சனி, 4 ஆகஸ்ட், 2018

புனித கஃபாவின் சிறப்பும் அமல்களும்



بسم الله الرحمن الرحيم
புனித கஃபாவின் சிறப்பும் அமல்களும்


واتموا الحج والعمرة لله
وليس للحجة المبرورة ثواب الا الجنة
....................................................................................
அல்லாஹு தஆலா ஒரு முஃமினுக்கு உலகத்தில் வழங்கும் பெரும் பாக்கியங்களில் ஒன்று அவனுடைய இல்லத்தை சென்று தரிசித்து வருவதாகும். அல்லாஹ்வின் மீது ஆழமான பிரியத்தை உள்ளத்தில் கொண்டுள்ள அவனுடைய அடியார்கள் அவனை நேரில் காண முடியாத நிலையில் அவனுடைய இல்லத்துக்குச் சென்று அதனை கண்குளிர கண்டு அதனை சுற்றி வலம் வந்து அவனிடம் மன்றாடும்போது அவனை நேரில் கண்டதுபோன்ற திருப்தியை அவர்கள் பெறுகிறார்கள்.

அல்லாஹ்வின் மீதுள்ள பிரியத்தை உண்மைப்படுத்தும் இடமாக அவனது இல்லமான கஃபத்துல்லாஹ் திகழ்கிறது. இவ்வருடம் அந்த புனித இடத்திற்குச் சென்று ஹஜ்ஜு செய்யும் பாக்கியம் பெற்ற நல்லடியார்கள் அந்த பயணத்துக்கு தயாராகி வரும் வேளையில் அந்த இறையில்லத்தைப் பற்றியும் அங்கு செய்ய வேண்டிய அமல்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

இறையில்லத்தின் கண்ணியத்தை முழுமையாக உணராமல் பல இலட்சங்களை செலவு செய்து அங்கு செல்லக்கூடிய சிலர் அங்கு கடை பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளுக்கு மாற்றமாக நடக்கக்கூடிய நிகழ்வுகளை பார்க்கும்போது மனம் வேதனையடைகிறது. எனவே அதனுடைய கண்ணியத்தை மனதில் பதியவைக்கும் விதமாக கஃபத்துல்லாஹ்வினுடைய அமைப்பைப் பற்றி சில குறிப்புகள் இங்கே தரப்படுகிறது.

கஃபத்துல்லாஹ்வின் அமைவிடம்
****************************
சஊதி அரேபியாவிலுள்ள ஹிஜாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள மக்கா என்ற மாநகரின் மையப்பகுதியில் தான் கஃபத்துல்லாஹ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் சஊதியின் மேற்குத்திசையில் செங்கடலிலிருந்து 70 மைல் தொலைவில் கடல்மட்டத்திலிருந்து 330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் தொப்புளாகவும் உலகின் மையப்பகுதியாகவும் இந்நகர் திகழ்கிறது. எகிப்து நாட்டின் தலைநகரமான கெய்ரோவிலுள்ள கெய்ரோ வானியல் மற்றும் மண்ணியல் ஆராய்ச்சி தேசியக் கழகம் டாக்டர் முஸ்லிம் சால்தூத் (Dr. Muslim Shaltout) அவர்களின் தலைமையில் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் மக்கா மாநகர் மிகச்சரியாக உலகின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கெய்ரோவிலிருந்து வெளிவரும் அரபு நாளிதழ் வெளியிட்டுள்ளது.

கஃபாவின் பெயர்கள்
***********************
அல்லாஹு தஆலா திருமறையில் கஃபத்துல்லாஹ்வுக்கு சூட்டியுள்ள பெயர்கள்.
அல்கஃபா (மாயிதா – 97)
அல்பைத் (ஆலஇம்ரான் – 96)
பைத்துல்லாஹ் (பகரா – 125)
அல்பைத்துல் ஹராம் (மாயிதா -97)
அல்பைத்துல் அதீக் (ஹஜ் – 29)
கிப்லா (பகரா -144)

கஃபத்துல்லாஹ்வை கட்டியவர்கள்
***********************
பூமியில் உயிரினங்கள் படைக்கப்படுவதற்கு முன் முழுவதும் நீரால் நிரம்பியிருந்தது. அதன் ஓரிடத்தில் நுரை தோன்றியது. பிறகு அது நாளடைவில் விரிந்து கொண்டே சென்று நிலமாக மாறியது. அந்த நுரை தோன்றிய இடத்தில்தான் கஃபத்துல்லாஹ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உலகில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே மலக்குகள் இவ்விடத்தில் கஃபத்துல்லாஹ்வை உருவாக்கி இறைவனை வணங்கி வந்தனர். அதன் பிறகு ஆதம் (அலை) அவர்கள் இதைக் கட்டினார்கள். மூன்றாவதாக அன்னாரின் மகனார் ஷீத் (அலை) அவர்கள் கட்டினார்கள். அதன்பிறகு நூஹ் (அலை) காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தில் கஃபத்துல்லாஹ் சேதமடைந்ததால் நபி இப்ராஹீம் (அலை) தம்மகனாரின் துணையோடு மீண்டும் அதை நிர்மாணித்தார்கள். ஐந்தாவதாக அமாலிகா என்ற குலத்தாரும் ஆறாவதாக ஜுர்ஹும் என்ற குலத்தாரும் கஃபாவைக் கட்டினார்கள். ஏழாவதாக நபி (ஸல்) அவர்களின் ஐந்தாம் தலைமுறை பாட்டனாரான குஸைஃ பின் கிலாப் என்பவர் கட்டினார்.

எட்டாவதாக நபியவர்கள் (ஸல்) நபிப்பட்டம் பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் அன்னாரின் முப்பத்தி ஐந்தாவது வயதில் குரைஷிகள் கஃபாவைக் கட்டினார்கள். ஒன்பதாவதாக நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) கட்டினார்கள். பத்தாவதாக கலீபா அப்துல் மலிக் பின் மர்வானின் காலத்தில் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யுசுஃப் என்பவர் கட்டினார்.

மேற்கூறப்பட்ட ஒவ்வொருவரும் கஃபாவை எத்தகைய அமைப்பில் கட்டினார்கள் அதற்கு முந்திய அதன் அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி வரலாற்று நூல்களில் தெரிந்துகொள்ளலாம்.

அதற்குப்பின் இன்றுவரை பல மராமத்துப் பணிகளும் விரிவாக்கங்களும் கஃபாவிலும் அதைச் சுற்றியுள்ள பள்ளியிலும் செய்யப்பட்டுள்ளன.

அமைப்பு
***********
கஃபா என்றாலே சதுர வடிவக் கட்டிடம் என்று பொருள் இது சதுர வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. கஃபத்துல்லாஹ்வின் மொத்த உயரம் ஐம்பத்து மூன்று அடி (14 மீட்டர்) ஆகும். நீளம் மேற்கில் நாற்பத்தைந்து அடி கிழக்கில் நாற்பத்தி ஒன்பது அடி வடக்கிலும் தெற்கிலும் முப்பத்தி ஒரு அடி. இதன் தென்கிழக்கு மூலைக்கு ருக்னுல் ஹிந்த் என்றும் வடகிழக்கு மூலைக்கு ருக்னுல் இராக்கி எனவும் தென்மேற்கு மூலைக்கு ருக்னுல் யமானி எனவும் வடமேற்கு மூலைக்கு ருக்னுஷ்ஷாமி எனவும் கூறப்படுகிறது. இதன் தென்கிழக்கு மூலையில் தவாஃப் செய்யும் இடத்திலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் வெள்ளி வளையத்திற்குள் ஹஜருல் அஸ்வத் என்ற சுவர்க்கத்திலிருந்து நபி ஆதம் (அலை) அவர்கள் கொண்டு வந்த கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்பவர்கள் இங்கிருந்துதான் தவாபை ஆரம்பிப்பார்கள். தவாஃபை முடிக்கும் இடமும் இதுதான். ஒரே கல்லாக இருந்த ஹஜருல் அஸ்வத் ஹிஜ்ரி 319 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் உடைந்து போய் தற்போது சிறியதும் பெரியதுமான எட்டுத் துண்டுகளாக காட்சியளிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
نزل الحجر الاسود من الجنة وهو اشد بياضا من اللبن فسودته خطايا بنى آدم (ترمذي)
ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கும்போது பாலை விட வெண்மையாக இருந்தது. மனிதர்களின் பாவங்கள் தான் அதனை கருமையடையச் செய்துவிட்டன.  நூல் :திர்மிதி

ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் தரையிலிருந்து 2.25 மீட்டர் உயரத்தில் கஃபாவின் உள்ளே நுழைவதற்காக வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அகலம் 1.90 மீட்டர். நீளம் 3.10 மீட்டர். இதன் கதவு முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.

13,420,000 சவூதி ரியால் செலவில் 280 கிலோ தங்கத்தால் இக்கதவு தயாரிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு மூன்று முறை இக்கதவு திறக்கப்பட்டு உள்பகுதி ஜம்ஜம் நீரால் கழுவி சுத்தம் செய்யப்படும். ஹஜருல் அஸ்வதுக்கும் வாயிலுக்கும் இடையிலுள்ள 4 அடி அகலமுள்ள சுவற்றிற்கு முல்தஜம் என்று பெயர். இந்த சுவற்றில் வலது கன்னத்தையும் நெஞ்சையும் பதித்து துஆச் செய்தால் அந்த துஆ கபூல் ஆகிவிடும். மக்காவிலுள்ள துஆ கபூலாகும் பதினைந்து இடங்களில் இவ்விடம் மிக விசேஷமானதாகும். எந்த ஒரு அடியார் இங்கே துஆ கேட்டாலும் அது ஒப்புக் கொள்ளப்படாமல் போவதில்லை என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

ருக்னே இராக்கி மற்றும் ருக்னே ஷாமி ஆகிய கஃபாவின் இரு மூலைகளுக்கும் எதிரில் அரை வட்ட வடிவில் 1.32 மீட்டர் உயரத்தில் உள்ள சுவருக்கு ஹதீம் என்று பெயர். இதற்கு ஹிஜ்ரே இஸ்மாயீல் என்றும் ஒரு பெயருண்டு. இச்சுவரின் சுற்றளவு 21.57 மீட்டர் நீளமாகும். ஆரம்பத்தில் இதுவும் கஃபாவின் உட்பகுதியாகத்தான் இருந்தது. குரைஷிகள் இதனைக்கட்டிய போது போதிய பணவசதி இல்லாத்தால் முன்பு இருந்த அளவைவிட அகலத்தில் ஆறரை முழத்தை குறைத்து விட்டனர். குறைக்கப்பட்ட அப்பகுதியும் கஃபாவில் சேர்ந்ததே என்பதை தெரிவிப்பதற்காக அரை வட்ட வடிவில் சிறிய மதில் சுவரை எழுப்பிவிட்டனர்.

இந்த ஹதீமுக்கு நேர் மேலே கஃபாவின் மீது விழும் மழை நீர் வடிவதற்காக ஒரு வடிகுழாய் பொருத்தப்பட்டுள்ளது. முன்பு வெள்ளியால் செய்யப்பட்டிருந்த இக்குழாய் இப்போது தங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மீஜாபுர் ரஹ்மத் என்று பெயர். இதன் கீழ் செய்யப்படும் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

கஃபாவின் மீது போர்த்தப்பட்டுள்ள கருப்பு நிறத் துணிக்கு கிஸ்வா என்று பெயர். நபி (ஸல்) அவர்களுக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எமன் நாட்டு மன்னர் துப்பவுல் அஸத் என்பவர் தான் முதன் முதலில் கஃபாவை போர்வையால் போர்த்தி கவுரவித்தார். அதன் பிறகு இன்று வரை அப்பழக்கம் தொடர்கிறது. இப்போது கஃபா மீது போர்த்தப்பட்டுள்ள கிஸ்வா, கருப்பு நிறமுள்ள 670 கிலோ எடை கொண்ட தரமான பட்டுத் துணியால் தயாரிக்கப்பட்டதாகும். இதன் மீது தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் திருக்குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்தியா உட்பட வெளிநாடுகளிலிருந்து தயாரித்துக் கொண்டுவரப்பட்ட இப்போர்வை தற்போது மக்காவிலேயே இதற்கென நிறுவப்பட்டுள்ள தொழிற்கூடத்தில் உருவாக்கப்படுகிறது. 200 வடிவமைப்பாளர்கள் எட்டு மாதங்களாக உழைத்து இதனை தயார் செய்கின்றனர். இப்போர்வையின் மதிப்பு 22 மில்லியன் சவூதி ரியால்களாகும். ஒவ்வொரு ஆண்டும் ஹாஜிகள் அனைவரும் அரஃபா மைதானத்தில் தங்கியிருக்கும் நாளான துல்ஹஜ் ஒன்பதாம் நாளன்று இப்போர்வை கஃபத்துல்லாஹ்வின் மீது அணிவிக்கப்படுகிறது. நாமெல்லாம் ஈதுடைய நாளில் புத்தாடையணிந்து மகிழ்வது போல கஃபாவும் ஈதுடைய நாளில் புத்தாடையுடன் காட்சியளிக்கிறது.

கஃபாவைச் சுற்றியுள்ள பள்ளிவாசலுக்கு ஹரம் ஷரீஃப் என்று பெயர். தற்போது இதன் உட்புற, வெளிப்புற தொழுகை இடங்களை உள்ளடக்கி இதன் பரப்பளவு 88.2 ஏக்கராகும். இப்பள்ளியில் தலா 89 மீட்டர் உயரம் கொண்ட ஒன்பது மினராக்களும் வெளியிலிருந்து உள்ளே வருவதற்காக 95 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. தரை தளத்தில் வழவழப்பான சலவைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. கஃபாவைச் சுற்றியுள்ள தவாஃப் செய்யும் இடத்திற்கு மதாஃப் என்று பெயர். இதில் ஒரு மணிநேரத்திற்கு 1,30,000 பேர் வரை தவாஃ.ப் செய்ய முடியும். ஒரே சமயத்தில் 8,20,000 பேர் தொழும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது, 60,000 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10,000 க்கும் மேற்பட்ட கேமராக்களும் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டுள்ளன.

கஃபாவின் சிறப்புகள்
***********************
அல்லாஹ் தன் திருமறையில் அவனுடைய இல்லமான கஃபாவைக் குறித்து கூறும் திருவசனங்கள்
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப்பட்டதில் நிச்சயமாக முதல் வீடாகிறது பக்கா (எனும் மக்கா) வில் உள்ளதுதான். அது பாக்கியம் பெற்றதாகவும் உலகத்தாருக்கு நேர்வழி காட்டுவதாகவும் இருக்கிறது. (3:96)

அதில் தெளிவான அத்தாட்சிகளும் மகாமே இப்ராஹீமும் இருக்கின்றன. எவர் அதில் நுழைகிறாரோ அவர் அச்சம் தீர்ந்தவராகிவிடுவார். (3:97)

குற்றம் செய்துவிட்டு அதில் நுழைந்தவரை அவராக வெளியே வரும்வரை தண்டிப்பது கூடாது. உள்ளே அவர் இருக்கும் வரை தண்டனையிலிருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
இன்னும் (கஃபா என்ற ஓரிறைவனை வணங்கும்) வீட்டை மனிதர்களுக்கு (அவர்கள்) ஒன்று கூடும் இடமாகவும் அபயமளிக்கும் இடமாகவும் நாம் ஆக்கினோம். (2:125)
(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்போது கஃபாவாகிய) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள். (2:150)

தொழுகையின்போது முன்னோக்கும் இடமாக (கிப்லாவாக) இதனை அல்லாஹ் ஆக்கியுள்ளான். நிலத்திலோ கடலிலோ ஆகாயத்திலோ எங்கு தொழுதாலும் இந்த திசையையே முன்னோக்கித் தொழவேண்டும்.

சங்கைப் பொருந்திய வீடாகிய கஃபாவையும் சங்கையான மாதத்தையும் (ஹத்யு என்னும்) பலிப்பிராணிகளையும் அடையாளமிடப்பட்ட பிராணிகளையும் மனிதர்களுக்கு (மார்க்க நெறிகளுக்கு) நிலைப்பாடாக அல்லாஹ் ஆக்கிவைத்துள்ளான். (5:97)

மக்கள் எதுவரை இந்த இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றிக்கொண்டும் பைத்துல்லாஹ்வின் திசையில் முன்னோக்கி தொழுது கொண்டும் இருப்பார்களோ அதுவரை தீனின் மீது நிலைத்திருப்பார்கள் என்று இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹதீஸில் வந்துள்ள சிறப்புகள்
***************************
அல்லாஹு தஆலாவின் புறத்திலிருந்து தினமும் 120 ரஹ்மத்துகள் பைத்துல்லாஹ்வின் மீது இறங்குகின்றன. அவற்றில் 60 தவாஃப் செய்பவர்கள் மீதும் 40 அங்கு தொழுபவர்களின் மீதும் 20 பைத்துல்லாஹ்வை பார்ப்பவர்களின் மீதும் இறங்குகின்றன. (பைஹகி)

எவர் ஐம்பது தடவைகள் கஃபாவை தவாஃப் செய்வாரோ அவர் அன்று பிறந்த குழந்தையைப் போன்று பாவங்களை விட்டும் பரிசுத்தமாகிவிடுகிறார். (திர்மிதி)

ருக்னுல் யமானியின் மூலையில் 70 மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்விடத்தில் துஆச் செய்பவர்களின் துஆக்களுக்கு ஆமீன் கூறுகின்றனர். (இப்னுமாஜா)

மக்கா முகர்ரமாவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில் தொழுபவர்களுக்கு ஒரு இலட்சம் தொழுகைகளின் நன்மை கிடைக்கும். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) (இப்னு மாஜா)

மேலும் நன்மையை நாடி பயணம் செய்யப்படும் மூன்று பள்ளிகளில் முதலாவது பள்ளியாக கஃபாவின் பள்ளி இருக்கிறது. இங்கு யுத்தம் செய்வது வேட்டையாடுவது, மரம், புற்களை வெட்டுவது கூடாது என்றும் கஃபாவைப்  பார்த்தவுடன் கேட்கும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அது அமைந்துள்ள இவ்வூரில் முஸ்லிமல்லாதவர்கள் நுழையக்கூடாது என்றும் தஜ்ஜால் இவ்வூரில் நுழையாமல் மலக்குகள் பாதுகாப்பார்கள் என்றும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வுலகிலுள்ள ஊர்களிலேயே தனக்கு மிகவும் பிரியமான ஊர் என்று இதனை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

உலகிலேயே மனிதர்கள் சுற்றி வருவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே கட்டிடம் கஃபத்துல்லாஹ் மட்டும்தான். வேறு எந்த கட்டிடத்திற்கோ மற்ற பொருட்களுக்கோ இந்தச் சிறப்பு கொடுக்கப்படவில்லை.

சலவை இயந்திரத்தில் போடப்பட்ட துணிகள் அதனைச் சுற்றி வரும்போது அழுக்குகள் நீங்கி தூய்மையடைவது போல இறைவனின் இல்லமான கஃபாவைச் சுற்றி வருவோரின் பாவங்களனைத்தும்  நீங்கி விடுகின்றன.

ஒவ்வொரு நற்காரியத்தையும் வலது பக்கமாக துவக்கச் சொல்லும் இஸ்லாம் மிக உயர்ந்த கடமையான தவாஃபை இடது பக்கமாக துவக்கச் சொன்னதன் மூலம் சந்திரன் பூமியையும், சந்திரன், பூமி இரண்டும் சூரியனையும், கோள்கள் அனைத்தும் சூரியனையும் உடலின் இரத்த ஓட்டமும் எலக்ட்ரான் மின் அணுக்களும் இடப்பக்கமாகவே சுற்றுகின்றன என்ற விதியில் மனிதர்களையும் பிணைத்து அவர்களை பிரபஞ்சத்தோடு கலந்திடச் செய்கிறது.

தொழுகை நேரங்கள் நீங்கலாக இரவிலும் பகலிலும் மனிதர்கள் கஃபாவை வலம் வந்து கொண்டே இருக்கின்றனர். தொழுகை நடக்கும் நேரங்களில் கூட மலக்குகள் கஃபாவை தவாஃப் செய்கிறார்கள்.

அல்லாஹ் தஆலா பூமிக்கு எந்த மலக்கை அனுப்பினாலும் அவர் நேராக கஃபத்துல்லாஹ்வுக்கு வந்து அதனை தவாஃப் செய்து இரண்டு ரக்அத் தொழுத பின்னரே தனது வேலையில் ஈடுபடுகிறார் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் கஃபாவைச் சுற்றி இறைவணக்க வழிபாடுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

ஒருமுறை கஃபாவை வந்து தரிசிப்பவர்கள் அதன் மீது திருப்தியடையாமல் மீண்டும் மீண்டும் காண ஆவலுறுகின்றனர். எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பைத் தராது ஆவலைத் தூண்டுகின்ற ஆலயமாக இருக்கிறது. கஃபாவின் சிறப்புக்களைப் போன்றே கஃபாவுக்கருகிலும் சற்றுத் தொலைவிலும் அமைந்துள்ள மகாமே இப்றாஹீம், ஜம்ஜம் கிணறு, ஸ.ஃபா, மர்வா மலைக்குன்றுகள், மினா, அரஃபாத் முஜ்தலிஃபா, ஹிரா மற்றும் தௌர் குகைகள், ஹுதைபிய்யா போன்ற இடங்கள் பாரம்பர்யமிக்க வரலாற்றுச் சிறப்புகள் கொண்டவையாகும். ஹஜ்ஜுக்கு வரும் ஹாஜிகள் ஹஜ்ஜுடைய அமல்களைப் பூர்த்தி செய்வதோடு மக்காவிலுள்ள ஆவரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் கண்டு செல்கிறார்கள்.அல்லாஹூ தஆலா அந்தப் புனித இடங்களுக்குச்சென்று ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுகின்ற நற்பாக்கியத்தை நம்மனைவருக்கும் தந்தருள்வானாக!ஆமீன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.