டு என்று பெயரிட்டு நினைவில் வைத்து வந்தனர். நபி (ஸல்)
அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைத்த கி.பி. 610ம் ஆண்டை முஸ்லிம்கள் “நபித்துவ ஆண்டு” என்று பெயரிட்டு வருடக் கணக்கை நினைவில் வைத்துக் கொண்டார்கள்.
இரண்டாம் கலீஃபா ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் வரை இதே நிலைதான்
நீடித்து வந்தது. உமர் (ரலி) அவர்களின் ஆட்சி நடந்தபோது யமன் நாட்டின் கவர்னராக
இருந்த ஹழ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் கலீஃபாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள்.
அதில், “அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களிடமிருந்து
எனக்கு அவ்வப்போது அரசாணைகளும் கட்டளைகளும் வருகின்றன. ஆனால் அவற்றில் தேதி
எதுவும் இல்லாததால் அதனை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே நமக்கென்று
ஒரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்துங்கள்” என்று கேட்டிருந்தார்கள்.
அதனைப் படித்த கலீஃபா அவர்கள் ஸஹாபாக்களை ஒன்று கூட்டி எந்த நிகழ்வை
அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக் கணக்கை துவக்கலாம் என்று ஆலோசனை கேட்டார்கள்.
ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களின் பிறப்பை, அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த நிகழ்வை, அவர்களின் ஹிஜ்ரத் பயணத்தை, பத்ருப்போரை, நபியவர்களின் மரணத்தை என தத்தமது கருத்துக்களைக்
கூறினார்கள். அவற்றில் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்றதை வைத்து ஆண்டுக் கணக்கை
ஆரம்பிக்கலாம் என்று ஹழ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறிய கருத்து உமர் (ரலி)
அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் இஸ்லாம் உலகில் பரவுவதற்கும் அது
வலுவடைவதற்கும் ஹிஜ்ரத் பயணம் தான் காரணமாக இருந்தது. எனவே நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த நாளிலிருந்து புதிய ஆண்டைத் துவக்குவதென
முடிவு செய்யப்பட்டது. அதன்பின் ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆலோசனைப்படி
முஹர்ரம் மாதத்தை ஆண்டின் துவக்கமாக ஆக்கப்பட்டது.
நபியவர்களின் ஹிஜ்ரத்
---------------------------------------
நபிப்பட்டம் கிடைத்தபின் 13 ஆண்டுகள் மக்காவில் தங்கி காஃபிர்களின் சொல்லொணாத் துன்பங்களையும்
தொல்லைகளையும் பொறுத்துக்கொண்டு இறைப்பணி செய்து வந்த நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ்வின் கட்டளைப்படி கி.பி.622ம் வருடம் செப்டம்பர் 10ம் தேதி (ஸஃபர் 27) அருமைத்தோழர் ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் இரவு நேரத்தில்
மக்காவிலிருந்து புறப்பட்டு 5மைல் தொலைவிலுள்ள “தவ்ர்” குகையில் மூன்று நாட்கள் தங்கி காஃபிர்களின் அரவம் அடங்கியபின் பயணத்தைத்
துவங்கி செப்டம்பர் 25ம் தேதி (ரபீஉல் அவ்வல் 12 ம் நாள்) மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் புத்தாண்டு உருவாக்கப்பட்டு கி.பி.622ம் வருடம் செப்டம்பர் 10ம் தேதியன்று ஹிஜ்ரி புத்தாண்டு துவங்குவதாக
ஹழ்ரத் உமர் (ரலி) அறிவித்தார்கள். இவ்வறிவிப்பு வெளியானது கி.பி.638ம் வருடம்.
அதாவது ஹிஜ்ரீ 17ம் ஆண்டு.
(அல்காமில் ஃபித்தாரீஹ் பாகம் 1 பக் 12, 13)
கால நேரத்தைப் பார்த்து பயணத்தை துவங்குவது வழக்கம். ஆனால் ஒரு பயணத்தை வைத்து
காலநேரம் கணிக்கப்பட்ட வரலாறு இஸ்லாத்திற்கே சொந்தம்.
சூரிய ஆண்டுக்கும் சந்திர ஆண்டுக்கும் இடையிலுள்ள
--------------------------------------------------------------------------------
வித்தியாசம்
---------------------
நாம் மேலே குறிப்பிட்ட படி சூரிய ஆண்டுக்கும் சந்திர ஆண்டுக்குமிடையே 11 நாட்கள் வித்தியாசம் ஏற்படுகிறது. (365-354=11) அதாவது சந்திர ஆண்டை விட சூரிய ஆண்டில் 11 நாட்கள் அதிகமாகவரும். ஒரு வருடத்திற்கு 11 நாட்கள் அதிகமானால் 33 வருடத்திற்கு ஒருமுறை ஒரு வருடமும் 66 வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வருடங்களும் 100 வருடத்திற்கு ஒரு முறை மூன்று வருடங்களும்
அதிகமாக வரும்.
ஒரு சூரியமாதம் 30 நாட்கள் 10 மணி நேரம் 12 நிமிடங்களைக் கொண்டது. சந்திர மாதம் 29 நாட்கள் 12 மணி நேரம் 44 நிமிடங்களைக் கொண்டது. சூரிய மாதம்
சந்திரமாதத்தைவிட 21 மணிநேரம் 46 நிமிடங்கள் கூடுதலாக வரும்.
உதாரணமாக சூரிய ஆண்டின் கணக்குப்படி ஜனவரி முதல் தேதியன்று ஒருவருக்கு 32 வயது முடிந்து 33வது வயது ஆரம்பிக்கிறது என்றால் சந்திர ஆண்டின் கணக்குப்படி 33 வயது முடிந்து 34வது வயது நடக்கிறது என்று பொருள். இதேபோல் சூரிய ஆண்டில் 66வது வயது ஆரம்பம் என்றால் சந்திர ஆண்டில்
அவருக்கு 68வது வயது நடந்து கொண்டிருக்கும்.
ரோம் நாட்டை ஆண்டுவந்த தக்யானூஸ் என்ற மன்னன் சிலை வணக்கத்திற்கு மக்களை
தூண்டியதால் ஏக இறைவனான அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொண்டிருந்த வாலிபர்கள் ஏழுபேர்
தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக தமது ஊரை விட்டும் வெளியேறி
காட்டிலிருந்த ஒரு குகையில் தஞ்ச மடைந்தனர். அல்லாஹ் அவர்களுக்கு ஆழ்ந்த
உறக்கத்தைக் கொடுத்து விட்டான். 300 ஆண்டுகள் அவர்கள் உறங்கினர். இந்த 300 ஆண்டுகள் என்பது சூரியக்கணக்கின் படியாகும். சந்திரஆண்டுக் கணக்கின்படி
அவர்கள் 309 ஆண்டுகள் உறங்கினர். இவ்விரு கணக்கையும் அல்லாஹ், ஒரே இடத்தில் கூறுவதைப் பாருங்கள்.
ولبثوا في كهفهم ثلاث مئة سنين وازدادوا تسعا
(குகைத்தோழர்கள் தூங்கியவர்களாக) தங்களுடைய குகையில் முன்னூறு ஆண்டுகள்
இருந்தனர். மேலும் ஒன்பதை அதிகப்படுத்தினார்கள்.(18:25 )
சந்திர ஆண்டின் சிறப்பம்சங்கள்
----------------------------------------------------------
சூரியன், சந்திரன் இரண்டைக் கொண்டும் காலத்தை அறிய
முடியுமென்றாலும் சந்திரனைக் கொண்டு அறிவது மிகவும் இலகுவானதாகும். ஏனெனில்,சந்திரன் ஒரு மாதத்தில் தனது சுற்றை
முழுமைப்படுத்துகிறது. சந்திரனுக்கு 28 தங்குமிடங்கள் உள்ளன.
சூரியன் தனது சுற்றை முழுமைப்படுத்த ஒரு வருடம் தேவைப்படுகிறது; எனவே அதற்கு 365 தங்குமிடங்கள் உள்ளன.
சூரியனின் தங்குமிடங்களை நவீன கருவிகளைக் கொண்டுதான் அறிய முடியும். வெறும்
கண்களால் பார்க்கும்போது வருடம் முழுவதும் ஒரே இடத்தில் உதயமாகி ஒரே இடத்தில்
மறைவதைப் போல்தான் தெரியும்.
ஆனால் சந்திரனின் தங்குமிடங்களை சாதாரணமாக கண்களால் பார்த்தே அனைவரும்
அறியமுடியும். சூரியனைப் பார்த்து இன்று என்ன தேதி என்பதை எவரும் சொல்ல முடியாது.
மாதத்தின் முதல் தேதியன்றும் 20ம் தேதியன்றும் 30ம் தேதியன்றும் சூரியன் ஒரே மாதிரியாகத்தான்
காட்சியளிக்கும். ஆனால் சந்திரனை ஆழ்ந்து கவனித்து வருபவர்கள் அதனைப் பார்த்தே
தேதியை துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். ஏனெனில் தினமும் சந்திரன் ஒரே நிலையில்
காட்சியளிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் அதில் மாற்றம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
சாதாரணமாக அதனைக் காண்பவர்கள் கூட அதன் தேய்பிறை, வளர்பிறை, அமாவாசை, பெளர்ணமி போன்ற நிலைகளை வைத்து ஓரளவு அதன் தேதியைக் கூறிவிடுவார்கள்.
சூரிய ஆண்டின் 12 மாதங்களும் மனிதர்களால்
ஏற்படுத்தப்பட்டவையாகும். எனவே, அந்த மாதங்களுக்கு மக்கள் தங்களின் கடவுள்களின் பெயர்களை சூட்டியுள்ளார்கள்.
ஆனால் சந்திர ஆண்டின் மாதங்கள் படைத்த இறைவனால் உருவாக்கித் தரப்பட்டவையாகும்.
அதுவும் இன்று நேற்று உருவானதல்ல. உலகம் படைக்கப்பட்ட நாளிலேயே அவையும்
உருவாக்கப்பட்டுவிட்டது. இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.
إن عدة الشهور عند الله إثني عشر شهرا في كتاب الله. ........الخ
வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்கு) பன்னிரண்டு
மாதங்களாகும்.
(அல்குர்ஆன் 9:36)
28 முதல் 31 வரை வரும் சூரிய ஆண்டின் மாதங்கள் பலதடவை
மாறுதல்களுக்கு உள்ளாகி இறுதியில் தற்போதுள்ள அமைப்பைப் பெற்றுள்ளன. ஆனால் 29,30 நாட்களைக் கொண்டுள்ள சந்திர ஆண்டின் மாதங்கள்
ஆரம்பத்தில் இருந்தே இதே அமைப்பில் இருந்து வருகின்றன.
சந்திர ஆண்டின் முக்கியத்துவம்
---------------------------------------------------------
நமது மார்க்கத்தைப் பொறுத்தவரை தொழுகையின் நேரங்களைத் தெரிந்து கொள்வதற்கு
சூரிய ஆண்டுக்கணக்கு அவசியமாகும். தொழுகையன்றி மீதமுள்ள இதர கடமைகள் சந்திர
ஆண்டோடு தொடர்புடையவை.
ரமலான் நோன்பு, அரஃபா நோன்பு, ஆஷூரா நோன்பு, ஜகாத், ஹஜ், இஃதிகாப், குர்பானி, ஸதகத்துல் ஃபித்ர் போன்ற இபாதத்துகளை
நிறைவேற்றவும், லைலதுல்கத்ர், பராஅத் இரவுகளை அறியவும் இத்தா, குழந்தை பெறுதல், பெண் மறுமணம் புரிதல், பால் புகட்டுதல், பருவமடைதல் போன்றவற்றின் சட்டங்களுக்கும் சந்திர ஆண்டை அறிந்திருப்பது மிகவும்
அவசியமாகும்.
வேண்டுகோள்
------------------------
இன்று உலகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்திலும் சூரிய ஆண்டுக்கணக்கே பின்பற்றப்படுவதால் நாமும் அதனைப்
பயன்படுத்துவதில் தவறேதுமில்லை. என்றாலும் குறிப்பிட்ட நாட்கள் மற்றும்
மாதங்களுடன் தொடர்புடைய இபாதத்துகளை நிறைவேற்ற சந்திரஆண்டுக்கணக்கு அவசியம்
என்பதால் நாம் அதனைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது. இந்த சந்திரஆண்டை
முஸ்லிம்களாகிய நம்மைத் தவிர உலகில் வேறுயாரும் பயன்படுத்துவதில்லை. அப்படியிருக்க
நமக்காக அல்லாஹ் வகுத்துத்தந்த இந்த ஆண்டுக்கணக்கை தெரிந்து கொள்ளாமல் நாம்
அலட்சியமாக இருப்பது முறையல்ல, வெறும் திருமண அழைப்பிதழ்களில் இதனை அச்சிடுவதோடு நாம் நிறுத்தி விடாமல்
எப்போதும் இதனை நினைவில் வைத்துக்கொண்டு நாம் எழுதும் கடிதங்கள், சொந்த குறிப்புகள், டைரிக்குறிப்புகள் போன்றவற்றில் இந்த ஹிஜ்ரீ
ஆண்டையே குறிப்பிட வேண்டும். ஆங்கிலக் காலண்டரின் தேதியைக் குறிப்பிட்டாலும்
அதற்குக்கீழே இதன் தேதியையும் குறிப்பிடும் பழக்கத்தை உங்களுக்கு நீங்களே
கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.
மேலும் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுடைய பிறந்தநாளை ஹிஜ்ரீ வருடம், மாதம், நாளை தெளிவாக எழுதிவையுங்கள். பிற்காலத்தில் அது அவர்களுக்கு பேருதவியாக
இருக்கும். பிறரிடமும் சொல்லி இவ்வாறு செய்ய ஆர்வமூட்டுங்கள்.
ஹிஜ்ரீ ஆண்டை நினைவில் வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் பர்ளு கிஃபாயா என்று
மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் இது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தாகவும்
இருக்கிறது. எனவே இதன் மூலம் தேதிக்கணக்கை நாம் தெரிந்து கொள்வதோடு அதற்குரிய
நன்மைகளையும் நாம் அடைய முடியும்.
ஹிஜ்ரீ ஆண்டின் முக்கியத்துவத்தையும் அதனை தெரிந்து வைத்திருப்பதற்கு
கிடைக்கும் நன்மைகளையும் விளங்கி ரமலானில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் பிறை
பார்க்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஹிஜ்ரி ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றை எப்போதும் நினைவில் வைத்திருப்பதற்கும் அவற்றில் ஆற்ற வேண்டிய
கடமைகளை சரியாக நிறைவேற்றுவதற்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.