بسم الله الرحمن الرحيم
ஆலோசனை பெற்றிடுவோம்.
மனிதனின் வாழ்வில் ஏற்படும் பல தருணங்களில்
அவன் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறும் தருணங்களும் உண்டு.
குறிப்பிட்டதொரு காரியத்தைச் செய்யலாமா
வேண்டாமா? குறிப்பிட்ட வேலையை எப்படி செய்ய வேண்டும்?
இவை போன்ற சந்தர்ப்பத்தில் கண்மணி நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் நமக்கு இரண்டு வழிமுறையை காட்டித் தந்துள்ளார்கள்.
ஒன்று இஸ்திகாரா அல்லாஹ்விடம் அதனை
ஒப்படைத்து அவனது நாட்டப்படி செயல்படுவது.
மற்றொன்று மஷ்வரா,மனிதர்களிடம் அதனை எடுத்துக்கூறி அவர்களின் ஆலோசனையின்படி செயல்படுவது.
ஒரு சிக்கலான பிரச்சனையில் பிறருடைய
கருத்துகளை கேட்டுப் பெற்றால் யாருடைய சிந்தனையிலாவது
அந்த சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கலாம் . அவ்வாறின்றி எனக்கு எல்லாம் தெரியும்
அடுத்தவரிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணி தன்னிச்சையானபோக்கை
மேற்கொண்டால் பல நேரங்களில் சிக்கலுக்கு தீர்வு காண முடியாமல் போய்விடலாம்.
அடுத்தவர்களின் சிந்தனையில் உருவாகும் நல்ல யோசனைகளை பயன்படுத்திக் கொள்வதற்கான
வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
ஆலோசனை செய்து செயல்படுவதின் அவசியத்தை
உணர்த்தும் வகையில் திருமறையின்
42-வது
அத்தியாயத்தின் பெயரை அஷ் ஷூரா-ஆலோசனை என்று அல்லாஹ் சூட்டியுள்ளான்.
அதில் முஃமின்களின் பண்புகளை விவரித்து
வரும்போது ,
وَالَّذِيْنَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ
وَاَقَامُوْا الصَّلٰوةَ وَاَمْرُهُمْ شُوْرٰى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنٰهُمْ
يُنْفِقُوْنَ
மேலும், அவர்கள் தங்கள்
இறைவனின் கட்டளையை ஏற்றுக் கொள்கின்றார்கள். தொழுகையை நிலைநாட்டுகின்றார்கள்.
மேலும், அவர்கள் தங்களின் செயல்களை ஒருவருக்கொருவர்
ஆலோசனை செய்து நடத்துகின்றார்கள். மேலும், நாம்
அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 42:38) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ما ندم من استشار و ما خاب من استخار
ஆலோசனை தேடுபவன் வருத்தம் அடைவதில்லை
இஸ்திகாரா செய்பவன் நஷ்டம் அடைவதில்லை என பெருமானார் (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
மற்றொரு ஹதீஸில் எவர் ஒரு காரியத்தை செய்ய
நாடி அது தொடர்பாக கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருகிறாரோ அவருக்கு
அல்லாஹ்விடமிருந்து சரியான திசை காட்டப்படும் என்று கூறியுள்ளார்கள். ஹதீஸ்
அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி )நூல் பைஹகீ.
ஆலோசனை செய்வது மக்களிடையே இணக்கத்தை
உண்டாக்கும்.அறிவை மேம்படுத்தும். நல்ல முடிவு எடுக்க உதவும் என்று அல்லாமா
இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
ஆலோசனை செய்வதன் ஒழுக்கங்கள்.
ஒவ்வொரு காரியத்தையும் சரியாக செய்வதற்கான
சில ஒழுக்க முறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றிச் செய்யும்போது அவை
சீர்பெறுகின்றன. அவற்றை கடைபிடிக்காது செய்தால் சீர் குலைந்து போய் விடுகின்றன.
எனவே ஆலோசனை செய்வதற்கு மார்க்கம் வழங்கியுள்ள ஆலோசனைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.
1. எந்த
காரியத்தைப்பற்றி நாம் ஆலோசனை பெற விரும்புகிறோமோ அதனைப்பற்றி தெளிவான அறிவு
உள்ளவர்கள் இடமே ஆலோசனை கேட்க வேண்டும். அதைப்பற்றி அறிவு இல்லாதவர்கள் இடம்
கேட்டால் சரியான ஆலோசனை அவர்களால் தர இயலாது. கேட்டதற்காக
அவர்கள் எதையாவது கூறி அதனை நாம் செயல்படுத்தினால் நன்மைக்கு பதிலாக தீமையே
விளையும்.
எனவே ஆலோசனை கோரப்படுபவர் ஞானம் உள்ளவராக
இருத்தல் அவசியம். வியாபாரம் செய்வதைப்பற்றி மருத்துவரிடமும் மருத்துவம் தொடர்பாக
இன்ஜினியரிடமும் கேட்டால் அவர்கள் எவ்வாறு ஆலோசனை சொல்ல முடியும் ?
மார்க்க விஷயங்களில் சட்டங்களை கேட்பதாக
இருந்தால் ஆலிமிடத்திலோ அல்லது சரியான மார்க்க அறிவு உள்ள வரிடத்திலோ கேட்க
வேண்டும் . மார்க்க அறிவு இல்லாதவர்களிடம் கேட்டு
அவர்களின் கருத்தை செயல்படுத்தினால் உலக விஷயங்களில் ஏற்படும் நஷ்டத்தை விட
மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
2. எந்த விஷயம்
தொடர்பாக குர்ஆன் அல்லது ஹதீஸில் தெளிவான ஒரு முடிவு அறிவிக்கப்படவில்லையோ அத்தகைய
விஷயங்களில் தான் ஆலோசனை செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் அல்லாஹ்வோ அவன் தூதரோ
கடமையாக்கிய அல்லது தடுத்த விஷயங்களில் ஆலோசனை செய்வது கூடாது.
உதாரணமாக தொழுகை தொழலாமா? ஸகாத் கொடுக்கலாமா? நோன்பு வைக்கலாமா? இதைப்பற்றியெல்லாம் ஆலோசனை கேட்பது கூடாது .
ஏனெனில் இவை கட்டாய கடமைகளில் உள்ளது.அதே
சமயம் கடமைகளில் மார்க்கம் சில சலுகைகளை வழங்கி இருக்கும் பட்சத்தில் அது பற்றிய
ஆலோசனைக்கு அனுமதி உண்டு.
உதாரணமாக பயணத்தில் நோன்பு வைப்பது.
3. ஆலோசனை
கோரப்படுபவர் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும்.அமானிதம் பேணுபவராக இருக்க
வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
المستشار مؤتمن اذا استشير فليشره بما هو صانع
لنفسه
எவரிடம் ஆலோசனை தேடப்படுகிறதோ அவர்
நம்பிக்கைக்கு உரியவர் ஆவார்.எனவே அவர் தனது விஷயத்தில் எவ்வாறு செயல்படுவாரோ
அவ்வாறே பிறருக்கும் ஆலோசனை கூறட்டும்.
ஹதீஸ் அறிவிப்பாளர் அலி(ரலி)அவர்கள். நூல்
தப்ரானி.
அதாவது ஒருவரை நம்பிக்கையானவர் என்று கருதியே
அவரிடம் இன்னொருவர் ஆலோசனை கேட்கிறார். எனவே அவர் தனக்கொன்று பிறருக்கொன்று என
ஆலோசனை கூறக் கூடாது. மேலும் தன்னை நம்பி இரகசியமான விஷயங்களை கூறி ஆலோசனை
கேட்கலாம் எனவே அதனை அவர் பரப்பி விடக்கூடாது.
4. மார்க்க
விஷயங்களில் ஆலோசனை செய்யும் போது தீன் பற்றுள்ளவர்களிடமே செய்ய வேண்டும் .
ஏனெனில் அல்லாஹுத்தஆலா முஃமின்களின் பண்புகளில் ஆலோசனை செய்தல் என்பதையும்
குறிப்பிடுகிறான்.
அதை குறிப்பிடும் போது பாவத்தை விட்டு
முழுக்க விலகியிருத்தல், இறைவனுக்கு கட்டுப்படுதல், தொழுகையை நிறைவேற்றுதல் போன்றதையும் சேர்த்தே கூறியுள்ளான்.
எனவே அப்படிப்பட்டவர்களிடம் தான் தீன்
சார்ந்த ஆலோசனை கேட்க வேண்டும்.
5. நம்மிடம் ஆலோசனை
கேட்பவருக்கு எது நல்லதுஎன நம் உள்ளத்தில் படுகின்றதோ அதையே கூற வேண்டும். அதனை
கூறினால் அவர் வருத்தப்படுவார் அல்லது கோபப்படுவார் என்பதற்காக சரியான ஆலோசனை
கூறாது அவர்கள் சந்தோஷப்படும்படியான வேறொன்றை கூறக்கூடாது. அதனால் அவருக்கு பின்னால் பாதிப்பு ஏற்பட்டு விடலாம்.
6. ஆலோசனை கூறும்
போது தேவைப்பட்டால் புறம் பேசவும் அனுமதி உள்ளது.
உதாரணமாக தனது மகளுக்கு திருமணம் செய்ய
மாப்பிள்ளை பார்த்தவர் அவரின் குணங்கள் பற்றி நம்மிடம் விசாரிக்கிறார் என்றால் அவரிடம் நாம் கண்ட குணங்கள் அனைத்தையும் தெளிவாக கூறிட வேண்டும் . மாறாக
அவரிடம் உள்ள ஏதேனும் தீய குணத்தை மறைத்து விட்டால் திருமணத்திற்கு பின்பு அது
வெளிப்படும்போது அதனால் பெண்ணின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விடலாம்.ஆலோசனை
கேட்டவருக்கும் நம்மீதுபெரும் வருத்தம் உண்டாகும்.எனவே இதுபோன்ற சமயங்களில்
அவரிடம் உள்ள குறையை கூறுவது புறம் பேசுவதில் சேராது.
வரலாற்றில் ஒரு நிகழ்வு:
ﻓﻠﻤﺎ ﺣﻠﻠﺖ ﺫﻛﺮﺕ ﻟﻪ ﺃﻥ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ، ﻭﺃﺑﺎ
ﺟﻬﻢ ﺧﻄﺒﺎﻧﻲ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﻣﺎ ﺃﺑﻮ ﺟﻬﻢ، ﻓﻼ ﻳﻀﻊ ﻋﺼﺎﻩ ﻋﻦ
ﻋﺎﺗﻘﻪ، ﻭﺃﻣﺎ ﻣﻌﺎﻭﻳﺔ ﻓﺼﻌﻠﻮﻙ ﻻ ﻣﺎﻝ ﻟﻪ، اﻧﻜﺤﻲ ﺃﺳﺎﻣﺔ ﺑﻦ ﺯﻳﺪ» ﻓﻜﺮﻫﺘﻪ، ﺛﻢ ﻗﺎﻝ: «اﻧﻜﺤﻲ
ﺃﺳﺎﻣﺔ»، ﻓﻨﻜﺤﺘﻪ، ﻓﺠﻌﻞ اﻟﻠﻪ ﻓﻴﻪ
ﺧﻴﺮا، ﻭاﻏﺘﺒﻄﺖ ﺑﻪ
2953. ஃபாத்திமா
பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ....அவ்வாறே நான் (முத்தலாக்கிற்கான)
"இத்தா"வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
(வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும்
அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்" என்று
சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது
கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை;அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்" என்று
கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
"நீ உசாமாவை மணந்துகொள்" என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 18. மணவிலக்கு
7. ஆலோசனை பெற்றவர்
அந்த ஆலோசனை அவருக்கு பொருத்தமாகத் தெரிந்தால் செயல்படுத்தலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.அதனை கண்டிப்பாக ஏற்று நடக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை.அப்படி அவர் நடக்காவிடில் ஆலோசனை தந்தவர் அவர் மீது கோபப்படக்
கூடாது. ஆலோசனை தருவது நமது கடமை.தந்துவிட்டோம். அதன்படி நடப்பதும் நடக்காது
இருப்பதும் அவருடைய விருப்பம் என்று விட்டுவிட வேண்டும் .
இதற்கு எடுத்துக்காட்டாக,
ஆயிஷா அவர்களின் அடிமையான பரீரா(ரலி)
அவர்களின் சம்பவத்தைக் கூறலாம் .
கணவன் மனைவி இருவரும் அடிமையாக இருந்து
பின்பு மனைவி மட்டும் உரிமை விடப்பட்டு விட்டால் கல்யாண பந்தத்தை முறித்துக் கொள்ள அனுமதி உண்டு.
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ : لَوْ رَاجَعْتِهِ ، قَالَتْ : يَا رَسُولَ اللَّهِ ، تَأْمُرُنِي ؟
قَالَ : إِنَّمَا أَنَا أَشْفَعُ ، قَالَتْ : لَا حَاجَةَ لِي فِيهِ .
அவ்வாறு முறித்துக் கொள்ள விரும்பிய
பரீரா(ரலி) அவர்களை அவ்வாறு முறித்துக் கொள்ள வேண்டாம் என பெருமானார் (ஸல்)
அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அப்போது இது தங்களின் கட்டளையா ? ஆலோசனையா என்று பரீரா(ரலி) அவர்கள் கேட்க,இது ஆலோசனை தான்
என்று பெருமானார் கூறியதும் என்னால் அவரோடு வாழ முடியாது அவருடனான வாழ்க்கையை நான்
முறித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூற பெருமானாரும் அதனை ஏற்றுக்
கொண்டார்கள்.
ஹதீஸ் புகாரி 5283.
தமது ஆலோசனையை எடுத்துக் கொள்ளாததற்கு
பரீரா(ரலி) மீது கோபப்படவில்லை
அண்ணலாரும் ஆலோசனையும்
அண்ணல் நபி அவர்களுக்கு வஹி
வந்துகொண்டிருந்ததால் அல்லாஹ்வே நேரடியாக அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தான்.எனவே
பிறரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை . அப்படி
இருந்தும் ஸஹாபாக்களுடன் ஆலோசனை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான் . ஏனெனில்
ஆலோசனை செய்யும் பண்பை உம்மத்துக்கு கற்றுத் தருவதற்காகவும் தலைவராக உள்ளவர்
தன்னிச்சையாக செயல்படாமல் பொதுமக்களின்கருத்தை கேட்டு நடக்க வேண்டும்
என்பதற்காகவும் அதன் மூலம் அவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி
அடைந்து உற்சாகத்துடன் செயல்பட வழி பிறக்கும் என்பதற்காகவும் அல்லாஹ் இவ்வாறு
கட்டளையிட்டான்
وشاورهم في الأمر
(முக்கியமான
எல்லா) காரியங்களிலும் அவர்களிடம் கலந்து ஆலோசிப்பீராக (3:159) .
இந்த கட்டளைக்கிணங்க அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் தம் வாழ்நாளில் பல சந்தர்ப்பங்களில் ஸஹாபாக்களுடன் ஆலோசனை செய்து செயல்பட்டுள்ளார்கள்.
♻பத்ருப்
போருக்கு முன் அபூஸுஃப்யான் தலைமையிலான எதிரிகளின் வணிகக்குழுவை தடுக்க செல்வது
தொடர்பாக தம் தோழர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
♻ அப்போர்களத்துக்குச்
சென்று எங்கே முகாமிடுவது என்பது பற்றியும் ஆலோசனை கேட்டார்கள்.பத்ரில்
சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை என்ன செய்வது என்பது பற்றியும் ஆலோசித்தார்கள்.
♻ உஹூதுப்
போரின்போது நகருக்கு வெளியே சென்று எதிரிகளை
சந்திக்கலாமா அல்லது நகரிலேயே இருந்து போர் செய்யலாமா என்பது குறித்து யோசனை
கேட்டார்கள் .
♻ கந்தக் (அகழ்)
போரின்போது மதினாவை தாக்க வந்த எதிரிகளிடம் மதினாவில் விளையும் பழவகைகளில்
மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்து சமரச உடன்படிக்கை செய்து கொள்ளலாமா என்பது
பற்றியும் ஆலோசித்தார்கள்.
♻ ஹூதைபிய்யா
உடன்படிக்கை கையெழுத்தாகும் முன் எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவது பற்றி
ஆலோசித்தார்கள்.
♻ அதேபோல்
ஹூதைபிய்யா உடன்படிக்கை முடிந்து ஊர் திரும்புவதற்கு முன்பு தலையை சிரைத்து
இஹ்ராமை களைவதற்கு ஸஹாபாக்கள் சற்று தயக்கம் காட்டிய போது தமது மனைவி உம்மு ஸலமா
ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இது பற்றி ஆலோசனை கேட்டார்கள்.
இன்னும் பல்வேறு போர்க் காலங்களிலும் மற்ற
நேரங்களிலும் நபி அவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்யும் வழக்கம்
கொண்டிருந்தார்கள். அபூபக்கர்
சித்தீக், உமர் (ரழி)இருவருடன் அடிக்கடி ஆலோசனை செய்து
கொள்வார்கள். ஒரு சமயம் அவ்விருவரையும் நோக்கி இவ்வாறு கூறினார்கள். நீங்கள்
இருவரும் ஒரு யோசனையில் ஒருமித்த கருத்துகொண்டு விட்டால் அந்த யோசனையை நான்
புறக்கணிக்க மாட்டேன்.
அருமை சஹாபாக்கள் தங்களிடையே பல்வேறு
விஷயங்களில் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம்
வலியுறுத்தும் ஆட்சிமுறையே சூரா அடிப்படையில் அமையப் பெற்றதாக இருக்க வேண்டும்.
குடும்ப வாரிசு
முறையில் ஆட்சி பொறுப்புக்கு வருவதை இஸ்லாம் விரும்ப வில்லை . தங்களுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தக்கூடிய ஒருவரை மக்கள் ஒன்று கூடி ஆலோசித்து முடிவு
செய்ய வேண்டும்.அனைவரிடமும் கருத்து கேட்க வேண்டும் அனைவரிடமும் கருத்து கேட்க
முடியாத பட்சத்தில் ஒரு ஆலோசனைக்கமிட்டியை உருவாக்கி அவர்கள் தேர்ந்தெடுக்கும்
நபரை தலைவராக, ஆட்சியாளராக நியமிக்க வேண்டும் என்பதே
இஸ்லாமிய கோட்பாடாகும்.
ஆக சுருங்கக்கூறின் மார்க்க விஷயங்களிலும் உலக விஷயங்களிலும் தேவையான சமயத்தில் தகுதியானவர்களிடம் ஆலோசனை பெற்று
செயல்படுவதும் ஆலோசனை கோரப்படும்போது நல்ல பயன்மிக்க ஆலோசனைகளை கூறி
வழிகாட்டுவதும் முஃமின்களிடம் இருக்க வேண்டிய தலையாய பண்புகளாகும். அல்லாஹுத்தஆலா இப்பண்புகளின்படி நடப்பதற்கு நல்லருள் புரிவானாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.